மலை பாதைகளில் தான் ஆபத்துகளும் இருக்கு... கார் ஓட்டும்போது நிறைய பேர் இதை ஃபாலோ பண்றது இல்லை!!
தினசரி அலுவலக பணிகளில் இருந்து தப்பிக்க மலைப்பகுதிகளுக்கு சுற்றுலா செல்வது சிறந்த யோசனை ஆகும். மலைப்பாதைகளில் வாகனங்களை ஓட்டி செல்வது எந்த அளவிற்கு ஜாலியானதோ அந்த அளவிற்கு அதில் ஆபத்துகளும் நிறைந்துள்ளன என்பதை மறவாதீர்கள். இத்தகைய பயணங்களில் நாம் செய்யும் ஒரு சிறிய தவறு கூட பெரிய இழப்புகளை ஏற்படுத்தக்கூடும். தினந்தோறும் மலை பயணங்களை மேற்கொள்பவர்கள் தங்களது அனுபவத்தால் டிரைவிங்கில் கைத்தேர்ந்தவர்களாக இருப்பர். எப்போதாவது ஒருமுறை மலை பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு தான் பிரச்சனையே. அத்தகையவர்கள் இந்த 4 அடிப்படை விஷயங்களை கட்டாயமாக பின்பற்றவும்.
காரை பரிசோதிக்கவும்: ஏற்றமும், இறக்கமுமான மலைப்பாதைகளில் செல்லவுள்ளீர்கள் என்றால், கார் அந்த அளவிற்கு அதிக வேலை செய்ய உள்ளது என்று அர்த்தம். ஆக, காரில் ஏற்கனவே இருக்கும் சிறு, சிறு பிரச்சனைகள் கூட இவ்வாறான பயணத்தின்போது பெரிய பிரச்சனையாக மாறி சிரமத்தை கொடுக்கக்கூடும். ஆகவே, மலை பயணங்களை மேற்கொள்வதற்கு முன்னர் காரை ஒருமுறை சர்வீஸ் செய்துவிடுவது நல்லது.

காரை முழுவதுமாக தரமானதாக மாற்ற முடியாவிடினும், குறைந்தப்பட்சம் காரின் பிரேக்குகள், HVAC, விண்ட்ஷீல்டு வைபர்கள், பேட்டரி உள்ளிட்டவற்றை சரிப்பார்த்துக் கொள்வது நல்லது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, காரின் டயர்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை சரிப்பார்க்கவும். அதேபோல், ஸ்பேர் சக்கரத்தையும் தரமானதாக கொண்டு செல்லவும். டயர்களில் காற்றின் அளவை கார் நிறுவனம் பரிந்துரைத்த அளவில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
ஓவர்டேக்கிங் வேண்டாம்: பொதுவாகவே, மலைப்பாதைகள் வளைவுகள் நிறைந்ததாக இருக்கும். சில வளைவுகளுக்கு அந்த பக்கம் அதாள பாதாளம் கூட இருக்கலாம். அதேபோல், நிறைய இடங்களில் மலை சாலைகள் அகலமானதாக இல்லாமல், குறுகலானதாக இருக்கும். ஆதலால், வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக முன்னால் செல்லும் வாகனங்களை ஓவர்டேக் செய்தப்படி செல்ல வேண்டாம்.
மலைப்பாதைகளில் முடிந்தவரையில் ஓவர்டேக்கிங்கே வேண்டாம். முன்னால் செல்லும் வாகனம் மிகவும் மெதுவாக சென்றால் மட்டுமே முறையான எச்சரிக்கைகளை வழங்கிய பின்பு அந்த வாகனத்தை ஓவர்டேக் செய்யவும். ஒன்றிற்கு மேற்பட்ட வாகனங்களை ஓவர்டேக் செய்ய வேண்டாம். அதேபோல், சாலை வளைவுகளில் ஓவர்டேக் செய்வதை முற்றிலுமாக மறந்துவிடுங்கள்.

பாதையில் இருந்து விலகாதீர்: ஓவர்டேக்கிங் செய்யும்போது தவிர்த்து, மற்ற நேரங்களில் உங்களது கார்/ பைக்கை சாலையின் பாதையில் இருந்து விலகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இதை ஏன் கூறுகிறோம் என்றால்... மலைப்பாதைகளில் இயற்கை அழகு உங்களை கவர்ந்திழுக்கும். அந்த சமயத்தில் பார்வை சாலையில் இருந்து விலகும் என்பதால், உங்களது வாகனமும் சாலையின் லேனில் இருந்து விலக வாய்ப்புள்ளது.
2 லேன்களை கொண்ட சாலையாக இருந்தாலும், ஒரே லேனில் செல்ல முயற்சிக்கவும். ஏனெனில், உங்களுக்கு பின்னால் வரும் வாகன ஓட்டியும் அந்த இயற்கை அழகில் மயங்கியப்படி வரலாம். அதே சாலையில் எதிர் திசையிலும் வாகனங்கள் வருகின்றன என்றால், சாலையில் இன்னும் கூடுதல் கவனம் தேவை. இயற்கை அழகை ரசிக்க வேண்டுமென்றால், காரை சாலைக்கு வெளியே நிறுத்திவிடலாம் அல்லது காரை மிகவும் மெதுவாக ஓட்டியப்படி செல்லலாம்.
பிரேக்கில் கவனம் தேவை: மலைப்பாதைகளில் செல்லும்போது உங்களது வாகனத்தில் அதிகம் உழைக்கும் பாகம் என்றால் அது பிரேக் தான். ஏறுமுகமான சாலையில் ஏறும் போதும் சரி, இறக்கும்போதும் சரி வாகனத்தின் மொத்த எடையையும் அதுதான் தாங்கி நிற்க போகிறது. ஆதலால், அதனை தேவையான இடங்களில் மட்டும் பயன்படுத்தவும். இல்லையேல், அது விரைவாக தேய்ந்து போவதற்கு வாய்ப்புள்ளது.

இறங்குமுகமான சாலைகளில் இறங்கும்போது பிரேக்கை மென்மையாக பயன்படுத்தவும். சடர்ன் பிரேக்குகளை முற்றிலுமாக தவிர்த்துவிடுங்கள். சடர்ன் பிரேக்குகளை தவிர்க்க வேண்டுமெனில், உங்களது கவனம் முழுக்க சாலையில் இருக்க வேண்டியது அவசியமாகும். வளைவுகளில் மெதுவாக திரும்பவும். மலைப்பாதைகளில் வளைவுகளில் திரும்பும்போது வழக்கத்தை காட்டிலும் கொஞ்சம் முன்னதாகவே பிரேக் கொடுக்கவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சாதாரணமாக நகரத்திற்குள் கார்/ பைக் ஓட்டுவதற்கும், மலைப்பாதைகளில் ஓட்டுவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. மலை பயணங்களின் போது பின்பற்ற வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. அதில், முக்கியமான மற்றும் அடிப்படையான 4 விஷயங்களை மட்டும்தான் இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். இந்த டிப்ஸை சரியாக பின்பற்றினால், மலை பயணங்களும் ஜாலியானதாக இருக்கும்.


Click it and Unblock the Notifications









