ஹேட்ச்பேக் Vs செடான் கார்: சாதக, பாதகங்கள்
வாசகர் கபாலியின் பின்னூட்டத்தின் அடிப்படையில் இந்த செய்தித் தொகுப்பை வழங்குகிறோம். கார் வாங்க முடிவெடுத்துவிட்டால் அதில் பல குழப்பங்கள் ஏற்படுவது இயற்கை. அதில் ஒன்றுதான் ஹேட்ச்பேக் பெஸ்ட்டா அல்லது செடான் பெஸ்ட்டா என்பது.
பயன்பாடு, கையாளுமை, சொகுசு, வசதிகளை பொறுத்து ஹேட்ச்பேக், செடான் கார்களுக்கு இடையில் அதிக வித்தியாசங்கள் இருக்கின்றன. இந்த விபரங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். முதலில் ஹேட்ச்பேக் கார்களையும், இரண்டாவதாக செடான் கார்களின் சாதக, பாதகங்களை ஒப்பிட்டு அலசலாம்.

ஈஸியான டிரைவிங்
செடானை விட குறைவான நீளத்துடன் இருப்பதால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் எளிதாக ஓட்டிச் செல்வதற்கும், சிறிய இடத்தில் பார்க்கிங் செய்வதற்கும் ஹேட்ச்பேக் கார்கள் சிறப்பானதாக இருக்கின்றன. குறிப்பாக, நகர்ப்புறத்துக்கு ஏற்ற கார்களாக ஹேட்ச்பேக் மாடல்கள் விளங்குகின்றன.

விலை
ரூ.2 லட்சம் ஆன்ரோடு விலையிலிருந்து ஹேட்ச்பேக் கார்கள் கிடைக்கின்றன. செடான் கார்களின் விலையை ஒப்பிடும்போது ஹேட்ச்பேக் கார்களின் விலை குறைவாக இருக்கின்றன. பட்ஜெட் வாடிக்கையாளர்களின் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாத விலையில்தான் செடான் கார்களின் விலை இருக்கின்றன.

பராமரிப்பு செலவு
செடான் கார்களை ஒப்பிடும்போது ஹேட்ச்பேக் கார்களின் பாரமரிப்பு செலவு குறைவாகவே இருக்கிறது.

ரிவர்ஸ் எளிது
ஹேட்ச்பேக் கார்களில் பின்புறம் காரை எளிதாக நகர்த்த முடியும்.

இடவசதி குறைவு
பொருட்களை வைப்பதற்கான அதிக இடவசதி கிடையாது. பின் இருக்கையில் பயணிகளுக்கான இடவசதியும் குறைவு.

அதிக இடவசதி
ஹேட்ச்பேக் கார்களைவிட செடான் கார்களின் சேஸீ கூடுதல் நீளம் கொண்டதுடன், வீல் பேஸ் அதிகம். இதன்மூலம், உட்புறத்தில் சற்று கூடுதல் இடவசதி இருக்கும்.

பூட்ரூம்
இதன் மிகப்பெரிய பலமே பூட்ரூம்தான். பொருட்களை வைப்பதற்கு அதிக இடவசதி கொண்ட பூட்ரூம் இருப்பதோடு, அது பாதுகாப்பாக இருப்பதும் கூடுதல் நிம்மதியுடன் பயணிக்கலாம். இதுதவிர, பின்புறமாக மோதல்கள் நிகழ்ந்தால் கூட செடான் கார்களில் பின் இருக்கை பயணிகளுக்கு சற்று கூடுதலான பாதுகாப்பு இருக்கும்.

கையாளுமை
நெடுஞ்சாலைகளில் அதிக வேகத்தில் செல்லும்போது சிறந்த கையாளுமை மற்றும் ஓட்டுதல் சுகத்தை தரும். ஹேட்ச்பேக் கார்களில் இந்தளவுக்கு இருக்காது. இப்போது ஐ20 உள்ளிட்ட ஹேட்ச்பேக் கார்கள் சிறப்பான கையாளுமை கொண்டதாக இருந்தாலும், செடான் அளவுக்கு இருக்காது.

பவர் அதிகம்
ஹேட்ச்பேக் கார்களைவிட செடான் கார்களின் பவர் வெளிப்பாடு, டார்க் ஆகியவையும் சிறப்பாக இருக்கும்.

குறைவான கேபின் நாய்ஸ்
ஹேட்ச்பேக் கார்களில் டிரங்க் ஃபில்டர் வழியாக காருக்குள் சப்தம் ஊடுருவும். ஆனால், செடான் கார்களில் சிறப்பான தடுப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டிருப்பதால் கேபின் நாய்ஸ் குறைவாக இருக்கும்.

அந்தஸ்து
இதையெல்லாம் தாண்டி, அந்தஸ்தின் வெளிப்பாடாகவும் செடான் கார்கள் திகழ்கின்றன. தவிர, கூடுதல் வசதிகளையும் தருவதால் ஹேட்ச்பேக்கை செடான் கார்கள் ஓரங்கட்டுகின்றன.

பார்க்கிங் பிரச்னை
செடான் காரை தேர்வு செய்வதற்கு முன்னர் உங்களது வீட்டிலும், அலுவலகம் அல்லது அடிக்கடி செல்லுமிடங்களில் போதிய பார்க்கிங் வசதி இருக்கிறதா என்பது மிக முக்கியம். மேலும், நெரிசல் மிகுந்த நேரங்களில் செடான் கார்களை ஓட்டும்போது சில சிரமங்களை சந்திக்க வேண்டி வரும்.

பாதக அம்சங்கள்
ஹேட்ச்பேக் காரை விட ரூ.50,000 முதல் பல லட்சங்கள் வரை விலை கூடுதலாக இருக்கின்றன. வீல் பேஸ் அதிகம் என்பதால் வேகத் தடைகள், பள்ளம், மேடான சாலைகளில் சற்று கவனமாக ஓட்ட வேண்டியது அவசியம்.

டிரைவ்ஸ்பார்க் தீர்ப்பு
சிறப்பான கையாளுமை, பயணிகள் மற்றும் பொருட்கள் வைக்க அதிக இடவசதி தேவை என்போரும், பட்ஜெட், பார்க்கிங் பிரச்னை இல்லை என்போருக்கும் தாராளமாக செடான் காரையே தேர்வு செய்யலாம். நகர்ப்புற பயன்பாட்டுக்கு, பராமரிப்பு செலவு குறைவாக இருக்க வேண்டும், பட்ஜெட் காரை வேண்டுவோர்க்கு ஹேட்ச்பேக் காரை தேர்வு செய்வதே சிறப்பானதாக இருக்கும். முதல் கார் வாங்குவோர்க்கும், புதிதாக டிரைவிங் கற்றுக் கொண்டு ஓட்டுவோர்க்கும் ஹேட்ச்பேக் காரை தேர்வு செய்வதே பெஸ்ட்.


Click it and Unblock the Notifications








