கார்களில் பயன்படும் பொருட்களின் 'காலாவதி' காலம்... தெரிஞ்சுக்கோங்க!
எந்த பொருளை வாங்கினாலும் அதில் தயாரிப்பு தேதி விபரமும், காலாவதி ஆகும் விபரமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அவற்றை பலர் கவனிப்பதில்லை. சிறிய கவனக் குறைவு சில நேரங்களில் பெரிய இழப்புகளையும், பாதிப்புகளையும் தந்துவிடும்.
இந்த நிலையில், கார்களில் பயன்படும் சில உதிரிபாகங்கள் மற்றும் பொருட்களுக்கும் காலாவதி காலம் இருக்கிறது. அதனை தெரிந்து வைத்துக் கொண்டு காரை பராமரித்தால், பல இழப்புகளை தவிர்க்க முடியும். அதுபற்றிய விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

டயர்கள்
டயர்களை 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றிவிட வேண்டும். குறைந்தபட்சமாக டயரில் 3 மிமீ அளவுக்கு டிரெட் இருத்தல் அவசியம். டயரின் தயாரிப்பு தேதியை கணக்கிடுவதற்கு அதில் குறியீட்டு எண் குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக, டயரில் 3909 என்று குறியீட்டு எண் இருந்தால் அது 2009ம் ஆண்டு 39வது வாரம் தயாரிக்கப்பட்டது என்று அர்த்தம். இதை வைத்து 6 ஆண்டுகள் வரை அந்த டயரை பயன்படுத்தலாம்.

கேபின் ஏர் ஃபில்டர்
கேபின் ஏர் ஃபில்டரின் ஆயுட்காலம் நீங்கள் காரை பயன்படுத்தும் இடத்தை பொறுத்தது. அதிக மாசு உள்ள பகுதியாக இருந்தால் கேபின் ஏர் ஃபில்டர் சீக்கிரமாக பாதிக்கும். சராசரியாக 25,000 கிமீ முதல் 30,000கிமீ.,க்கு ஒருமுறை கேபின் ஏர் ஃபில்டரை மாற்றிவிடுவது நல்லது. ஏசி புளோயர்களை வேகமாக வைக்கும்போது சப்தம் மட்டும் அதிகமாக கேட்கும். ஆனால், காற்று வேகம் குறைவாக இருக்கும் அல்லது வராது. இதுபோன்று இருந்தால், உடனே கேபின் ஏர் ஃபில்டரை மாற்றிவிடுங்கள்.

எஞ்சின் ஆயில்
எஞ்சின் ஆயிலின் ஆயுட்காலம் தயாரிப்பாளரை பொறுத்து மாறுபடும். பொதுவாக 12 முதல் 18 மாதங்களுக்கு ஒருமுறை அல்லது 10,000கிமீ.,க்கு ஒருமுறை எஞ்சின் ஆயிலை மாற்றிவிடுவது நல்லது. இல்லையெனில், எஞ்சின் ஆயிலின் உயவுத்தன்மை குறைந்து எஞ்சினில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.

ஏர் ஃபில்டர்
பொதுவாக 20,000கிமீ தூரத்துக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை ஏர் ஃபில்டரை மாற்றிவிட வேண்டும். ஏர் ஃபில்டரின் காலாவதி தேதி கையேட்டில் கொடுக்கப்பட்டிருக்கும். அப்படியில்லையெனில், உங்களது சர்வீஸ் மையத்திலோ அல்லது டீலரிலோ கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

பிரேக் ஆயில்
காரின் பாதுகாப்புக்கு அதிமுக்கியமான பிரேக் அமைப்பை 10,000 கிமீ தூரத்துக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரேக் ஆயிலை மாற்ற வேண்டும். ஒருவேளை, பிரேக் ஆயில் கன்டெயினரில், ஆயில் கறுப்பாகவோ அல்லது கெட்டியாக இருந்தாலோ உடனடியாக மாற்றிவிட வேண்டும்.

ஏசி கேஸ்
ஆண்டுக்கு ஒருமுறை காரை முழு சோதனை செய்ய வேண்டும். அப்போது, குளிர்சாதன வசதி அமைப்பையும் சோதித்துவிடுவது அவசியம். மேலும், ஏசி வென்ட்டிலிருந்து காற்று குளிர்ச்சியாக வராவிட்டால், கேஸ் நிரப்பிவிட வேண்டும்.

டைமிங் பெல்ட்
டைமிங் பெல்ட் மாற்றுவது தயாரிப்பாளரை பொறுத்து மாறுபடும். 60,000 கிமீ முதல் 80,000 கிமீ வரை பரிந்துரைக்கப்படுகிறது. தொடர்ந்து பாதிப்படைந்த டைமிங் பெல்ட்டை பயன்படுத்தினால், எஞ்சினில் பாதிப்புகளை உண்டாக்கி விடும். சில சமயம் எஞ்சின் செயலிழக்கும் அபாயமும் உண்டு.

சைல்டு சீட்
ஒரு சில ஆண்டுகளில் சைல்டு இருக்கைகளின் கீழ் பாகத்தில் தெறிப்புகள் உருவாகும். பெல்ட்டுகளும் தொய்வடைந்துவிடும். சைல்டு சீட்டின் கீழ் பகுதியில் காலாவதி காலம் குறிக்கப்பட்டிருக்கும். அதிகபட்சம் 6 ஆண்டுகள் வரை சைல்டு சீ்ட்களுக்கு ஆயுட்காலம் கொடுக்கப்படுகிறது.

ஏர் பேக்குகள்
ஏர்பேக்குகள் மற்றும் இருக்கை பெல்ட்டுகள் 10 ஆண்டுகளிலிருந்து 15 ஆண்டுகளுக்குள் மாற்றிவிட வேண்டும்.

தீயணைப்பான்
காரில் பயன்படுத்தும் தீயணைப்பானை 2 அல்லது 3 ஆண்டுகளில் மாற்றிவிட வேண்டும். கேபின் வெப்பத்தால், காலாவதியாகி பயன்படுத்தும் தீயணைப்பான்களில் கசிவு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், அவசர சமயங்களில் தீயணைக்கும் தகுதியையும் அந்த தீயணைப்பான்கள் இழந்துவிடும்.

பஞ்சர் சீலண்ட்
மூடிய நிலையில் இருக்கும் பஞ்சர் சீலண்ட் பாட்டிலுக்கு 3 முதல் 8 ஆண்டுகள் வரை காலாவதி காலம் நிர்ணயிக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது.

முதலுதவி பெட்டி
தற்போது அனைத்து புதிய கார்களிலும் முதலுதவி பெட்டி கொடுக்கப்படுகிறது. அதில் இருக்கும் ஆயின்மென்ட் உள்ளிட்ட சில மருந்து பொருட்கள் காலாவதி தேதி குறிப்பிடப்பட்டு வருகிறது. பெரும்பாலும் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை அவற்றின் ஆயுட்காலம் இருக்கும். காலாவதி காலத்தை கடந்த மருந்து பொருட்களை பயன்படுத்துவதை தவிர்ப்பதோடு, முதலுதவி பெட்டியில் புதிய மருந்துகளை வாங்கி வையுங்கள்.
காணத்தவறாதீர்: இன்றைய ஃபேஸ்புக் வீடியோ இதோ உங்களுக்காக...!


Click it and Unblock the Notifications








