கோடையில் டயர் வெடிக்கும் அபாயம்... நெடுஞ்சாலையில் காரில் பயணிப்போர் உஷார்...!!
காரில் டயர் வெடிப்பதற்கான காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் இந்த செய்தியில் காணலாம்.
ஆந்திர மாநிலம், கஜ்ரம்பள்ளி என்ற இடத்தில் லாரியுடன் இன்னோவா கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், அனந்த்பூரில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தின் துணை வேந்தர் சர்கார் உயிரிழந்தார். இந்த விபத்தில் சர்காரின் கார் ஓட்டுனர் மற்றும் அவரது உதவியாளரும் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் இப்போது கிடைத்துள்ளன. காரின் டயர் வெடித்ததாலேயே இந்த விபத்து நிகழ்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதுபோன்று டயர் வெடித்து கார் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் கோடை காலத்தில் வழக்கமான விஷயமாகிவிட்டது.

மணிக்கு 100 கிமீ வேகத்தில் அந்த இன்னோவா கார் பயணித்துக் கொண்டிருந்தபோது முன்சக்கர டயர் வெடித்து, கார் கட்டுப்பாட்டை இழுந்துவிட்டது. அப்போது, சாலையில் நடுவில் இருந்த தடுப்பை தாண்டி பாய்ந்து சென்று, மறுபுறத்தில் எதிரில் வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் இன்னோவா காரின் முன்பக்கம் லாரியின் கீழ் பகுதியில் சொருகி பலத்த சேதமடைந்தது. அதில் பயணித்த மூன்று பேருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கிரேன் உதவியுடன்தான் காரில் இருந்தவர்களின் உடல் வெளியில் எடுக்கப்பட்டது.

இதுபோன்ற கோரமான விபத்துக்கள் நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு பேரதிர்ச்சியை தருவதாக இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை அடிப்படையாக வைத்து, இதுபோன்ற விபத்துக்களை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் அவ்வப்போது வாசகர்களுடன் பகிர்ந்து வருகின்றது.

இந்த நிலையில், கொளுத்தும் வெயிலுடன் கோடையின் அறிகுறிகள் துவங்கியுள்ள இந்த தருணத்தில் இதுபோன்ற விபத்துக்களை தவிர்ப்பதற்கு சில வழிமுறைகளை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

டயர் வெடிப்பதற்கு மிக முக்கிய காரணம், டயரில் காற்றழுத்தம் சரியான அளவில் இல்லாமல் இருப்பதே காரணம். டயரில் காற்று அழுத்தம் குறைவாக இருக்கும்பட்சத்தில் தரையுடன் டயரின் உராய்வு அதிகமாகிவிடும். இதனால், டயர் வழக்கத்தைவிட அதிக வெப்பமடையும். இது டயர் வெடிப்பதற்கு முக்கிய காரணமாகிறது. எனவே, பயணத்தை துவங்குவதற்கு முன் டயரில் காற்றழுத்தம் சரியாக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

நீண்ட தூரம் ஓடி தேய்ந்து போன டயர்கள் அல்லது கூர்மையான பொருட்களால் சேதமடைந்த டயரில் ஏதேனும் குறைபாடு இருந்தாலும் இதுபோன்று விபத்துக்களுக்கு வழிகோலும். எனவே, அதுபோன்ற டயர்களை உடனடியாக மாற்றிவிட்டு பயணத்தை துவக்குங்கள்.

அதிக பாரத்துடன் நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் பயணிக்கும்போதும் இதுபோன்ற விபத்துக்களுக்கு காரணமாக அமையும். ஒவ்வொரு டயரும் குறிப்பிட்ட பாரத்தை தாங்கிக் கொண்டு செல்லும் திறன் கொண்டது. எனவே, அளவுக்கு அதிகமான பாரத்துடன் செல்வதும் டயரில் அழுத்தம் அதிகரித்து டயர் வெடிக்கும் அபாயம் உள்ளது.

அதிவேகத்தில் செல்வதை தவிர்த்தலும் நலம். மேலும், இரண்டு மணிநேரத்திற்கு ஒருமுறை காரை நிறுத்தி மீண்டும் பயணத்தை தொடர்வதும் பலன் தரும். இது எஞ்சின் மற்றும் டயரில் அதிகப்படியான சூடு ஏற்படுவதை தவிர்க்கும்.

டயர்களை மாற்றும்போது தரமான டயர்களை வாங்கி பொருத்துவது அவசியம். குறிப்பாக, சீனாவிலிருந்து இப்போது அதிக அளவில் டயர்கள் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படுகிறது. அதுபோன்ற தரம் குறைந்த டயர்களை தவிருங்கள். விலை குறைவாக இருக்கிறதே என்று அந்த டயர்களை வாங்குவதை தவிர்க்கவும்.

ஒருவேளை கார் ஓடிக் கொண்டிருக்கும்போது டயர் வெடித்துவிட்டால் என்ன செய்வது என்ற சந்தேகம் எழும். அவ்வாறான சமயத்தில் பதட்டப்படாமல், ஸ்டீயரிங் வீலை எந்த பக்கமும் திருப்பாமல் அப்படியே இறுக பிடித்துக் கொள்ளுங்கள்.

சடன் பிரேக் அடிப்பதை தவிர்த்து, நிதானமாக பிரேக் பிடித்து காரை நிறுத்த முயற்சிப்பதுடன், இன்டிகேட்டர்களை ஒளிர செய்து பின்னால் வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுப்பதும் அவசியம். ஸ்டீயரிங் வீலை கெட்டியாக பிடித்து கன்ட்ரோல் வந்துவிட்டால், வண்டியின் வேகத்தை படிப்படியாக குறைத்து பாதுகாப்பாக நிறுத்தவும்.
1,2 Photo Source: Deccan Chronicle


Click it and Unblock the Notifications








