ஷோரூமில் கூட சொல்ல மாட்டாங்க! காரில் இதை எல்லாம் செய்து பாருங்க, பணம் எவ்வளவு மிச்சமாகும்னு பார்ப்பீங்க
ஒவ்வொரு மாதமும் சம்பளம் வாங்கிய பின்னர், காருக்கு பெட்ரோல் (அ) டீசலுக்கு என குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி வைக்கும் பழக்கம் நம்மில் நிறைய பேரிடம் இருக்கிறது என நினைக்கிறேன். இது இல்லாமல், காரின் பராமரிப்புக்கு என தனியாக செலவிட வேண்டியதாக இருக்கும். எப்போதெல்லாம் காரின் சர்வீஸை முறையாக கவனிக்கவில்லையோ அப்போதெல்லாம் எரிபொருள் செலவு அதிகரிப்பதை நீங்கள் கவனிக்கலாம். ஆக, காரின் மெயிண்டனன்ஸுக்கும், எரிபொருள் பயன்பாட்டிற்கும் ஒரு தொடர்பு உள்ளது. காரின் எரிபொருள் செலவை எவ்வாறு எல்லாம் குறைக்கலாம் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
தொடர்ச்சியான கார் பராமரிப்பு: ஏற்கனவே கூறியதுபோல், எப்போதும் காரை சர்வீஸ் செய்து பழுதில்லாமல் வைத்திருக்கும்போது கார் குடிக்கும் எரிபொருள் குறைவாக இருக்கும். குறிப்பாக, டயர்களில் காற்றழுத்தத்தை சீராக வைத்திருந்தால் மற்றும் என்ஜினின் காற்று வடிக்கட்டியை சுத்தமாக வைத்திருந்தால் என்ஜினின் செயல்பாடு சிறப்பாக அமைந்து எரிபொருளை அது எடுத்துக் கொள்வது குறையும்.

பயணத்திற்கு சிறந்த வழியை தேர்வு செய்வது: எங்கேயாவது பயணத்தை துவங்கும் முன் எந்த வழியில் சென்றால் எரிபொருள் குறைவாக செலவிடப்படும் என்பதை யூகித்து அந்த வழியாக செல்லவும். சில நேரங்களில் குறுக்கு வழி கூட அதிக எரிபொருள் செலவையும், காரில் சேதாரங்களையும் உண்டாக்கக் கூடும். அதனால்தான், 'சிறந்த வழி' என கூறியுள்ளோம்.

ஆக்ஸலரேஷன் & பிரேக்கை பயன்படுத்துவது: புதியதாக கார் ஓட்டுபவர்களை போன்று அவ்வப்போது ஆக்ஸலரேஷன் & பிரேக் பெடல்களை அழுத்திக் கொண்டிருக்காதீர்கள். முற்றிலுமாக சடர்ன் ஆக்ஸலரேஷன் & பிரேக்கை தவிர்ப்பது நல்லது. ஆக்ஸலரேஷன் & பிரேக் எல்லாம் நேரடியாக காரின் என்ஜினை கண்ட்ரோல் செய்யக்கூடியவை என்பதை நான் கூற வேண்டியதில்லை.

போதுமான வேகத்தை பராமரிக்கவும்: அதிவேக பயணம் ஆபத்தாக சென்று முடியும் என்பது மட்டுமின்றி, அதில் எரிபொருள் செலவும் அதிகமாக இருக்கும் என்பதை மறவாதீர்கள். அதேநேரம், மிகவும் குறைவான வேகத்தில் செல்லவும் வேண்டாம்; அதிக எரிபொருளில் குறைந்த தொலைவை கடக்க வேண்டியதாகி விடும்.

தேவையில்லாத சுமைகளை குறைக்கவும்: காரின் என்ஜின் எந்த அளவிற்கு உழைக்கிறதோ அந்த அளவிற்கு அது எரிபொருளை எடுத்துக் கொள்ளும். ஆகையால், காரில் தேவையில்லாத சுமைகளை குறைத்து என்ஜினின் வேலை பளுவை குறைக்கலாம். மேலும், காருக்கு உள்ளே தேவையில்லாத பொருட்களை தவிர்ப்பதன் மூலம் காரின் சஸ்பென்ஷன், பிரேக் போன்றவை விரைவில் சேதமடைவதையும் தவிர்க்கலாம்.

ஏசி-ஐ குறைவாக பயன்படுத்தவும்: காரில் வழங்கப்படும் பேட்டரி மூலமாக தான் ஏசி, விளக்குகள் என அனைத்து எலக்ட்ரானிக் பாகங்களும் செயல்படுகின்றன. அந்த பேட்டரிக்கு சார்ஜ் கொடுப்பது காரின் என்ஜின் ஆகும். ஆகையால், ஏசி செயல்பாடு மறைமுகமாக என்ஜினின் செயல்திறனை சார்ந்துள்ளது. எனவே, தேவையில்லாத நேரங்களில் ஏசி-ஐ ஆஃப் செய்துவிடுவது நல்லது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டிப்ஸ்களை முறையாக பின்பற்றினால் எரிபொருள் செலவில் மிக பெரிய வித்தியாசத்தை பார்க்கலாம். இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, கார் வாங்கும்போதே நல்ல மைலேஜ் தரக்கூடிய காராக பார்த்து வாங்குவது இன்னும் நல்லது. தற்போதுதான் சிஎன்ஜி (CNG) கார்கள் எல்லாம் அதிகமாக வந்துவிட்டதே...


Click it and Unblock the Notifications









