காருக்கு அடியிலயே அணுகுண்ட வச்சிடுவாங்க! தீபாவளி நேரங்களில் உங்கள் காரை பாதுகாப்பது எப்படி?
தீபாவளி நேரங்களில் குழந்தைகள் ரோட்டில் பட்டாசு வெடிக்கும் போது அது உங்கள் வாகனத்தை சேதப்படுத்த வாய்ப்புள்ளது. தீபாவளி நேரங்களில் உங்கள் வாகனத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டியது முக்கியமாக இருக்கிறது. இதற்கான சில டிப்ஸ்களை தான் இங்கே உங்களுக்கு விரிவாக வழங்கியுள்ளோம். அதைப்பற்றி காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தீபாவளி என்பது மிக முக்கியமான பண்டிகையாக இருக்கிறது. இந்தியா முழுவதும் உள்ள மக்கள் இந்த தீபாவளியை பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடி வருவார்கள். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி என்பது இந்திய மக்களுக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை தரும் பண்டிகையாக இருக்கிறது. இந்த பண்டிகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம்.

இப்படியாக குழந்தைகள் சாலைகளில் பட்டாசு வெடித்து கொண்டாடும்போது நீங்கள் உங்கள் வாகனத்தை சாலையோரம் பார்க் செய்திருந்தாலும் உங்கள் வாகனம் இந்த பட்டாசு காரணமாக சேதமாக வாய்ப்புள்ளது. பண்டிகை காலங்களில் நீங்கள் பட்டாசு வெடிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்கள் வாகனத்திற்கான பிரத்தியேக பாதுகாப்பு தேவை. அதை எப்படி வழங்கலாம்? உங்கள் வாகனம் பட்டாசால் சேதமாகாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என விரிவாக காண்போம்.
கவர் செய்யப்பட்ட பார்க்கிங்: இந்த தீபாவளி நேரங்களில் உங்கள் வாகனத்தை கவர் செய்யப்பட்ட பாதுகாப்பான பாக்கிங் பகுதிகளில் நிறுத்துவது சிறந்தது. வீட்டில் உள்ள மேற்கூரை கொண்ட பாதுகாப்பான பார்க்கிங்கில் பார்க் செய்தால் கார் பாதுகாப்பாக இருக்கும். உங்களுக்கு கவர் செய்யப்பட்ட பார்க்கிங் கிடைக்கவில்லை என்றால் ஏதாவது மரத்திற்கு அடியிலோ அல்லது மேற்குறை இருக்கும் வகையில் ஏதாவது ஒரு இடத்தில் பார்க் செய்யலாம் இது உங்கள் காருக்கு ஓரளவு பாதுகாப்பை தரும்.

பட்டாசு வெடிக்கும் இடங்களில் கார்களின் நிறுத்தாதீர்கள்: நீங்கள் வருடம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உங்கள் காரை பார்க் செய்து வருவீர்கள் ஆனால் தீபாவளி நேரங்களில் அந்தப் பகுதிகளில் உள்ள வீட்டு மக்கள் நீங்கள் பார்க் செய்யும் இடத்திற்கு அருகே பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள்.
இப்படியாக பட்டாசு வெடிக்கும் பகுதிக்கு அருகே உங்கள் கார் நிற்கிறது என்றால் பட்டாசு வெடிக்கும் போது உங்கள் காருக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் பட்டாசு வெடிக்கும் பகுதிக்கு அருகே உங்கள் வாகனங்களை நிறுத்துவதை நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.

கார் கவரை பயன்படுத்தாதீர்கள்: பலர் பட்டாசு தீப்பொறிகள் காரில் பட்டார் ஏதாவது பிரச்சினை ஏற்படும் என கருதி காரை நிறுத்திவிட்டு காரை கவர் போட்டு மூடி விடுவார்கள். ஆனால் தீபாவளி நேரங்களில் காரை இப்படியாக கவர் போட்டு மூடுவது என்பது தவறான விஷயமாகும்.
கார் கவர் பெரும்பாலும் எளிதில் தீப்பற்றக்கூடிய அம்சங்கள் கொண்டதாக இருக்கும். இதனால் உங்கள் கார் கவரில் ஏதாவது பட்டாசு தீப்பட்டால் கார் கவர் எரிந்து அது காரை எரிக்கும் அளவிற்கு சேதத்தை ஏற்படுத்தி விடும். இதனால் தீபாவளி நேரங்களில் காரை கவர் போட்டு மூடுவதை தவிர்க்க வேண்டும்.

தற்காலிக பார்க்கிங்: பலர் வழக்கமாக சாலையோரமாக கார்களை பார்க் செய்து வருவார்கள். இப்படியாக நீங்கள் வழக்கமாக பார்க் செய்யும் இடம் தீபாவளி நேரங்களில் அதிக ஆபத்து நிறைந்த இடமாக நீங்கள் கருதினால் நீங்கள் தற்காலிக பார்க்கிங் பகுதியை தேர்வு செய்வது சிறந்தது.
குறிப்பிட்ட ஒரு வார காலத்திற்கு மட்டும் உங்கள் வாகனத்தை அந்த பார்க்கிங்கில் கொண்டு சென்று விட்டு விட்டு அதற்கான கட்டணத்தை செலுத்தினால் கூட பரவாயில்லை. ஆனால் காரில் ஏதாவது பட்டாசு பட்டு சேதமானால் அதற்கான செலவு அதிகமாகிவிடும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்: வேறு வழியே இல்லை பட்டாசு வெடிக்கும் பகுதியில் தான் உங்கள் காரை பார் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தால், நீங்கள் உங்கள் காரை பார்க் செய்தவுடன் உங்கள் காரை முழுவதுமாக சில புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் வாகனத்திற்கு ஏதாவது சேதம் ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பணத்தை பெற உதவியாக இருக்கும். காரில் எப்படி சேதம் ஏற்பட்டது என்பதை உறுதிப்படுத்த இந்த புகைப்படங்கள் உதவும்.
தீபாவளி நேரங்களில் பட்டாசு வெடிப்பதால் பல வாகனங்கள் சேதமாகி உள்ளன. பட்டாசு வெடிக்கும் ஆர்வத்தில் இருக்கும் பலர் வாகனங்கள் குறித்த பாதுகாப்பு குறித்து யோசிப்பதில்லை. இதனால் பட்டாசு வெடிக்கும் போது அதன் தீப்பொறி அல்லது ஏதாவது சிதறல் வாகனத்தின் மீது பட்டு அது சேதத்தை ஏற்படுத்தக்கூடும். சில சிறுவர்கள் வேண்டுமென்றே காருக்கு அடியில் பட்டாசு வெடித்து விளையாடும் நிலை கூட ஏற்படலாம்.
இதனால் தீபாவளி நேரங்களில் உங்கள் வாகனத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் குறிப்பாக தீபாவளி நேரங்களில் கார்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்துவதால் தேவையில்லாத சேதங்கள் தவிர்க்கப்படும். இதன் மூலம் உங்களுக்கு வரும் பொருளாதார நஷ்டமும் தவிர்க்கப்படும். இதனால் தற்போது நீங்கள் வரப்போகும் நிலைமையை உணர்ந்து கொண்டு உங்கள் வாகனத்தை பாதுகாப்பது தான் சிறந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளி நேரம் மட்டுமல்லாமல் எப்பொழுதும் உங்கள் காரை ஒரு பாதுகாப்பான பார்க்கிங் பகுதியில் நிறுத்துவது தான் எல்லா விதமான ஆபத்துகளில் இருந்தும் உங்கள் வாகனத்தை காக்கும். சாலையோரமாக வாகனத்தை நிறுத்துவது என்பது உங்களுக்கும் இடைஞ்சலாக இருக்கும் உங்களை சுற்றியுள்ள பொதுமக்களுக்கும் இடைஞ்சலாக இருக்கும். இதனால் எப்பொழுதும் நிரந்தரமாக உங்கள் காருக்கான ஒரு பார்க்கின்றேன் தேர்வு செய்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









