சென்னை மழை வெள்ளத்தில் கார் மூழ்கியதா? கவலைய விடுங்க! இது பண்ணா நஷ்டத்தை சமாளிக்கலாம்!
சென்னையில் தற்போது மிக்ஜாம் புயல் காரணமாக பலர் சாலையில் நிறுத்தி வைத்திருந்த கார்கள் எல்லாம் வெள்ள நீரில் மூழ்கி போய் உள்ளன. வெள்ளம் அடித்துக் கொண்டு செல்லும்போது பல்வேறு கார்கள் தண்ணீரில் அடித்து போகும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. இப்படியாக வெள்ள நீரால் உங்கள் வாகனம் பாதிக்கப்பட்டால் அதற்கான இன்சூரன்ஸ் எப்படி வாங்குவது என்ற விபரத்தை தான் இங்கே காணப் போகிறோம்.
புதிதாக நாம் கார் வாங்கும் போது இன்சூரன்ஸ் என்பது கட்டாயமாக இருக்கிறது. மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டாயம் எடுக்க வேண்டும் ஆனால் கார் வாங்கும் பலர் முழுமையான இன்சூரன்ஸ் தான் பெரும்பாலும் எடுப்பார்கள். அப்படி எடுத்தால் தான் காருக்கு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அதற்காகவும் செலவை இன்சூரன்ஸ் மூலம் பெற முடியும் என்பதற்காக இதை செய்வார்கள்.

தற்போது சென்னையில் பெய்து வரும் மழையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மழை வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. லட்சக்கணக்கான ரூபாயை செலவு செய்தால் தான் இந்த வாகனங்களை எல்லாம் இது சரி செய்ய முடியும் என்ற நிலையில் இன்னும் ஒரு நாட்களில் தண்ணீர் வடிந்த பின்பு இந்த வாகனங்களை சரி செய்வது எப்படி என பலர் யோசிக்க துவங்குவார்கள். ஏற்கனவே நீண்ட ஆண்டுகளாக கார் வைத்திருக்கும் நபர்களுக்கு இன்சூரன்ஸ் கிளைம் பற்றி தெரிந்திருக்கும்.
ஆனால் புதிதாக கார் வாங்கி பயன்படுத்தும் பலர் இந்த இன்சூரன்ஸ் குறித்து அறிந்திருக்க வாய்ப்பு குறைவு தான். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இப்படியாக மழை வெள்ள நீரில் உங்கள் வாகனம் சிக்கினால் அந்த வாகனத்தை சரி செய்வதற்கான இன்சூரன்ஸ் படத்தை எப்படி கிளைம் செய்வது என்ற விவரத்தை தான் இங்கே நாம் காண போகிறோம்.

உங்கள் வாகனம் மழை வெள்ள நீரில் மூழ்கி விட்டாலோ அல்லது மழை நீரில் அடித்து சென்று விட்டாலோ நீங்கள் முதலில் செய்ய வேண்டியது பொறுமை காப்பது மட்டும்தான். அவசரப்பட்டு காரின் அருகே சென்று காரின் கதவை திறக்க முயற்சி செய்யாதீர்கள். காரின் கதவை திறந்தால் வெள்ள நீர் இருக்கும்போது அது முழுவதும் கார் உள்ளே செல்ல வாய்ப்புள்ளது. அதே நேரம் காரை ஸ்டார்ட் செய்யும் முயற்சி செய்ய வேண்டாம்.
பொறுமையாக தண்ணீர் வடியும் வரை காத்திருங்கள். தண்ணீர் வடிந்த பின்பு நீங்கள் உங்கள் காரை அருகில் உள்ள மெக்கானிக் அல்லது உங்கள் கார் ஷோரூம் சர்வீஸ் சென்டருக்கு எடுத்துச் செல்வது நல்லது. ஆனால் அதற்கு முன்பாக வெள்ளநீர் எந்த அளவிற்கு உங்கள் காரில் நிரம்பி இருந்தது என்பதை அறிந்து கொள்ளும் வகையில் உங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள். இதை மெக்கானிக் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காட்ட வசதியாக இருக்கும்.
அடுத்ததாக நீங்கள் காருக்குள் வைத்திருக்கும் ஆவணங்களை முன்கூட்டியே எடுத்துக் கொள்வது நல்லது. சிலர் காருக்குள்ளேயே ஒரிஜினல் ஆவணங்களை வைத்திருப்பார்கள் அது முற்றிலும் தவறு. காருக்குள் வெள்ள நீர் சொல்லும் அபாயம் இருந்தால் காருக்குள் இருக்கும் ஆவணங்களை எடுத்து பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள். இதன் பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது இன்சூரன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டியது தான்.
காருக்குள் வெள்ள நீர் சூழ்ந்து இருக்கும் போதே அதை புகைப்படம் எடுத்து இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பி உங்கள் கார் இப்படியான சேதத்தை சந்தித்து விட்டது என்பதை முதல் முறையாக இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரியப்படுத்துங்கள். போன் செய்தோ, இ-மெயில் மூலமோ ஏதாவது ஒரு வகையில் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரியப்படுத்த வேண்டியது உங்கள் முதல் கடமையாக இருக்கிறது.
அதன் பின்பு வெள்ளம் வடிந்த பின்பு வெள்ள நீரால் உங்கள் வாகனம் சேதம்மாகி இருந்தால் இது குறித்து நீங்கள் போலீசில் சென்று புகார் அளிக்க வேண்டும். அதன்படி போலீசார் உங்கள் புகாரை பெற்றுக் கொண்டு முதல் விசாரணை அறிக்கையை பதிவு செய்வார்கள். இதை அடிப்படையாகக் கொண்டுதான் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் உங்கள் காருக்கு ஏற்படும் சேதாரங்களுக்கான பணத்தை வழங்கும் இந்த எஃப்ஐஆர் என்பது முழுமையாக உங்கள் கார் சேதமானால் மட்டுமே தேவைப்படும்.
அதன் பின்பு உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் இன்சுரன்ஸ் நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள் மேலும் காரை ஸ்டார்ட் செய்யாமல் சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று அங்கு காருக்கு என்ன நேர்ந்தது என முழுமையாக ஆய்வு செய்து அதை இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தெரியப்படுத்துங்கள்.
அதன் மூலம் அந்த காருக்கு ஏற்பட்ட சேதத்தை சரி செய்ய எவ்வளவு செலவாகும் என மதிப்பிடப்பட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதற்கான தொகையை உங்களுக்கு வழங்க முன் வரும். ஒருவேளை அதிகமான சேதம் ஏற்பட்டிருந்தால் முழுவதுமாக காரை ஸ்கிராப் செய்துவிட்டு, முழு இன்சூரன்ஸ் பணத்தையும் உங்களுக்கு வழங்க நிறுவனம் முடிவு செய்யலாம்.
இதற்கு இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதி நேரில் வந்து உங்கள் வாகனத்தை பார்வையிட்டு அதில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த தகவல்களை எல்லாம் சேகரித்து செல்வார். வாகனத்திற்கு ஏற்பட்ட சேதம் குறித்து ஆய்வு செய்த பின் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும் பணத்தில் உங்களுக்கு திருப்தி இல்லை என்றால் நீங்கள் அந்நிறுவனத்திடம் பேரம் பேசி அதிக தொகையை பெற முடியும். இறுதியாக நீங்கள் ஏற்றுக் கொண்ட பின்பே அந்த பணம் உங்களுக்கு வழங்கப்படும்.
சில நிறுவனங்கள் ஒட்டுமொத்த தொகையும் ஒரே முறையாக செலுத்தி விடும் சில நிறுவனங்கள் பகுதி பகுதியாக உங்களுக்கு பணத்தை வழங்க முடிவு செய்யும். அது நீங்கள் இன்சூரன்ஸ் எடுத்திருக்கும் நிறுவனத்தை பொருத்தே இருக்கிறது. காரை சரி செய்து பயன்படுத்தலாம் என்றால் இந்த இன்சூரன்ஸ் பணம் நேராக சர்வீஸ் சென்டருக்கு அனுப்பப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று சென்னையில் சொந்த கார் வைத்திருக்கும் பலர் வெள்ளம் காரணமாக தங்கள் காருக்கு என்ன ஆனது எனதெரியாமல் பரிதவித்துக் கொண்டே என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்சசூரன்ஸ் என்பது மிகப்பெரிய உதவியாக இருக்கும். வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட கார்களுக்கு நிச்சயம் இன்சூரன்ஸ் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications









