வெயில் காலம் வந்தாச்சு! சார்ஜ் செய்வதில் தான் எல்லா தப்பும் ஆரம்பிக்குது - பயப்படாமல் இதை ஃபாலோ பண்ணுங்க!
கோடைக்காலம் (Summer) துவங்கிவிட்டது. வெப்பமான நாடான நம் இந்தியாவில் வெயில் காலம் என்றாலே பல விதங்களில் அசவுகரியங்கள் தான் கடைசியில் மிஞ்சுகின்றன. உடலில் அதிகளவில் ஏற்படும் வியர்வையில் இருந்து, தண்ணீர் பற்றாக்குறை வரையில் என தனிநபர் பிரச்சனையில் இருந்து சமூக பிரச்சனை வரையில் என எல்லாமே கோடைக்காலத்தில் தான் ஏற்படுகிறது. அதேபோன்று, வாகனங்களும் கோடைக்காலத்தில் தான் பாதிப்படைகின்றன. குறிப்பாக, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சவாலான எதிரியாக இருப்பது அதிகமான வெப்பத்தை கக்கும் கோடைக்காலம் ஆகும். சில வருடங்களுக்கு முன்னர், வெயில் காலம் வந்துவிட்டாலே ஆங்காங்கே எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்களை பார்த்திருப்பீர்கள்.
எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனைக்கு அவ்வாறான தீப்பிடிப்பு சம்பவங்கள் பெரும் இடையூறாக அமைந்தன. இதனாலேயே, அதிக வெப்பத்தை தாங்கிக் கொள்ளும் வகையில் எலக்ட்ரிக் வாகனங்களை எவ்வாறு எல்லாம் உருவாக்க முடியும் என்பதை கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு ஆய்வுகள் மற்றும் சோதனைகள் மூலமாக எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன.

இதனால்தான், சமீப காலமாக எலக்ட்ரிக் வாகனங்கள் சாலையில் தீப்பிடித்து எரியும் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. இருப்பினும், கோடைக்காலம் வந்துவிட்டதால் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும் போது கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் அல்லவா... அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.
சார்ஜிங்கின் போது கவனம் தேவை: உங்களது மொபைல் போனை தவறான முறையில் சார்ஜ் செய்தாலோ அல்லது வேறொருவரது சார்ஜரில் சார்ஜ் செய்தாலோ சில சமயங்களில் வழக்கத்தை காட்டிலும் அதிகமாக போன் சூடாகுவதை உணர முடியும். அதேபோன்றுதான், எலக்ட்ரிக் வாகனங்களையும் அவற்றுடன் வழங்கப்பட்ட சார்ஜரில் மட்டுமே சரியாக சார்ஜ் செய்ய வேண்டும்.
எப்போதுமே உங்களது எலக்ட்ரிக் வாகனத்துடன் வழங்கப்பட்ட சார்ஜரையே பயன்படுத்த பாருங்கள். சார்ஜரின் அடாப்டர் அல்லது கேபிள் பழுதாகினால் அதனை சம்பந்தப்பட்ட டீலர்ஷிப் ஷோரூமுக்கு கொண்டு சென்று, அதேபோன்றதான வேறொரு சாரஜரை பெற்று பயன்படுத்தவும். மொபைல் போனில் பயன்படுத்துவது போன்று சார்ஜரை தனியாக வெளியில் வாங்கி பயன்படுத்த வேண்டாம்.

அதேபோல், சார்ஜரை போட்டு நீண்ட நேரத்திற்கு ஆஃப் செய்யும் பழக்கத்தை கைவிடவும். இது உங்களது எலக்ட்ரிக் வாகனத்தின் பேட்டரியை பாதித்து, அதன் ஆயுட்காலத்தை குறைக்கக்கூடும். இன்னும் சொல்லப்போனால், நீண்ட நேரத்திற்கு சார்ஜ் செய்வதால், அந்த இடத்திலேயே வாகனத்திற்குள் இருக்கும் பேட்டரி வெடிப்பதற்கு வாய்ப்புள்ளது. மொபைல் போனை போலவே நம்மில் சிலருக்கு இரவு முழுவதும் எலக்ட்ரிக் வாகனத்தை சார்ஜ் போடும் பழக்கம் உள்ளது.
மொபைல் போனை போலவே, இது எலக்ட்ரிக் வாகனத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், அவ்வாறு இரவு முழுவதும் சார்ஜ் போடும் பழக்கத்தை கைவிடுங்கள். முடிந்தவரையில் வாகனத்தை காலியான மற்றும் காற்றோட்டமான இடத்தில் நிறுத்தி சார்ஜ் செய்யுங்கள். குறுகிய இடத்திற்குள் நிறுத்தியோ அல்லது எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களுக்கு அருகில் நிறுத்தியோ சார்ஜ் செய்வதை தவிர்க்கவும்.
நீண்ட தொலைவிற்கு பயணம் செய்து வந்த பின், சில நிமிடங்களுக்கு பேட்டரியை குளிர்வித்த பிறகு சார்ஜ் செய்யும் பழக்கத்தை பின்பற்ற முயலுங்கள். இந்த வழிமுறைகளை முறையாக பின்பற்றிய போதிலும், எலக்ட்ரிக் வாகனம் சார்ஜ் செய்யும்போது தீப்பிடித்தால், வாகனத்தை காலியான இடத்திற்கு உடனடியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை முன்னெச்சரிக்கை உடன் நினைவில் கொள்ளுங்கள்.

பேட்டரியில் ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டுள்ளனவா என்பதையும் அவ்வப்போது பார்த்து சோதித்துக் கொள்ளுங்கள். எலக்ட்ரிக் வாகனத்தை எவ்வாறு சார்ஜ் செய்வது, வாகனத்தை எவ்வாறு முறையாக பராமரிப்பது என்பதை வாகனத்துடன் தயாரித்த நிறுவனத்தால் வழங்கப்பட்ட புத்தகத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். எவ்வளவு சார்ஜ் போடுவது நல்லது? உங்களது வாகனத்தின் பேட்டரியின் திறன் எவ்வளவு? என்பது போன்ற விபரங்கள் அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கும்.
பார்க்கிங் ஐடியா: உங்களது எலக்ட்ரிக் வாகனத்தை முடிந்தவரையில் நேரடி சூரிய ஒளிக்கு கீழ் நிறுத்த வேண்டாம். நீண்ட நேரத்திற்கு ஒரே இடத்தில் எலக்ட்ரிக் வாகனம் நிற்க போகிறது என்றால், கட்டாயம் ஏதேனும் கட்டிடடங்கள் அல்லது மரத்திற்கு அடியில் நிறுத்த வேண்டும். வெயில் மிகவும் சூடாக இருக்கும் மதிய வேளைகளில் முடிந்தவரையில் சார்ஜ் போட முயற்சிக்காதீர்கள்.
உணவகங்கள், அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தரைத்தளத்தில் பார்க் செய்திருக்கும்போது, அந்த பகுதியில் வெப்பநிலை எந்த அளவிற்கு உள்ளது என்பதை பார்த்து, சார்ஜ் போடலாமா அல்லது வேண்டாமா என முடிவெடுங்கள். இத்தகைய பகுதிகளில் அதிக மின்சாரம் வரும் என்பதால், கொஞ்சம் அதிக கவனமாக இருக்கவும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்கள் பசுமையான போக்குவரத்தை வழங்கக்கூடியவை ஆக கருதப்படுவதால், எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துவதில் நம் இந்திய அரசு உள்பட உலக நாடுகள் பலவும் முனைப்பு காட்டுகின்றன. ஆனால் இதனால், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியின் தேவை அதிகரிக்கும் என்பதால், அவற்றை உருவாக்கும் நிறுவனங்கள் பெருகும் என்பதை மறவாதீர்கள்.
எளிதில் வெப்பமடையாத வகையிலான பேட்டரிகளையும், அவை தொடர்பான தொழிற்நுட்பங்களையும் கண்டுப்பிடிக்கும் முயற்சிகளில் பல இவி நிறுவனங்கள் ஈடுப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போதைக்கு எலக்ட்ரிக் வாகனங்களில் பரவலாக பயன்படுத்தப்படும் பேட்டரிகள் என்றால் அவை லித்தியம்-அயன் (lithium-ion) பேட்டரிகள் ஆகும். பெயரில் அயன் இருப்பதை பார்த்ததும் இரும்பு என நினைத்துவிட வேண்டாம்.

ஏனெனில், லித்தியம்-அயர்ன் (Lithium-iron) என தனியாக ஒரு பேட்டரி உள்ளது. லித்தியம்-அயன் பேட்டரிகள் நிக்கல், கோபால்ட் மற்றும் மாங்கனீசு உள்ளிட்டவற்றால் உருவாக்கப்படுகின்றன. இது அதிக ஆற்றலை சேமித்து வைக்கக்கூடியதாகவும், எடை குறைவானதாகவும் விளங்குகிறது. ஆனால், லித்தியம்-அயர்ன் பேட்டரியை காட்டிலும் லித்தியம்-அயன் பேட்டரிகள் அதிகம் பாதுகாப்பானவை கிடையாது.
ஆனால், லித்தியம்-அயர்ன் பேட்டரிகளை டெஸ்லா போன்ற மிக பெரும் எலக்ட்ரிக் நிறுவனங்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன. ஏனெனில், அவற்றை உற்பத்தி செய்ய அதிகம் செலவாகிறது. அமெரிக்கா, கனடா போன்ற வளமான நாடுகளில் கூட காஸ்ட்லீயான லித்தியம்-இரும்பு பேட்டரிகளை சில சமயங்களில் சரிவர பயன்படுத்த முடிவதில்லை. ஏனெனில், இந்த பேட்டரிகள் அதிக வெப்பத்தில் கூட சிறப்பாக செயல்படும்; ஆனால் அதிக குளிர்ச்சியான பகுதிகளில் சிறப்பாக செயல்படுவது இல்லை.
லித்தியம்-அயர்ன் பேட்டரிகள் நம் இந்தியாவிற்குதான் ஏற்றவை. ஆனால், அவற்றை பெறும் அளவிற்கு நாம் இன்னும் பொருளாதார ரீதியாக வளரவில்லை. எலக்ட்ரிக் வாகனங்கள் என்று மட்டுமின்றி, பொதுவாகவே கோடைக்காலத்தில் வாகனங்களை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ளுங்கள். கோடைக்காலத்தில் காரில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை ஏற்கனவே ஒரு தொகுப்பில் விரிவாக பார்த்திருந்தோம். பார்க்காதவர்கள் அதையும் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications









