கார் மெக்கானிக்குகள் பலர் இதை பற்றி கூற மாட்டார்கள்! எவ்வளவு பெரிய காருக்கும் இரத்த ஓட்டம் இதுதான்!
கார் மொத்தமும் ஒரு இயந்திரம் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டும் என்றில்லை. இந்த இயந்திரம் இயங்குவதற்கான இருதயமாக என்ஜின் (Engine) செயல்படுகிறது. கார் இயங்கும்போது அதிக உழைப்பது காரின் சக்கரங்களும், அவற்றில் பொருத்தப்பட்டிருக்கும் டயர்களும், சஸ்பென்ஷனும் தான் என நம்மில் நிறைய பேர் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், கார் என்று மட்டுமின்றி எந்தவொரு வாகனத்திலும் அதிகமாக உழைப்பது அதன் என்ஜின் ஆகும். இதனால்தான், கொஞ்சம் நேரம் இயங்கினாலே காரின் என்ஜின் சூடாகி விடுகிறது. இவ்வாறு சூடாகும் என்ஜின் சிஸ்டத்தை குளிர்விப்பது அவசியமான ஒன்றாகும்.
அதுவும் நம் இந்தியா போன்ற வெப்பமான நாட்டில் உடனுக்குடன் என்ஜினின் சூட்டை தணித்துவிட வேண்டியது அவசியமாகும். இதனாலேயே நம் நாட்டில் கார்களை விற்பனை செய்யும் கார் நிறுவனங்கள் காரின் என்ஜினின் சூட்டை தணிக்கும் குளிர்விப்பான்களில் (Coolant) கூடுதல் கவனம் செலுத்துக்கின்றன. இந்த என்ஜின் குளிர்விப்பான்கள் சில வகைகளில் உள்ளன.

அதாவது, ஹைப்ரீட் ஆர்கானிக் ஆசிட் டெக்னாலஜி (HOAT) கூலண்ட், இன்-ஆர்கானிக் ஆடிடீவ் டெக்னாலஜி (IAT) கூலண்ட் மற்றும் ஆர்கானிக் ஆசிட் டெக்னாலஜி (OAT) கூலண்ட் என்பன அந்த வகைகள் ஆகும். இதில் இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்படுவது, ஹைப்ரீட் ஆர்கானிக் ஆசிட் டெக்னாலஜி எனப்படும் HOAT ஆகும்.
மற்ற இரண்டை காட்டிலும் மேம்பட்டதாக, அதிக ஆயுட்காலத்தை வழங்கக்கூடியதாக, அரிப்புகளை தடுக்கக்கூடியதாக HOAT விளங்குகிறது. ஆனால், எத்தகைய தரமான என்ஜின் கூலண்ட் ஆக இருந்தாலும், அதனை அவ்வப்போது மாற்றுவது அவசியமான ஒன்றாகும். ஏனெனில், என்ஜின் இயங்க இயங்க அதனை குளிர்விக்கும் குளிர்விப்பானில் தூசி, துகள்கள் படிவது சகஜமானது.

அதுமட்டுமின்றி, சில நேரங்களில் கூலண்ட் என்ஜினின் சூட்டை தாக்குப் பிடிக்க முடியாமல் ஆவியாகுவதும் உண்டு. குறிப்பாக, கோடை காலங்களில் வெளியில் இருந்தும் வரும் வெப்பத்தினால் கூலண்ட் விரைவில் தீர்ந்து போகும் நிலை ஏற்படுகிறது. அவ்வாறு கூலண்ட் தீர்ந்து போக நேர்ந்தால், அப்படியே கார் ஓட்டுவது பல விதங்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.
ஏனெனில், என்ஜினின் கூலண்ட் ஆனது என்ஜினை குளிர்விப்பது மட்டுமின்றி இன்னும் சில வேலைகளையும் செய்கிறது. சூடாகும் என்ஜினை குளிர்வூட்டி, அதன் செயல்திறனை மேம்படுத்துவது மட்டும் தான் கூலண்ட்டின் முக்கியமான பணி என்றால், குளிர்ச்சியான நாடுகளில் என்ஜின் கூலண்ட்டின் தேவை இருக்காது அல்லவா...?
குளிர்ச்சியான நாடுகளிலும் என்ஜின் கூலண்டின் தேவை உள்ளது. ஏனெனில், அதீத குளிர்ச்சியினால் என்ஜின் பாகங்கள் உறைநிலைக்கு செல்வதை தடுக்கக்கூடிய வேலையை கூலண்ட் செய்கின்றன. அதுமட்டுமின்றி, கார் என்ஜின் அமைப்பில் பாகங்களுக்கு இடையேயான உராய்வுகளை குறைத்து அவை சேதமடைவதை தடுப்பதும் என்ஜின் கூலண்ட்டின் பணி ஆகும்.
இத்தகைய கூலண்ட்டை சிலர் தாங்களாகவே காருக்கு வழங்குவதை பார்க்க முடியும். ஆனால், அவ்வாறு எந்தவொரு முன் அனுபவமும் இல்லாமல் கூலண்ட்டை உருவாக்கி காருக்கு வழங்குவது நேரம் மற்றும் பணத்தை விரயமாக்க கூடியவை. பொதுவாகவே கார் என்ஜின் கூலண்ட்டில் எந்த சூழலிலும் உறைநிலையை எட்டாத பிரத்யேகமான திரவம் மற்றும் நீர் உள்ளது.
இவை இரண்டையும் சரியான கலவையில் கலப்பது முக்கியம். மேலும், இந்த கலவை விகிதமும் கார் மாடலை பொறுத்து மாறுப்பட கூடும். ஆதலால், அதற்கான போதுமான அறிவை பெற்ற மெக்கானிக்குகளிடம் கலந்தோசிப்பது அவசியம் ஆகும். ஏற்கனவே மிக்ஸிங் செய்யப்பட்ட கார் என்ஜின் கூலண்ட்டும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன.
அவற்றை பயன்படுத்துவதற்கு முன்னர் காருடன் வழங்கப்பட்ட கார் மேனுவல் புத்தகத்தில் எந்த அளவிற்கு எந்த மாதிரியான கூலண்ட் கொடுக்க வேண்டும் என்பதை ஒருமுறை சரிப்பார்த்துக் கொள்வது நல்லது. துருப்பிடித்தலை தடுக்க சில கூடுதலான விஷயங்களும் இன்றைய கால கூலண்ட்களில் கலக்கப்படுகின்றன. காரில் என்ஜின் கூலண்ட் தீர்ந்து போனால், அதுகுறித்த எச்சரிக்கை விளக்கு காருக்குள் டேஸ்போர்டில் மிளிரும்.
என்ஜினின் வெப்பநிலை அதிகமாக உள்ளதை ஸ்டேரிங் சக்கரத்துக்கு பின்னால் வழங்கப்படும் வெப்பமானியிலும் காணலாம். அதன்பின்பும் காரை ஓட்டினால் தான் பொனெட்டில் இருந்து புகை வருவது போன்றவை எல்லாம் நடக்கும். இது சில நேரங்களில் சரி செய்யவே முடியாத அல்லது அதிக செலவை இழுத்துவிடக் கூடிய பிரச்சனைக்கு வழிவகுக்கலாம்.
ஆனால், இன்றைய கால மாடர்ன் கார்களில் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுவதை அதிகமாக பார்க்க முடிவதில்லை. காரணம், கூலண்ட் தீர்ந்து என்ஜின் சிஸ்டம் அதிக வெப்பமடைந்தால் முன்னெச்சரிக்கையாக என்ஜினை தானாக ஆஃப் செய்து, காரை இயங்க விடாமல் செய்யும் தொழிற்நுட்பம் இன்றைய கால கார்களில் வழங்கப்படுகிறது.
பெட்ரோல்/ டீசலை போன்று என்ஜின் இயங்க இயங்க கூலண்ட்டும் குறையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். பெட்ரோல்/ டீசல் அளவிற்கு இல்லையென்றாலும், கொஞ்சம் மெதுவாக குறையும். கூலண்ட்டை குறைவாக வைத்துக் கொண்டு காரை இயக்கினால் காரின் என்ஜின் சிஸ்டத்திற்குள் துருப்பிடித்தல், அரித்தல் போன்றவ ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
புதியதாக கூலண்ட்டை கொடுக்கிறீர்கள் என்றால், அதற்குமுன் அங்கிருக்கும் பழைய கூலண்ட்டை முற்றிலுமாக அகற்ற வேண்டும். அதில் இருக்கும் அழுக்குடன் புதிய கூலண்ட்டை கலந்து பயன்படுத்துவது கூடாது. பழைய கூலண்ட்டை முற்றிலுமாக வழித்து எடுப்பதன் மூலம் என்ஜினையும், ரேடியேட்டர் (Radiator) சிஸ்டத்தையும் சுத்தம் செய்யலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மொத்தத்தில் என்ஜின் கூலண்ட் இல்லாமல் காரை ஓட்டுவது முற்றிலும் தவறாகும். முடிந்தவரையில், ஒவ்வொரு முறையும் பயணத்தை துவங்குவதற்கு முன்பு அல்லது பயணத்தை முடித்த பின்பு கூலண்ட்டின் அளவு எவ்வளவு உள்ளது என்பதை சரிப்பார்த்துக் கொள்வது நல்லது. முற்றிலும் தீரும் முன்பே கூலண்ட்டை மாற்றி விடவும்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கூலண்ட் இல்லாமல் கார் நின்றால், அருகில் உள்ள சர்வீஸ் செண்டரில் இருந்து ஆளை வரவழைத்து காரை பழுது பார்த்து சரிச்செய்து கொண்டு செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். கூலண்ட் இல்லாமல் கார் ஓட்டுவது காரின் மைலேஜையும் குறைக்கக் கூடும்.
அதுமட்டுமின்றி, என்ஜின் அதிக சூடாகினால் கூலண்ட்டை ஓட வைக்கும் நீர் பம்ப் செயல்படாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்சனை ஏற்பட்டால், கூலண்ட் இருந்தும் பயன்படுத்த முடியாத சூழலில் இருப்பீர்கள். இது எல்லாவற்றையும் விட முக்கியமாக, அடிக்கடி கூலண்ட் இல்லாமல் காரை ஓட்டுவது நிரந்தரமான என்ஜின் பழுதுகளுக்கு வழிவகுக்கக் கூடும் என்பதையும் மறவாதீர்கள்.


Click it and Unblock the Notifications








