மெக்கானிக் கூட சொல்ல மாட்டாங்க... வெயில் காலத்தில் காரில் இதை சமாளிப்பதுதான் பெரிய பிரச்சனையே!!
மார்ச் மாதம் வந்துவிட்டாலே கிட்டத்தட்ட கோடைக்காலம் துவங்கிவிட்டது என்றுதான் அர்த்தம். மேற்கத்திய நாடுகளுக்கு கோடைக்காலம் என்றாலே மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், நம் இந்தியாவில் அப்படியே நேர்மாறாக இருக்கும். குறிப்பாக, பூமத்திய ரேகைக்கு அருகே அமைந்துள்ள தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் கோடைக்காலம் வாட்டி வதைப்பதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது. அதிக வெப்பத்தினால் இயந்திரங்கள் பாதிப்படைவது மட்டுமின்றி, வாகனங்களும் கோடைக்காலத்தில் பழுதடைவதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால், அதனை எதிர்கொள்வதற்கும், பெரிய பழுதுகளில் சிக்காமல் தவிர்ப்பதற்கும் காரில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
கோடைக்காலத்திற்கு ஏற்ப காரை தயார் செய்வதில் முக்கியமான 4 விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். காரின் கூலிங் சிஸ்டத்தை பராமரிப்பது, காரின் டயர்களில் காற்றழுத்தத்தை கண்காணிப்பதுடன் டயர்களை பராமரிப்பது, அதிக வெப்பத்தினால் சேதமடைய கூடிய காரின் பேட்டரியை அவ்வப்போது சரிப்பார்ப்பது மற்றும் காரின் ஏசி சிஸ்டத்தை நல்ல நிலையில் வைத்திருப்பது ஆகும்.

காரின் கூலிங் சிஸ்டத்தை பராமரித்தல்: காரின் கூலிங் சிஸ்டம் என்றதும் ஏசி என நினைத்துவிட வேண்டாம். இது காரின் என்ஜின் சிஸ்டத்தை குளிர்வித்து, என்ஜினில் பழுதுகள் ஏற்படுவதை தடுப்பது ஆகும். அதாவது, தொடர்ந்து வேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் காரின் என்ஜினில் தானாகவே வெப்பம் உண்டாகும். இது இல்லாமல் வெளியில் இருந்தும் வெப்பம் காருக்குள் பரவும்போது என்ஜின் சிஸ்டத்தில் வெப்பம் அதிகரிக்கும்.
இதனை சமாளிக்க என்ஜின் சிஸ்டத்தில் குளிர்வூட்டுவானை கார் நிறுவனங்கள் வழங்குகின்றன. இந்த கூலிங் சிஸ்டத்தில் திரவம் ஆனது கசிவு, ஆவியாதல் போன்றவற்றினால் குறிப்பிட்ட காலத்தில் குறையும். கோடை காலம் என்றாலே இந்த குறையும் வேகம் இன்னும் அதிகமாக இருக்கும். ஆதலால், கூலிங் சிஸ்டத்தில் போதுமான திரவம் இல்லாமல் அதிக சூட்டினால் என்ஜின் பழுதாகுவதை தவிர்க்க, என்ஜின் கூலிங் சிஸ்டத்தை கோடைக்காலத்திற்கு முன்னரே சரிப்பார்த்து வைத்திருங்கள்.
என்ஜின் கூலிங் சிஸ்டத்தில் ஏற்படும் திரவ கசிவுகளை தடுக்க என்ஜினின் ரேடியேட்டர், குழாய்கள் மற்றும் குளிர்விப்பானை கொண்டிருக்கும் ரிசர்வர் உள்ளிட்டவை நல்ல நிலையில் உள்ளனவா என்பதை பரிசோதிக்கவும். டாய்லெட் ஃப்ளஷ்ஷை போன்று, கூலண்ட் ஃபிளஷ் என்கிற ஒன்றும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. அது பயன்படுத்தினால் கூலிங் சிஸ்டத்தில் உள்ள அடைப்புகள் மற்றும் துருப்பிடித்தல்களை நீக்கி கூலிங் சிஸ்டத்தின் செயல்படுதிறனை மேம்படுத்தும்.

டயர்களை பராமரித்தல்: அதிக வெப்பத்தினால் டயருக்குள் அழுத்தம் அதிகமாகும். இதனால்தான், குறிப்பாக கோடைக்காலத்தில் சாலையில் இயங்கிக் கொண்டிருக்கும் வாகனத்தின் டயர் வெடிக்கும் சம்பவங்களை பரவலாக பார்க்க முடிகிறது. ஆதலால், வெயில் காலத்தில் காரின் சக்கரங்களின் பிரஷரை அவ்வப்போது செக் செய்து, டயரின் அழுத்தத்தை சீராக பராமரிக்கவும்.
குறிப்பாக, தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ளும்போது இந்த விஷயத்தில் இன்னும் முன்னெச்சரிக்கை ஆக இருக்க வேண்டும். டயருக்கு காற்றழுத்தத்தை மட்டுமின்றி, டயர்களில் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதையும் அவ்வப்போது சரிப்பார்த்துக் கொள்ளவும். டயர் அதிகம் பழுதாகி இருப்பதுபோல் தோன்றினாலே, எந்தவொரு சமரசமும் இன்றி அந்த டயரை மாற்றிவிடுங்கள்.
ஏனெனில், நிறைய நேரங்களில் டயர் வெடிப்புக்கு பழைய டயரும் ஒரு காரணமாக இருக்கிறது. பழைய டயருக்குள் பிரஷர் அதிகரித்தால், அது வெடிப்பதற்கு வாய்ப்புள்ளது. மிதமான வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும்போது டயர் வெடித்தாலே காரை கண்ட்ரோலுக்கு கொண்டுவருவது சிரமம். அப்படியிருக்கையில், நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும்போது டயர் வெடித்தால், கார் கவிழ்ந்து பெரிய விபத்து ஏற்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது.

பேட்டரியை சரிப்பார்த்தல்: என்ஜினை குளிர்விக்கும் திரவம் மட்டுமின்றி, அதிக வெப்பத்தினால் பேட்டரிக்குள் இருக்கும் திரவம் கூட ஆவியாகி, பேட்டரிக்குள் அரிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. இது பேட்டரியின் ஆயுட்காலத்தை குறைக்கும். ஆதலால், கோடைக்காலம் துவங்குவதற்கு முன்னர் பேட்டரியின் நிலையை சரிப்பார்க்கவும்.
பேட்டரிக்குள் இருக்கும் திரவம் ஆவியாகினால், பேட்டரியின் வடிவத்தில் மாற்றம் ஏற்படும். அதை வைத்து பேட்டரியின் கண்டிஷனை கணக்கிடலாம். பேட்டரிக்குள் வெப்பம் அதிகளவில் பரவுவதை தடுக்க பேட்டரி உடன் வயர் இணைக்கப்படும் பகுதியை அவ்வப்போது சுத்தம் செய்து, பேட்டரியில் இருந்து சீராக மின்னோட்டம் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஏசி சிஸ்டத்தை சரிப்பார்த்தல்: கோடைக்காலத்தில் காரில் ஏசி சிஸ்டம் ஆனது மிக முக்கியமான ஒன்றாகும். பல நேரங்களில், காருக்குள் ஏசி இல்லாமல் இருக்கவே முடியாது. ஆதலால், ஏசி பெரிய அளவில் தேவைப்படும் என்பதால், அதனை முறையாக பராமரித்து வைத்திருத்தல் அவசியமாகும். வெயில் காலம் துவங்குவதற்கு முன்னரே, ஏசியின் செயல்பாடுகள் நன்றாக உள்ளதா அல்லது ஏதேனும் நீர் கசிவுகள் உள்ளதா என்பதை சரிப்பார்க்கவும்.
ஏசி சிஸ்டத்தில் கசிவுகள் உள்ளனவா என்பதை குறைந்த குளிர்ச்சி அல்லது ஏசி சிஸ்டத்தில் இருந்து ஏற்படும் விசித்திரமான சத்தத்தின் மூலமாக அறியலாம். எல்லா நேரங்களிலும் ஏசி-ஐ பயன்படுத்த முடியாது என்பதால், சில நேரங்களில் ஏசி சிஸ்டத்தில் இருக்கும் மின்விசிறியை பயன்படுத்த வேண்டியிருக்கும். ஆனால், உங்களது காரின் ஏசி-இல் இருந்து போதிய அளவிற்கு காற்று வரவில்லை எனில், உங்களது ஏசி சிஸ்டத்தில் குளிர்பதன பொருளை புதியதாக நிரப்ப வேண்டியிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோடைக்காலத்திற்கு தயாராகுவதற்கு மேற்கூறப்பட்டவை எல்லாம் காரில் டெக்னிக்கலாக கொண்டுவரப்பட வேண்டியவை ஆகும். இவற்றை பின்பற்றாமலும், உங்களால் கோடைக்காலத்தில் கார் ஓட்ட முடியும். ஆனால், எப்போது எந்த பிரச்சனை ஏற்படும் என்பதையே யூகிக்க முடியாதாகிவிடும். எல்லாவற்றிற்கும் முன்கூட்டியே தயாராக இருப்பது நல்லது தானே...
இவை இல்லாமல், கார் டிரைவிங்கில் இருந்து காரை பார்க் செய்வது வரையில் கூட கோடைக்காலத்திற்காக சில பழக்கவழக்கங்களை பின்பற்ற வேண்டி உள்ளது. அதாவது, எப்போதும் தண்ணீர் பாட்டிலை காரில் வைத்திருப்பது போன்றவை ஆகும். பொதுவாகவே காருக்குள் எளிதாக வெப்பநிலை அதிகரித்துவிடும். அதனால்தான், ஏசி-இன் பயன்பாடு காரில் இன்றியமையாததாக உள்ளது. சில நேரங்களில் ஏசி-ஐ பயன்படுத்தாமல் ஜன்னல்களை திறந்து வைத்துக் கொண்டு பயணம் செய்வோம்.
ஆகையால், தண்ணீர், குளிர்பானங்கள் போன்றவற்றை காரினுள் எளிதில் வெப்பமடையாத க்ளோவ் பாக்ஸ் (Glove Box) பகுதியில் வைக்க வேண்டும். கோடைக்காலத்தில் எளிதில் நீர்ச்சத்து குறையும் என்பதால், கார் பயணத்தின் போது அவ்வப்போது சிறு சிறு இடைவேளைகளை எடுத்துக் கொள்ளவும். அதேபோல், வெயில் காலத்தில் முடிந்தவரையில் காரை நிழலில் நிறுத்த பாருங்கள்.


Click it and Unblock the Notifications









