டெல்லியில் வந்த மாதிரி நிலநடுக்கம் ஏற்பட்டால் என்ன செய்வது? டிரைவிங்கின் போது இந்த தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க
தேசிய தலைநகர் டெல்லியில் அக்டோபர் 3ஆம் தேதி, செவ்வாய் கிழமை மதிய வேளையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தேசிய நிலநடுக்கவியல் மையத்தின் ஆரம்ப கட்ட மதிப்பீட்டின்படி, இந்த நிலநடுக்கத்தின் அளவு 6.2 ஆகும். பூமிக்கு அடியில் 5 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் நிலைக் கொண்டுள்ளது. ஜப்பான், இந்தோனிஷியா அளவிற்கு இல்லையென்றாலும், நம் இந்தியாவிலும் கணிசமான எண்ணிக்கையில் நிலநடுக்கங்கள் ஒவ்வொரு வருடமும் ஏற்படுகின்றன.
இதற்கேற்ப உலகின் நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ள நாடு என்பதால், இந்தியாவில் ஓட்டுநர்கள் உட்பட ஒவ்வொரு குடிமகனும் பூகம்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போதுமான அறிவைப் பெற்றிருப்பது மிகவும் முக்கியமானது. இந்தக் கட்டுரை பூகம்பங்களின் போது வாகன ஓட்டிகள், குறிப்பாக இந்திய ஓட்டுநர்கள் தங்களது பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்த விரிவான வழிகாட்டியை வழங்குகிறது.

மோசமான வாகன குலுக்கல், நில அதிர்வுகளால் ஏற்படும் சாலை விரிசல்கள், போக்குவரத்து சிக்னல்களைப் பாதிக்கும் மின் தடைகள் போன்றவை பூகம்பங்களின் போது ஓட்டுனர்களை அச்சுறுத்தக் கூடியவைகளாக இருக்கலாம். ஆனால் இந்த சமயத்தில்தான், இந்த அறிகுறிகள் மூலம் பூகம்பத்தை உடனடியாக அடையாளம் காண்வது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முதல் படியாகும்.
நீங்கள் சாலையில் காரில் அல்லது பைக்கில் சென்றுக் கொண்டிருக்கும் போது பூகம்பம் ஏற்பட்டால், கட்டிடங்களுக்கு அப்பால் பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை நிறுத்துவது விபத்துகளையும், வாகனம் சேதமடைவதையும் தடுக்க உதவும். மேலும், நடுக்கம் நிற்கும் வரை வாகனத்திற்குள் இருப்பது பரவலாக பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில், வெட்ட வெளியில் நிற்கும்போது ஏதேனும் மர கொம்பு, கண்ணாடி போன்றவை பறந்து வந்து விழும் பட்சத்தில், அவற்றை உங்கள் கார் தடுத்துவிடும்.

பூகம்பத்திற்குப் பிறகு, உள்ளூர் அதிகாரிகள் சாலைகள் பாதுகாப்பானவை என்பதை உறுதிப்படுத்தும் வரை வாகனம் ஓட்டுவதைத் தவிர்ப்பது நல்லது. மேலும், மலைப்பாங்கான பகுதிகளில் நிலச்சரிவு, பாலம் இடிந்து விழுதல் போன்ற ஆபத்துகள் குறித்து விழிப்புடன் இருக்கவும். நகரங்களில், சேதமடைந்த கட்டிடங்கள் சாலையில் இடிந்து விழலாம் என்பதை உணர்ந்து எச்சரிக்கையாக இருங்கள்.
போக்குவரத்து விளக்குகள் அணைந்தால், முடிந்தவரையில் காரை ஓட்டாமல் பாதுகாப்பான இடத்தில் நிறுத்த முயலுங்கள். அல்லது எதிரே எந்த வாகனமும் வரவில்லையெனில் சாலையின் மத்தியில் மெதுவாக ஓட்டிக் கொண்டு செல்லவும். நிலநடுக்கங்களுக்கு முன்கூட்டியே தயாராக இருப்பது ஒரு உயிரைக் காப்பாற்றும். உணவு, தண்ணீர், முதலுதவி மற்றும் போர்வை போன்ற அத்தியாவசியப் பொருட்களை உள்ளடக்கிய பேரிடர் தயார்நிலைப் பெட்டியை உங்கள் காரில் வைத்திருப்பது அவசரகாலத்தில் பயனுள்ளதாக இருக்கும்.

எதிர்பாராத நிலநடுக்கங்களின் போது வாகனத்தினுள் பாதுகாப்பாக இருப்பதற்கு பழைய டயரை மாற்றுவது உட்பட வழக்கமான வாகன பராமரிப்பு மிகவும் முக்கியமானது. நாட்டின் புவியியல் நிலைப்பாடு காரணமாக நிலநடுக்கங்களுக்கு தயாராக இருப்பது இந்தியர்களுக்கு சந்தேகத்திற்கு இடமின்றி இன்றியமையாதது. நிலநடுக்கங்கள் கணிக்க முடியாதவையாக இருப்பதால், வழிகாட்டுதல்களை கடைபிடிப்பது மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது போன்றவற்றினால் இயற்கை பேரழிவுகளின் போது ஒருவரின் பாதுகாப்பை மேம்படுத்த முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நிலநடுக்கம் அச்சுறுத்தலாகத் தோன்றினாலும், இந்த முன்னெச்சரிக்கைகள் பூகம்பத்தை எதிர்கொள்வதில் ஒரு தைரியத்தையும், பாதுகாப்பையும் வழங்குகின்றன. மேலும், இவை மிகவும் பாதகமான சூழ்நிலைகளில் கூட நீங்கள் பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்பதை உறுதி செய்கின்றன. நிலநடுக்கம் ஏற்பட்டால் முதலில் நீங்கள் என்ன செய்வீர்கள்? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









