சிறந்த டூ வீலர் ரைடராக உங்களை மாற்றிக்கொள்வதற்கான 10 வழிகள்!
சில நாட்களுக்கு முன் டூ வீலரை கற்றுக் கொள்வது எப்படி என்பது குறித்த சில அடிப்படைத் தகவல்களின் செய்தித் தொகுப்பை வழங்கியிருந்தோம். அதை படித்து பார்த்து ஓரளவு பயிற்சி பெற்று நம்பிக்கையுடன் டூ வீலரை கற்றுக்கொண்டுவிட்டீர்கள். டூ வீலரை கற்றுக் கொண்டால் மட்டும் போதாது. சாலைகளில் செல்லும்போது சிறந்த டூ வீலர் ஓட்டுனராக உங்களை மேம்படுத்திக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும் அல்லவா?
இந்த செய்தித் தொகுப்பிலும் சில அடிப்படை விஷயங்களை மனதில் வைத்து சிறந்த டூ வீலர் ரைடராக உங்களை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிகாட்டு முறைகளை வழங்கியுள்ளோம். மனதில் வைத்து அடுத்தக் கட்டதிற்கு உங்களை மாற்றிக் கொள்ளலாம் வாருங்கள்.

01.புதிய டூ வீலர்
டிரைவிங் ஸ்கூல், வீட்டிலிருப்பவர்கள் அல்லது நண்பர்களின் டூ வீலர் மூலமாக ஓரளவு நன்றாக கற்றுக் கொண்ட பிறகு புதிய டூ வீலரை வாங்குவதுதான் அடுத்த ஸ்டெப். உங்களது பயன்பாடு, பட்ஜெட், விருப்பம், உங்களது உடல் அமைப்புக்கு பொருத்தமான டூ வீலரை தேர்வு செய்து கொள்ளுங்கள். புதிய டூ வீலரை வாங்கிய பின்னர் என்னென்ன செய்து உங்களை மேம்படுத்திக் கொள்ளலாம் என்பதை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் பார்க்கலாம்.

02. ஓனர்ஸ் மேனுவல்
புதிய டூ வீலர் வாங்கிய பின்னர் அதன் உரிமையாளர் வழிகாட்டு கையேட்டை நிதானமாக வாசிக்கவும். அதில், கொடுக்கப்பட்டிருக்கும் ஓட்டுதல் முறைகள், பராமரிப்பு உள்ளிட்ட விஷயங்களை கவனமாக படித்து மனதில் பதிய வையுங்கள்.

03. சிட்டியில் ஓட்டும்போது...
சரியாக பழகாதவர்கள் வண்டியின் முன்புறம், பின்புறத்தில் L ஸ்டிக்கரை ஒட்டுவது அவசியம். நகரத்தில் ஓட்டும்போது சாலையின் போக்குவரத்து நெரிசலுக்கு தகுந்த வேகத்தில் ஓட்டப் பழக வேண்டும். எப்போதும் இடது புறத்தை பின்பற்றவும். சில சாலைகளில் மோட்டார்சைக்கிளுக்கான தடம் எது என்பதை தெரிந்துகொண்டு செல்ல வேண்டும். நன்றாக பழகும் வரை முடிந்தவரை பிற வாகனங்களை முந்துவதை தவிர்க்கவும். தடம் மாறும்போது, வளைவுகளில் திரும்பும்போது இன்டிகேட்டர் விளக்குகளை தவறாமல் எரிய விட்டு எச்சரித்த பின்னர் மாற வேண்டும்.

04. நெடுஞ்சாலையில்...
போக்குவரத்து மிகுந்த நகரச்சாலைகளைவிட நெடுஞ்சாலைகளில் ஓட்டுவது எளிதுதான். ஆனால், இங்கு வாகனங்கள் அதிவேகத்தில் செல்லும் என்பதால் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும். ரியர் வியூ கண்ணாடிகளை சரியான கோணத்தில் வைத்து பின்னால் வரும் வாகனங்கள் குறித்து விழிப்புடன் செல்வது அவசியம். மேலும், அந்த சாலையின் வேக வரம்புக்குள் செல்ல வேண்டும்.

05. வளைவுகளில்...
வளைவுகளில் டூ வீலர்களை லாவகமாக திருப்புவது ஒரு கலைதான். டூ வீலரை கற்றுக் கொண்டிருப்பவர்கள் வளைவுகளில் மிகுந்த நிதானமாக செல்ல வேண்டும். வேகத்தை குறைத்து கியரை சரியான அளவில் குறைத்து வளைவுகளில் திரும்ப வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலை சந்திப்புகளில் கடக்கும்போது அருகில் வரும் வாகனங்களுடன் போட்டி போடாதீர்கள்.

06. கரடுமுரடான சாலைகள்
சிறு கற்களும், மேடு பள்ளங்களும் நிறைந்த சாலைகளில் குறைந்த கியர்களிலேயே இயக்குவது கூடுதல் பேலன்ஸ் தரும். மனதை கட்டுப்பாடாக வைத்து மிக நிதானமாகவும், கவனமாகவும் ஓட்ட வேண்டும். சிலசமயம் கற்களில் ஏறும்போது நிலை தடுமாறி கீழே விழுந்துவிட வாய்ப்புண்டு.

07. ஈரமான சாலைகளில்...
நன்கு ஓட்டத் தெரிந்தவர்கள் கூட பம்முவது ஈரமான அல்லது மழை பெய்த சாலைகளில் ஓட்டுவதற்குதான். குறிப்பாக, லேசான தூறல் இருக்கும் சமயத்தில் டூ வீலர் மட்டுமின்றி, எந்தவொரு வாகனமும் வழுக்கிவிடும். எனவே, சீரான வேகத்தில் செல்லவும். வளைவுகளில் நிச்சயம் கூடுதல் கவனத்துடன் ஓட்டுங்கள்.

08. ஹய்யா... ரோடு காலியா இருக்கு...!!
நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி சுண்ணாம்பான பலர், விடுமுறை தினங்கள் மற்றும் இரவு நேரங்களில் சாலை வெறிச்சோடி இருப்பதால் அதிவேகத்தில் செல்ல முயற்சிக்க வேண்டாம். ஏனெனில், விலங்குகள், பாதசாரிகள், பிற வாகன ஓட்டிகளும் சாலை காலியாக இருப்பதாக நினைத்துக்கொண்டு குறுக்கே வந்துவிடும் ஆபத்து உள்ளது.

09. பராமரிப்பு
டூ வீலர் எந்த தொந்தரவும் கொடுக்காமல் தினசரி சிறப்பான பயணத்தை அனுபவத்தை பெறுவதற்கு சில அடிப்படை பராமரிப்புகளை தொடர்ந்து செய்ய வேண்டும். டயரில் காற்றழுத்தம், ஆயில் லெவல், விளக்குகள் போன்றவற்றை அவ்வப்போது சோதித்துக் கொள்ளுங்கள்.

10. டபுள்ஸ்
பின்னால் ஒருவரை அமர வைத்துக் கொண்டு போக்குவரத்து நெரிசலில் ஓட்டும்போது எச்சரிக்கையாக ஓட்ட வேண்டும். தனியாக ஓட்டும்போது இருக்கும் அளவுக்கு சவுகரியம் இருக்காது. எனவே, டபுள்ஸ் செல்லும்போது மிக நிதானமாக ஓட்டுங்கள். மேலும், தரமான ஹெல்மெட்டை வாங்குவதுடன், அதை டூ வீலர் ஓட்டும்போது அணிந்து செல்ல மறக்காதீர்.

11. போக்குவரத்து விதிகள்
எந்தவொரு சாலையில் செல்லும்போதும் அந்த சாலையின் எச்சரிக்கை குறியீடுகள் மற்றும் வேக வரம்புகளை மதித்து ஓட்டிச் செல்லுங்கள். போக்குவரத்து விதிகளை மீறுவோரை கண்டு, நரம்பு புடைத்து நீங்களும் அந்த தவறை செய்யாதீர்கள்.

12. வண்டியின் பேலன்ஸ்
புதிய டூ வீலரை ஓட்டும்போது அதன் பேலன்ஸ் பிடிபட அட்லீஸ்ட் 15 நாட்கள் வேண்டும். எனவே, நீங்கள் புதிதாக வாங்கிய வண்டியோ அல்லது நண்பர்களின் வேறு மாடல் டூ வீலரை ஓட்டும்போதும் கவனமாக இருத்தல் அவசியம்.


Click it and Unblock the Notifications








