காஸ்ட்லி கார் எல்லாம் தண்ணீல அடிச்சிட்டு போகுது! இதை பண்ணா கார் ஒரு இன்ச் கூட நகராது!
தற்போது சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கள் தண்ணீரில் அடித்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இதுபோல உங்கள் கார் தண்ணீரில் அடித்து செல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற விவரத்தை தான் இங்கே காணப் போகிறோம்.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கன மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் தண்ணீர் நிரம்பி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இதனால் சாலையில் நிறுத்தப்பட்ட கார்கள் தண்ணீருக்குள் மூழ்கி வருகின்றன. சில இடங்களில் கார்கள் தண்ணீரில் அடித்து செல்லப்படும் காட்சிகள் கூட சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீங்கள் இப்பொழுது சென்னையில் தான் இருக்கிறீர்களா? உங்கள் கார் இதுபோல சாலையில் நிறுத்தப்பட்டுள்ளதா? அப்படி என்றால் உங்கள் கார் வெள்ளம் வரும்போது தண்ணீரில் அடித்து செல்ல அதிகமான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வாகனம் மழை நீர் வெள்ளத்தில் அடித்து செல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என விரிவாக காணலாம் வாருங்கள்.
பொதுவாக காரை பார்க் செய்யும்போது சற்று உயரமான இடத்தில் பார்க் செய்தால் வெள்ள நேரத்தில் வெள்ள நீர் வரும்போது காரை பாதுகாக்க முடியும். சாலைகளில் காரை பார்க் செய்யாமல் பார்க்கிங் பகுதிக்குள் காரை எடுத்து சென்று பார்க் செய்வதுதான் என்றுமே சிறந்த ஐடியா. தற்போது உங்கள் கார் சாலையில் நின்று கொண்டிருந்தால் அதற்கு ஏற்ற ஒரு நல்ல பார்க்கிங்கை தேர்வு செய்து காரை அங்கு சென்று விட்டு விடுங்கள். சாலையில் கார்கள் நிறுத்துவது என்றைக்குமே ஆபத்தான விஷயம்.

ஒரு வேலை உங்களுக்கு வேறு பார்க்கிங் வசதி கிடைக்கவில்லை என்றால் நீங்கள் சாலையில் நிறுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கும். இந்த சமயத்தில் கார் ஒரு வேளை நீங்கள் பார்க்கிங் செய்திருந்த பகுதியில் வெள்ள நீர் சூழ்ந்தாலும் அந்த தண்ணீரில் கார் அடித்து செல்லாதவாறு சில விஷயங்களை செய்திருந்தால் உங்களால் தப்பிக்க முடியும். முக்கியமாக காரை பார்க் செய்யும்போது கியரை நியூட்ரலில் இல்லாமல் முதன் கியரில் போட்டு காரை நிறுத்தினால் கார் அவ்வளவு சுலபமாக நகராது.
அதே நேரம் நிறுத்திய பின்பு காரின் டயரின் பக்கவாட்டு பகுதிகளில் எல்லாம் கார் நகர முடியாதபடி கல் ஏதாவது வைத்து அடைப்பு ஏற்படுத்தலாம். இதன் மூலமும் கார் நீங்கள் காரை பார்க் செய்த பகுதியிலிருந்து தண்ணீரில் நகர்வதை ஓரளவு தவிர்க்க முடியும். எல்லாம் ஒரு முயற்சி தானே தவிர முழுமையான தீர்வு கிடையாது. வெள்ள நீரின் அளவு அதிகமாக வந்துவிட்டால் இதையும் மீறி கார் நகர்வதை தவிர்க்க முடியாது.

வெள்ள நீரில் கார் நகராமல் இருந்தால் மிகப்பெரிய ஆபத்திலிருந்து நீங்கள் தப்பி விடலாம். ஆனால் அதே நேரம் உங்கள் காருக்கு தண்ணீர் செல்லவும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. அதனால் கார்களில் சில விஷயங்களை நீங்கள் செய்வதன் மூலம் காருக்கு தண்ணீர் புகும் வாய்ப்பையும் குறைக்க முடியும். முக்கியமாக காரை உயரமான இடத்தில் பார்க் செய்ய வேண்டும் அதனால் தண்ணீர் காரின் அருகே நெருங்குவது தவிர்க்கப்படும்.
அடுத்ததாக காரின் கண்ணாடிகள் அனைத்தையும் அடைத்து வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் எளிதாக காருக்குள் தண்ணீர் செல்ல முடியாது. அடுத்ததாக ஒருவேளை காருக்குள் தண்ணீர் சென்றாலும் அது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இருக்க இப்பொழுதே காரில் இருந்து பேட்டரியை தனியாக கழட்டி வைத்தால் மிகப்பெரிய பாதிப்புகளில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.
ஒருவேளை உங்கள் காரை சுற்றி வெள்ள நீர் சூழ்ந்து விட்டால் நீங்கள் தண்ணீர் வடிந்த பின்பு காரை ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யாதீர்கள். உடனடியாக அருகில் உள்ள மெக்கானிக்கை அழைத்து அவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். அவர்கள் காருக்குள் தண்ணீர் சென்றால் அது இன்ஜிற்குள்ளும் சென்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. அதனால் அதை செக் செய்துவிட்டு அதன் பின்பு ஸ்டார்ட் செய்வது நல்லது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் இன்ஜினிற்குள் தண்ணீர் இருக்கும்போது கார் ஸ்டார்ட் செய்யப்பட்டால் இன்ஜின் உள்ளே இருக்கும் தண்ணீர் முழுமையாக இன்ஜினை பாழாக்கிவிடும். இதனால் நீங்கள் ஒட்டுமொத்தமாக காரையே பேரிச்சம் பழத்திற்கு தான் போட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விடும். அதனால் வெள்ள நீர் சூழ்ந்த காரை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வருவதில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.


Click it and Unblock the Notifications









