கீழே இருந்து பார்க்கும்போது ஒன்னுமே தெரியாது... இது எல்லாம் தெரிந்தால் உங்க விமான பயணமே மாறிடும்
நமக்கு எப்போதுமே ஒரு வித ஆச்சிரியத்தை தருபவைகளும் விமானங்களும் ஒன்றாகும். ஏனெனில், பல டன் கணக்கில் எடை கொண்ட விமானங்கள் (Airplanes) புவியீர்ப்பு விசையை ஏமாற்றி எவ்வாறு அவ்வளவு அடி உயரத்தில் பறக்கின்றன என்பது விமானங்களை உருவாக்க ஆரம்பித்து 120 வருடங்களை கடந்த போதிலும் இன்னமும் ஆச்சிரியமாக உள்ளது.
விமானங்கள் வானில் பறப்பதற்கு நான்கு முக்கிய விசைகள் காரணங்களாக அமைகின்றன. அவை, தூக்குவிசை (Lift), எடை (Weight), உந்துவிசை (Thrust) மற்றும் இழுவிசை (Drag) என்பன ஆகும். இந்த விசைகள் சமநிலையில் செயல்படும் போதுதான் ஒரு விமானம் சீராகப் பறக்க முடியும்.

தூக்குவிசை என்பது விமானத்தை மேல்நோக்கித் தள்ளும் சக்தி ஆகும். இது விமானத்தின் இறக்கைகளால் உருவாக்கப்படுகிறது. இறக்கைகளுக்கு அடியில் உள்ள காற்றழுத்தம், மேலே உள்ள காற்றழுத்தத்தை விட அதிகமாக இருப்பதால், விமானம் மேல்நோக்கி உந்தப்படுகிறது. இதற்கடுத்து உள்ள எடை என்பது புவியீர்ப்பு விசையால் விமானத்தை கீழ்நோக்கி இழுக்கும் சக்தி ஆகும்.
உந்துவிசை என்பது விமானத்தை முன்னோக்கி நகர்த்தும் சக்தி ஆகும். இது விமானத்தின் என்ஜின்களால் உற்பத்தி செய்யப் படுகிறது. இழுவிசை என்பது விமானத்தின் இயக்கத்தை எதிர்க்கும் காற்றின் தடை ஆகும். இந்த நான்கு விசைகளும் ஒன்றையொன்று சமன் செய்யும் போதே விமானம் பறக்கிறது.

ஒரு விமானம் டேக்-ஆஃப் (Take-off) ஆகி வானில் காற்றில் நிலை நிறுத்தப்பட, தூக்குவிசை அதன் எடையைவிட அதிகமாகவோ அல்லது அதற்குச் சமமாகவோ இருக்க வேண்டும். அதேபோல், விமானம் முன்னோக்கி நகர, உந்துவிசை இழுவிசையைவிட அதிகமாகவோ அல்லது அதற்குச் சமமாகவோ இருக்க வேண்டும்.
விமானம் ஒரே உயரத்தில் மாறாத வேகத்தில் பறக்கும்போது, தூக்குவிசை எடையையும், உந்துவிசை இழுவிசையையும் துல்லியமாக சமன் செய்யும். இந்த சமநிலை மிகவும் அவசியம். அப்போதுதான் எந்தவொரு அதிர்வுகளும் இன்றி விமானம் ஒரே உயரத்தில் சீராக பறக்க முடியும். அவ்வளவு அதிகமான எடையை தரையில் தூக்குவதற்கான தூக்குவிசை எவ்வாறு உருவாகிறது என்பதைப் பார்ப்போம்.

விமானத்தின் இறக்கைகள் 'ஏர்ஃபாயில்' (Airfoils) என அழைக்கப்படும் சிறப்பு வடிவத்தைக் கொண்டுள்ளன. இறக்கையின் மேல் பகுதி வளைந்தும், கீழ் பகுதி ஒப்பீட்டளவில் தட்டையாகவும் இருக்கும். விமானம் முன்னோக்கிச் செல்லும்போது, காற்று இறக்கையின் மேலும் கீழும் பாய்கிறது. வளைந்த மேல் பகுதி வழியாக காற்று வேகமாகப் பயணிக்கும்.
இதனால், பெர்னோலி (Bernoulli) தத்துவத்தின்படி, இறக்கையின் மேல் பகுதியில் காற்றழுத்தம் குறைகிறது. இறக்கைக்குக் கீழே காற்றழுத்தம் அதிகமாக இருப்பதால், இந்த அழுத்தம் விமானத்தை மேல்நோக்கித் தள்ளி, தூக்குவிசையை உருவாக்குகிறது. சுருக்கமாகச் சொன்னால், தரைக்கும் விமானத்தின் இறக்கைகளுக்கும் இடையே காற்று முக்கிய பங்காற்றுகிறது.

ஆனால், இந்த காற்று விசையை பயன்படுத்த வேண்டுமெனில், விமானத்தை ஒரே இடத்தில் நிறுத்த கூடாது. இதற்காக இறக்கைகளில் பொருத்தப்படும் என்ஜின்கள் உந்துவிசையை உருவாக்கி விமானத்தை முன்னோக்கித் தள்ளுகின்றன. இந்த இயக்கம், தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட இறக்கைகள் மீது காற்றைப் பாயச் செய்து, விமானத்தை வானில் பறக்க வைக்கும் தூக்குவிசையை உருவாக்குகிறது.
விமானம் எந்தவொரு பிரச்சனையும் இன்றி பறக்க, விமானத்தை கீழே நோக்கி இழுக்கும் புவியீர்ப்பு விசையை விட அதிகமாக என்ஜின்கள் செயல்பட வேண்டும். மேலும் இறக்கைகள் விமானத்தின் எடையைவிட அதிக தூக்குவிசையை உருவாக்க வேண்டும். இது இரண்டும் ஒரே பேலன்ஸில் இருந்தால் மட்டுமே தடையற்ற மற்றும் அசவுகரியமற்ற விமான போக்குவரத்து கிடைக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சவுகரியமான விமான பயணம் எனும்போது, கடந்த 120 ஆண்டுகளில் விமானங்கள் பல பரிணாம வளர்ச்சியை கண்டு, இன்று உலகில் அதிக மக்கள் பயன்படுத்தும் பொது போக்குவரத்து முறையாக மாறியுள்ளது. மேலே கூறப்பட்ட அடிப்படை விஷயங்களை மையமாக வைத்து எவ்வாறு எல்லாம் விமானங்களின் வடிவமைப்பில் பரிணாம வளர்ச்சியை அடையலாம் என்பது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகையால், மேற்கூறப்பட்ட அடிப்படை விமான இயக்கம் குறித்த விஷயங்களில் கூட வரும் காலங்களில் மாற்றங்கள் நிகழலாம்.


Click it and Unblock the Notifications









