கார் கதவுல சின்னதா இப்படி ஒரு பட்டன் இருக்குதே! இது எதுக்கு குடுத்துருக்காங்க தெரியுமா? எப்படி யூஸ் பண்ணுறது?
கார் கதவுகளில் சிறியதாக ஒரு பட்டன் வழங்கப்பட்டிருக்குமே கவனித்துள்ளீர்கள்? அதுவும் காரின் பின்பக்க கதவுகளில் தான் இது இருக்கும். இது என்ன பட்டன்? எதற்காக வழங்கப்பட்டுள்ளது? அதற்கான நன்மை, தீமைகள் என்னென்ன? எந்த இடத்தில் இதை எப்படிப் பயன்படுத்தவேண்டும் என விரிவாகக் காணலாம்.
கார் தயாரிப்பாளர்கள் மத்தியில் தற்போது பாதுகாப்பான கார்களை தயாரிப்பதில் போட்டி நிலவி வருகிறது. மக்கள் மத்தியில் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கார்களுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதால் போட்டிப் போட்டுக்கொண்டு பாதுகாப்பு அம்சங்களை கார் தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதனால் இந்தியாவில் விற்பனையாகும் கார்களில் சமீபகாலமாக அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக ஏர்பேக்குகள், ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் அல்லது கேமரா ஆகியவை இன்று உள்ள பெரும்பாலான கார்களில் இருக்கிறது. இப்படியான ஒரு விஷயம் தான் சைல்டு லாக் அம்சம். இந்த விஷயமும் இன்று பெரும்பாலான கார்களில் இருக்கிறது. ஆனால் பலருக்கு அந்த அம்சத்தை எப்படிப் பயன்படுத்த வேண்டும். இது எப்படி வேலை செய்யும் என்ற தகவல் தெரியாது. இதைப் பற்றித் தான் இங்கே காணப்போகிறோம்.
நாம் கார்களில் குழந்தைகளை அழைத்துச் செல்லும் போது காரில் பின் சீட்களில் அவர்களை அமர வைத்துச் செல்வோம். கார் வேகமாகச் சென்று கொண்டிருக்கும் போது சென்டரல் லாக் ஆக்டிவேட் ஆகியிருக்கும். இதனால் காரில் பின்பக்கத்தில் உள்ள குழந்தைகளால் காரின் கதவுகளைத் திறக்க முடியாது. ஆனால் நாம் போன் பேசுவதற்காகக் காரை ஓரம் கட்டி நிறுத்திவிட்டு போன் பேசினால் சென்ட்ரல் லாக் ஆன்லாக் ஆகிவிடும்.

இந்த மாதிரியான நேரங்களில் பின் சீட்டில் உள்ள குறுப்பும்கார குழந்தைகள் விளைவுகள் தெரியாமல் காரின் கதவைத் திறக்க முயற்சி செய்யும். இதனால் குழந்தைகள் பெரியவர்களுக்குத் தெரியாமல் காரிலிருந்து இறங்கிவிட வாய்ப்பு இருக்கிறது. அல்லது அவர்கள் பின்னால் வரும் வாகனங்களைக் கவனிக்காமல் கதவைத் திறக்கும் போது விபத்து ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. இந்த மாதிரியான சூழ்நிலைகளில் தான் சைல்டு லாக் பயன்படுகிறது.
குழந்தைகளை மட்டும் பின் சீட்டில் ஏற்றும் போது கதவை அடைக்கும் முன்பு நீங்கள் இந்த லாக்கை ஆக்டிவேட் செய்து கதவை அடைத்துவிட்டால் நீங்களாகக் கீழே இறங்கி பின்பக்க கதவை வெளிப்புறமாகத் திறக்கும் வரை காருக்குள் உள்ள குழந்தைகளால் காரின் கதவுகளைத் திறக்க முடியாது. இதுதான் இந்த சைல்டு லாக்கின் முக்கியமான அம்சம். இந்த சைல்டு லாக் ஆக்டிவேட் ஆகியிருந்தால் குழந்தைகள் குறும்பு தனத்தால் அவர்கள் பெரியவர்களுக்குத் தெரியாமல் காரிலிருந்து இறங்குவது, அல்லது அவர்கள் விளையாட்டுத் தனத்தால் விபத்து ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

அதே நேரத்தில் இந்த சைல்டு லாக் சிஸ்டத்தில் சில தீமைகளும் இருக்கிறது. நீங்கள் குழந்தைகள் அழைத்துச் செல்லும் போது நீங்கள் இறங்கிச் செல்லும்போது குழந்தைகளை மறந்து காருக்குள் விட்டுச் சென்றால் கார் வெயிலில் நிற்கும் போது காருக்குள் அதிகமான வெப்பம் ஏற்படும் இதனால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். அப்பொழுது குழந்தைகள் வெளியில் வர முயற்சி செய்தால் காருக்குள்ளே இருந்து கதவைத் திறக்க முடியாது. இதனால் குழந்தைகளின் உயிரே போய்விடக் கூட வாய்ப்பு இருக்கிறது.
ஒரு வேளை நீங்கள் பயணத்தில் விபத்தில் சிக்கிவிட்டால் கார் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கும் போது உங்கள் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்ற அவர்களை காரிலிருந்து வெளியே செல்லச் சொன்னாலும் அவர்களால் காரின் கதவுகளை திறக்க முடியாது. வெளியிலிருந்து யாராவது வந்து திறந்தால் தான் காரின் கதவுகள் திறக்கும். ஆனால் இந்த இரண்டு சந்தர்ப்பங்களும் நடப்பதற்கான வாய்ப்புகள் ஆனால் அதன் மூலம் ஏற்படும் நன்மைகள் அதிகம் இதனால் தான் இந்த லாக்கை கார் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்குகின்றன.
கார் வைத்திருக்கும் பலர் இதைப் பார்த்திருப்பார்கள். ஆனால் இது ஏன் பயன்படுகிறது. எப்படிப் பயன்படுத்தவேண்டும் எனப் பலருக்கும் தெரிவதில்லை. அதனால் இந்த தகவலை உங்களுக்கு வழங்கியுள்ளோம். சில அட்வான்ஸ்டு தொழிற்நுட்பம் கொண்ட கார்களில் எலெக்ட்ரினிக் சைல்டு லாக் இருக்கும். இதில் இந்த லாக்கை ஆக்டிவேட் செய்யும் பட்டன் டிரைவர் கேபின் பகுதியிலேயே இருக்கும் கதவு பகுதியில் இருக்காது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: உங்கள் காரில் சைல்டு லாக் இருந்தால் அதை எப்படி ஆக்டிவேட் மற்றும் டிஆக்டிவேட் செய்ய வேண்டும் என்பதை உங்கள் காரின் மேனுவலில் காணுங்கள். இனி நீங்கள் காரில் குழந்தைகளுடன் பயணிக்கும் போது இந்த சைல்டு லாக் சிஸ்டத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இது குழந்தைகளின் விளையாட்டுத்தனத்தால் ஏற்படும் விளைவுகளைத் தவிர்க்க முடியும்.


Click it and Unblock the Notifications









