காரை சர்வீஸ் பண்றேன்னு உங்க காசுக்கு வேட்டு வச்சிடுவாங்க! இதுல எல்லாம் கவனமா இருங்க!
கார் சர்வீஸ் மோசடிகள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன, பல நிறுவனங்கள் பராமரிப்பு என்ற போர்வையில் வாடிக்கையாளர்களை ஏமாற்றுகின்றன. நீங்கள் சமீபத்தில் புதிய கார் வாங்கியிருந்தால், சில விஷயங்களை மனதில் கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இதனால் நீங்கள் தேவையில்லாமல் பணத்தை இழப்பதை தவிர்க்க முடியும்.
சர்வீஸ் மையங்கள் பெரும்பாலும் தேவையில்லாத பாகங்களை மாற்றுவது அல்லது சேவைகளைச் செய்வதை பரிந்துரைக்கின்றன. இது அந்நிறுவனம் லாபத்தை அதிகரிக்க பயன்படுத்தப்படும் ஒரு தந்திரம். எப்போதும் உங்கள் கார் பயன்பாட்டு மேனுவலை பார்க்கவும், நேரம் அல்லது மைலேஜின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட சேவை அட்டவணையைப் பின்பற்றவும். ஒரு பகுதியை மாற்ற பரிந்துரைக்கப்பட்டால், முதலில் அதன் தற்போதைய நிலையை சரிபார்க்கவும்.

சர்வீஸ் செய்யும் போது, சிறிய பழுதுபார்ப்பு அல்லது சுத்தம் செய்வதற்காக நீங்கள் அதிக விலை கொடுக்கும் நிலை ஏற்படலாம். அல்லது சர்வீஸ் முடிந்த பிறகு மறைமுக கட்டணங்களை சந்திக்க நேரிடலாம். இதைத் தவிர்க்க, சேவை கட்டணங்கள் மற்றும் பிற கட்டணங்களை முன்கூட்டியே அறிந்து கொள்ளுங்கள். இறுதி பில்லைப் பெறுவதற்கு முன்பு கட்டணங்களின் விரிவான பட்டியலைக் கோருங்கள்.
சில சர்வீஸ் மையங்கள், குறிப்பாக அதிகாரப்பூர்வமற்ற மையங்கள், போலி அல்லது குறைந்த தரமான பாகங்களைப் பயன்படுத்தலாம். உங்கள் வாகனத்தில் நிறுவப்படும் பாகங்கள் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்த அவற்றை எப்போதும் ஆய்வு செய்யவும்.

சர்வீஸ் மையங்கள் பெரும்பாலும் வாடிக்கையாளர்களை நீண்ட கால திட்டங்கள் அல்லது உறுப்பினர் சப்ஸ்கிரிப்ஸன்களை வாங்க நிர்பந்திக்கின்றனர், அது அனைவருக்கும் அவசியமாக இருக்காது. இந்த திட்டங்கள் உங்கள் பயன்பாட்டுக்கு பயனுள்ளதா என்பதை மதிப்பிட்டு, முடிவெடுக்கும் முன் அவற்றின் நன்மை தீமைகளை கவனமாகப் புரிந்து கொள்ளுங்கள்.
உங்கள் வாகனம் சரியான நேரத்தில் சர்வீஸ் செய்யப்படாவிட்டால், அதன் உத்தரவாதத்தை பாதிக்கலாம். சில நிறுவனங்கள், தாமதமான சர்வீஸை காரணம் காட்டி, வாரண்டி கோரிக்கைகளை மறுக்கலாம். உங்கள் வாகனத்தை சரியான நேரத்தில் சர்வீஸ் செய்யும் பழக்கத்தை ஏற்படுத்தி, சர்வீஸ் புத்தகத்தில் துல்லியமான தகவல் பதிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும்.

இந்த பொதுவான பிரச்சினைகளைப் பற்றி விழிப்புடன் இருப்பதன் மூலம், தேவையற்ற செலவுகளைத் தவிர்த்து, உங்கள் வாகனத்திற்கு சரியான பராமரிப்பு கிடைப்பதை உறுதிப்படுத்தலாம். இதனால் தேவையில்லாமல் உங்கள் பணம் இழக்கப்படுவது தவிர்க்கப்படும். வாகனம் வாங்கும் செலவை விட அதை பராமரிக்கும் செலவு அதிகமாக இருக்கிறது.
வாகனம் என்பது உங்களது அழியும் சொத்து என்பதை கவனத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அதனால் அதன் மதிப்பு குறையும் முன்பே நீங்கள் அதை சரியாக பயன்படுத்தி கூடுதல் பலன்களை பெற்றுளக்கெள்ள வேண்டும். அதனால் நீங்கள் வாகனங்களை பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும். சரியான பராமரிப்பு கொண்ட வாகனங்கள் நீடித்து உழைக்கும்.
அதே நேரம் சரியாக பராமரிக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தை வைத்து உங்களுக்கு விபரம் தெரியவில்லை என்பதை அறிந்தால் பலர் கார் பராமரிப்பில் தேவையில்லாத செலவுகளை இழுத்துவிட வாய்ப்புள்ளது. இதனால் நீங்கள் எப்பொழுதும் கார் பராமரிப்பு குறித்த சரியான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எப்பொழுதும் காரை விற்பனை செய்யும் போது மேனுவலை வழங்கும். அதில் வழக்கமான பராமரிப்பு குறித்த அனைத்து தகவல்களும் கிடைக்கும். அதனால் அதை பின்பற்றினாலே உங்கள் காரை சரியாக பராமரிக்க முடியும். தேவையில்லாத பராமரிப்புகளை செய்து காரை வீண் செய்யாதீர்கள்.


Click it and Unblock the Notifications









