Car Budget Tips பணம் என்ன மரத்துலயா காய்குது? உஷாரா பட்ஜெட் போடுறது எப்படித் தெரியுமா?
பெரும்பாலான மனிதர்களுக்கு வாழ்நாளில் 2வது மிகப்பெரிய கனவு கார் வாங்குவது தான். சொந்தமாக ஒரு வீட்டை வாங்க வேண்டும், அடுத்ததாக கார் வாங்க வேண்டும் இவை இரண்டும் தான் பெரும் கனவாக இருக்கிறது. இதில் காரை வாங்கும் போது நாம் எப்படி காரை தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தான் இங்கே காணப்போகிறோம்.
நீங்கள் கார் வாங்கப்போகிறீர்கள் என முடிவு செய்துவிட்டால் முதலில் நீங்கள் யோசிக்க வேண்டியது உங்கள் பட்ஜெட் தான். இதற்குப் பதில் பல அமைப்புகளைக் கணக்கிட்டுத் தான் முடிவு செய்ய வேண்டும். உங்கள் வருமானம் எவ்வளவு, எப்படி வருமானம் வருகிறது. உங்கள் வருமானத்திற்கும் நீங்கள் விரும்பும் காருக்கும் ஒத்து வருமா என் எல்லாம் பார்க்க வேண்டும்.

இப்படியாக புதிய கார் வாங்கும் போது நாம் கவனிக்க வேண்டிய விஷயங்களை இங்கே உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளோம். வாருங்கள் ஒவ்வொன்றாகக் காணலாம்.
1. பட்ஜெட்: நீங்கள் புதிய காரை வாங்க நினைக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு ஒரே விதி நீங்கள் ஆண்டிற்கு எவ்வளவு பணம் சம்பாதிக்கிறீர்களோ அதில் பாதிதான் உங்கள் காரின் விலையாக இருக்க வேண்டும். அப்பொழுது தன் கார் உங்கள் பைனான்ஸில் மிகப்பெரிய பிரச்சனையாகப் பிற்காலங்களில் வந்து நிற்காது.
2. இஎம்ஐ திட்டம்: பலர் முழு பணத்தைக் கட்டாமல் இஎம்ஐ மூலம் கார் வாங்க நினைப்பார்கள். நீங்கள் அப்படி கார் வாங்க யோசித்தால் ஒரே விதிதான், 20/4/10 என்ற விதியை தான் நீங்கள் பின்பற்றவேண்டும். இதில் 20 என்பது ஒட்டு மொத்த கார் விலையில் 20 சதவீதத்தை நீங்கள் முன்பணமாகச் செலுத்த வேண்டும். 4 ஆண்டிற்குள் இஎம்ஐ முடியும்படி இருக்கவேண்டும். உங்கள் மாத வருமானத்தில் வெறும் 10 சதவீதம் தான் கார் இஎம்ஐஆக செலுத்த வேண்டும்.

3. பெஸ்ட் கார்: கார் வாங்கும் முன்னர் பலர் செய்யும் தவறு தனக்கு எந்த விதமான கார் வேண்டும் என்பதைச் சரியாகத் தேர்வு செய்யாமல் விடுவது தான். 4 பேர் கொண்ட குடும்பம் என்றால் ஹேட்ச்பேக் கார் போதுமானது. குடும்பத்துடன் வெளியூர் செல்பவராக இருந்தால் எஸ்யூவி சிறந்தது. இதுவே கூட்டுக் குடும்பமாக இருந்தால் எம்பிவி காரை தேர்வு செய்யலாம்.
4. சொகுசு vs சேமிப்பு: பலர் கார் வாங்கும் கனவுடன் இருக்கும் போது சிலர் ஆன்லைனிலும் விளம்பரங்களிலும் பல சொகுசான கார்களை பார்த்துவிட்டு அதன்மீது ஆசைப்பட்டு வாங்க துடிக்கின்றனர். பொதுவாக கார் மார்கெட்டில் சொகுசான கார், மற்றும் விலை குறைந்த கார் என இரண்டு வகை கார்கள் இருக்கிறது. சொகுசான காரின் பயன்பாட்டிலேயே விலை குறைந்த கார் இருக்கும். சொகுசு அம்சங்கள் கொண்ட கார் விலை அதிகமாக இருக்கும். உங்கள் பட்ஜெட் சொகுசு கார் வாங்கும் அளவிற்கு இருந்தால் பிரச்சனையில்லை. இல்லை என்றால் சொகுசு கார் மோகத்தில் பணத்தைச் செலவு செய்து கடனாளியாகிவிடாதீர்கள்.

5. மதிப்பிழக்கும் சொத்து: ஒரு கார் என்பது மதிப்பை நாளாக நாளாக இழக்கும் சொத்து. ஒரு காரை நீங்கள் வாங்கி ரோட்டிற்கு எடுத்துவிட்டாலே அதன் மதிப்பு 5 சதவீதம் குறைந்துவிடும். அதன் பின்னர் அடுத்த 5 ஆண்டுகளில் உங்கள் காரின் மதிப்பு 50 சதவீதம் குறைந்துவிடும். இதனால் உங்கள் வாழ்நாள் சேமிப்பை காரில் செலவு செய்து பணத்தை இழந்துவிடாதீர்கள்.
6. காருக்காக நீங்கள் கொடுக்கும் விலை: ஒரு கார் என்பது அதை வாங்கும் போது நமக்குச் சொல்லப்படும் ஆன்ரோடு விலை மட்டும் காரின் விலை அல்ல அதன் பின்னர் இஎம்ஐ மூலம் வாங்கினால் அதற்குக் கட்ட வேண்டிய வட்டி, அதன் பின்னர் காரின் பராமரிப்பு செலவு, ரிப்பேர் செலவு, பெட்ரோல்/டீசல் செலவு, இன்சூரன்ஸ் செலவு என அனைத்தும் கணக்கிட்டுப் பாருங்கள். பலர் இதைக் கணக்கிடாமல் புதிதாக கார் வாங்கிவிட்டு பின்னர் காரே வேண்டாம் என விற்பனை செய்த கதையெல்லாம் கூட இருக்கிறது.
7. டெக்னிக்கல் அம்சங்கள்: கார் ஏகப்பட்ட உதிரிபாகங்களை கொண்டு தயாரிக்கப்படும் ஒரு மிஷின் இதில் உள்ள உதிரிபாகங்களில் முக்கியமான பாகங்கள் வேலை செய்ய வில்லை என்றால் கார் ஸ்டார்ட் கூட ஆகாமல் போகலாம். இதனால் நீங்கள் வாங்க விரும்பும் காரின் உதிரிபாகங்கள் எல்லாம் கிடைக்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள். ஒரு வேளை நீங்கள் விரும்பிய கார் ரிப்பேர் ஆகி நிற்கும் போது உதிரி பாகம் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் எவ்வளவு செலவு செய்ய தயாராக இருந்தாலும் உங்கள் கார் ஸ்டார்ட் கூட செய்ய முடியாத நிலைக்கு செல்லும்.
8. புதிய காரா? பழைய காரா?: இன்று கார் வாங்க நினைக்கும் பலர் குறைவான பட்ஜெட்டை வைத்திருக்கின்றனர். அவர்கள் அளவிற்கு அதிகமாக கடன் வாங்கி புதிய காரை வாங்குவதை விட மார்கெட்டில் உள்ள பழைய பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்க முயற்சிக்கலாம். இதன் விலையும் குறைவாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த காராகவும் இருக்க வாய்ப்புள்ளது. ஆன்லைனில் தற்போது கார் வாங்க ஏகப்பட்ட தளங்கள் இருக்கிறது அதை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் வாங்க வேண்டும் என்பது வாழ்நாளில் நாம் எடுக்கும் முக்கியமான முடிவு ஒரு வீடு வாங்குவது போல கிடையாது. கார் நாளாக நாளாக அதன் மதிப்பை இழக்கும். அதற்குள் அது இழக்கும் மதிப்பை விட அதிலிருந்து நாம் பெறும் மதிப்பு அதிகமாக வேண்டும். இதை மனதில் வைத்து சரியாக கணக்கிட்டால் உங்கள் ஒரு பைசா கூட வீணாகாது. உங்கள் புதிய காருக்காக எங்கள் வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications









