கார் என்ஜினுக்கு பெருசா செலவுக்கு வரக்கூடாது என்றால்... சைலன்சர் குழாயில் கவனிக்க வேண்டிய அறிகுறிகள்!!
எந்தவொரு வாகனத்திற்கும் என்ஜின் தான் இதயம் போன்றது ஆகும். இதனாலோ என்னவோ... என்ஜினில் பாதிப்பு ஏற்பட்டாலே பெரும்பாலும் மிக பெரிய செலவில் சென்று முடிகிறது. இருப்பினும், சில கார் என்ஜின் பழுதுகளை உங்களால் முன்கூட்டியே கண்டறிய முடியும். அது எப்படி? எந்தெந்த அறிகுறிகளை வைத்து அதனை கண்டுப்பிடிக்கலாம் என்பதை இனி பார்க்கலாம்.
எக்ஸாஸ்ட் குழாயின் நிலை: எக்ஸாஸ்ட் குழாயில் இருந்து அவ்வப்போது வழக்கத்தை காட்டிலும் அதிக புகை வெளிவருகிறதா என்பதை கண்காணியுங்கள். எக்ஸாஸ்ட் குழாய் முனைகளில் நீர்த்துளிகள் ஏற்படுவது சாதாரண விஷயம் தான், பயப்பட வேண்டாம். ஆனால் புகை அதிகமாக வெளிவந்தால் நிச்சயம் மெக்கானிக்கிடம் காரை கொண்டு செல்ல வேண்டும். ஏனெனில் இன்றைய கால கார்கள் அதிக புகையை வெளிவிடுவதில்லை என்பதை மறந்துவிடாதீர்கள்.

புகையின் நிறம்: என்ஜினில் இருந்து எக்ஸாஸ்ட் குழாய் மூலம் வெளிவரும் புகையின் நிறத்தை வைத்து காரின் என்ஜினின் நிலையை தீர்மானிக்கலாம். நீல நிறத்தில் புகை வெளிவந்தால், என்ஜின் எரி குடுவைக்குள் ஆயிலும் சேர்ந்து எரிகிறது என்பது அர்த்தமாகும். இது பிஸ்டன் ரிங்குகள், வால்வு சீல்களை அல்லது பி.எஸ்.வி எனப்படும் பாஸிட்டீவ் கிரான்க்கேஸ் வெண்டிலேஷன் சிஸ்டத்தை பாதிக்கலாம்.
வெள்ளை நிறத்தில் புகை வெளிவந்தால், எரி குடுவைக்குள் என்ஜினை குளிர்படுத்தும் திரவம் அல்லது நீர் நுழைந்துவிட்டது என அறியலாம். அதாவது, மேற்கூறப்பட்ட திரவங்களில் ஒன்று சூடான சிலிண்டரின் தலைப்பகுதியில் படுவதால் வெள்ளை புகை உண்டாகும். கருப்பு நிறத்தில் புகை வந்தால், எரிபொருள் உடன் சுத்தமற்ற காற்று கலந்துள்ளது என சொல்ல வேண்டும். ஃப்யுல்-இன்ஜெக்டர் அல்லது ஏர் ஃபில்டர் பழுதாகினால் இவ்வாறு ஏற்படும்.

தேவையற்ற வாசனைகள்: காருக்குள் இருக்கும்போது தெரியாது, ஆனால் காருக்கு பின்னால் இருக்கும்போது எப்போதும் இல்லாத புதுமையான எரி வாசனை ஏதேனும் எக்ஸாஸ்ட் குழாயில் இருந்து வருகிறதா என்பதை அவ்வப்போது ஆராயவும். மிகவும் துர்நாற்றம் வீசினால் கேட்டலிடிக் கன்வெர்டர் பிரச்சனையாக இருக்கலாம். சில சமயங்களில் வாசனையான நறுமணம் கூட வரலாம். ஆனால் இதுவும் பிரச்சனையே. ஏனெனில் என்ஜினை குளிர்படுத்தும் திரவம் கசிந்தால் கூட இவ்வாறு உண்டாகும்.
துருக்கள் (அ) நெருப்பு: இதுவும் அரிதாக நடக்கக்கூடியது. கார் மிகவும் பழையது எனில், என்ஜின் பாகங்களின் துருக்கள் எக்ஸாஸ்ட் குழாய் வழியாக வெளியேறலாம். அதேபோல், ஸ்பார்க் பிளக்குகள் அல்லது இக்னிஷன் காயில் பழுதாகி இருந்தால், எக்ஸாஸ்ட் குழாயில் இருந்து நெருப்பு கூட வெளிவரலாம். ஆனால் ஏற்கனவே கூறியதுபோல், இது அரிதாக நடக்கக்கூடியது.

எக்ஸாஸ்ட் குழாயில் அடைப்பு: எக்ஸாஸ்ட் குழாயில் அதிகளவில் புகை வெளிவந்தாலும் பிரச்சனை, வெளிவராவிடினும் பிரச்சனை தான். என்ஜின் அமைப்பில் கேட்டலிடிக் கன்வெர்டர் அடைந்து கொண்டாலோ அல்லது எக்ஸாஸ்ட் குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ எக்ஸாஸ்ட் குழாயில் இருந்து முற்றிலுமாக புகை வராது. இதன் காரணமாக என்ஜின் செயல்படுதிறன் பாதிக்கப்படலாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஆக மொத்தத்தில் எக்ஸாஸ்ட் குழாயை அவ்வப்போது கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். எக்ஸாஸ்ட்டை வைத்து என்ஜினின் தரத்தை தீர்மானித்து விடலாம். எக்ஸாஸ்ட் குழாயின் அறிகுறிகளை வைத்து என்ஜின் பிரச்சனைகளை முன்கூட்டியே தெரிந்து வைத்து கொள்ளுங்கள். அப்போதுதான் பெரிய தொகையை பராமரிப்பு செலவுக்கு செலவழிப்பது தவிர்க்கப்படும்.


Click it and Unblock the Notifications









