காரை தயாரித்த நிறுவனம் கூறும் மைலேஜை மட்டும் ஏன் நம்மால் பெற முடிவதில்லை? இது பின்னாடி இவ்வளவு மேட்டரு இருக்கா
புதியதாக கார் வாங்கும்போது நம்மில் பெரும்பாலானோர் முக்கியமாக கவனிப்பது காரின் மைலேஜை தான். கார் உள்பட எந்தவொரு வாகனத்திலும் மைலேஜ் அளவானது சாலையின் தரம், டிரைவிங் ஸ்டைல் என பல்வேறு காரணிகளை சார்ந்தது. அப்படி இருக்கும்போது, புதியதாக வாங்கப்படும் காரின் மைலேஜை எவ்வாறு நிர்ணயிக்கிறார்கள் என்ற சந்தேகம் உங்களுக்குள் இருக்கலாம். 'க்ளைம்டு மைலேஜ்' எனப்படும் இந்த மைலேஜை எவ்வாறு அளவிடுகிறார்கள் என்பதை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வாகனங்களின் எரிபொருள் திறனை நிர்ணயிப்பதிலும், அதனை சரிப்பார்ப்பதிலும் ARAI எனப்படும் இந்திய ஆட்டோமொபைல் ஆராய்ச்சி சங்கத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாக விளங்குகிறது. மாடிஃபைடு இந்தியன் டிரைவிங் சைக்கிள் (MIDC) எனப்படும் சோதனை வழிமுறைகளை பின்பற்றி ஏ.ஆர்.ஏ.ஐ வழங்கும் வழிக்காட்டுதல்களை பின்பற்றியே கார் தயாரிப்பு நிறுவனங்கள் எந்தவொரு காரையும் வடிவமைக்கின்றன.

MIDC சோதனைகள் அனைத்தும் மூடிய பரப்பிற்குள் நடத்தப்படுகிறது. ஆனால், இந்த சோதனைகளுக்காக இந்தியாவின் நகர்புற சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் எவ்வாறு இருக்குமோ அச்சு அசலாக அதேபோன்றதான சூழல் எம்.ஐ.டி.சி சோதனைகள் நடத்தப்படும் இடத்தில் உள்ளன. புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், திரைப்பட ஷூட்டிங்கிற்காக செட் போடுவதை போன்றதே. ஆனால் திரைப்பட ஷூட்டிங்கில் நிறைய பொருட்கள் போலியானவைகளாக இருக்கும். ஆனால், எம்.ஐ.டி.சி-இல் அனைத்தும் உண்மையானவையாக உள்ளன.
நகர்புற போக்குவரத்து சூழல் எனும்போது நிறுத்தி, நிறுத்தி காரை இயக்கும் வகையில் செட்அப் இருக்கும். அதுவே நெடுஞ்சாலை சூழல் எனும்போது, சீரான வேகத்தில் காரை இயக்குவதற்கு ஏற்ற சூழல் இருக்கும். இந்த சோதனைகள் அனைத்தும் ஏறக்குறைய 20 நிமிடங்களில் முடிந்துவிடும். அதற்குள்ளாக, நகர்புற சூழலில் மற்றும் நெடுஞ்சாலை சூழலில் கார் எந்த அளவிற்கான மைலேஜை வழங்குகிறது என்பதை கணித்துவிடுவர். அதன்பின் கார் ஓர் ஆய்வக கூடத்திற்குள் கொண்டு செல்லப்படும்.

சாலையில் ஓய்வு நிலையில் இருக்கும் கார் அங்கிருந்து ஸ்டார்ட் ஆகி நகர்வதற்கு எவ்வளவு ஆற்றலை எடுத்து கொள்கிறது என்பதை பிரத்யேகமான சேசிஸ் டைனாமோ மீட்டரை கொண்டு அந்த ஆய்வக கூடத்தில் அளவிடுவர். இதை வைத்து, காரின் எரிபொருள் நுகர்வு திறனை கண்டறிந்து குறித்து வைத்து கொள்வர். இதன் பின்னர், அந்த குறிப்பிட்ட கார் எல்லா நேரங்களில் ஒரே மாதிரியான மைலேஜை வழங்குகிறதா என்பது சரிப்பார்க்கப்படும். இதற்காக காரின் மைலேஜ் பலமுறை அளவிடப்படும்.
ஒவ்வொரு முறையும் காரின் மைலேஜ் கணக்கிடும்போது அது வேறுப்படலாம். ஏனெனில் ஒரு வாகனத்தின் மைலேஜ் ஆனது பல்வேறு காரணிகளை சார்ந்தது என ஏற்கனவே கூறினோம் அல்லவா. இதனால் எத்தனை முறை மைலேஜ் சோதனை நடத்தப்படுகிறதோ அத்தனை முறையும் காரை சுற்றி நிலவும் வெப்பநிலை, ஈரப்பதம், டயர்களின் காற்றழுத்தம் மற்றும் காரின் எடை உள்ளிட்டவை அனைத்தும் ஒரே மாதிரியான அளவில் கடைப்பிடிக்கப்படும். இருப்பினும், காரின் மைலேஜ் அளவுகள் மிக மிக குறைந்த அளவில் வித்தியாசப்படும்.

இன்னும் சொல்லப்போனால், .0 அளவுகளில் தான் வித்தியாசப்படும். இருப்பினும் எந்தவொரு புள்ளி விபரத்தையும் அலட்சியப்படுத்தக் கூடாது என்பதற்காக அவற்றையும் கணக்கிட்டு, இறுதியாக அவற்றின் சராசரியை குறித்து வைத்து கொள்வர். MIDC-இல் இவ்வளவு துல்லியமாக காரின் மைலேஜ் அளவுகளை கண்டறிந்தாலும், அவை ஓர் மூடிய சோதனை களத்தில் கண்டறியப்பட்டவை என்பதால், இறுதியாக அந்த மைலேஜ் அளவுகளை நிஜ உலக மைலேஜ் அளவுக்கு ஏற்ப சிறிது அட்ஜெஸ்ட் செய்து கொள்வர்.
இந்த அட்ஜெஸ்ட்மெண்ட் ஒன்றும் கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்படுபவை கிடையாது. இதற்காக ARAI அமைப்பானது வாகனங்களின் தினசரி எரிபொருள் திறனை அளவிட்டு, அதன் மூலம் ஒரு டேடாவை உருவாக்கி வைத்துள்ளது. அதாவது, இந்தியாவில் சராசரியாக எந்த அளவிற்கு போக்குவரத்து நெரிசல் நிகழ்கிறது, வெப்ப நிலை எவ்வாறு உள்ளது மற்றும் மக்களின் டிரைவிங் ஸ்டைல் எவ்வாறு உள்ளது உள்ளிட்டவை அடங்கியவையே அந்த டேடா ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு பல்வேறு கருவிகள், டேடாக்களை கொண்டு ஒரு காரின் 'க்ளைம்டு மைலேஜ்'-ஐ கண்டறிந்தாலும், அதனை நிஜ உலக மைலேஜாக பார்க்க முடியாது. அதாவது, பிறக்க போகும் ஒரு குழந்தையின் தோற்றம் இவ்வாறு தான் இருக்கும் என தொழிற்நுட்ப கருவிகளை கொண்டு ஓரளவிற்கு யூகிக்க தான் முடியுமே தவிர்த்து, பிறந்த பின்பே அந்த குழந்தையின் தோற்றத்தை உறுதிப்படுத்த முடியும். ஆதலால், க்ளைம்டு மைலேஜுக்கு எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது, அதனை ஒரு பரிந்துரையாகவே எடுத்து கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications









