நம்மில் நிறைய பேர் கிட்ட இருக்குறது எஸ்யூவி கார்கள் தான்... ஈசியா ஓட்டிடலாம்னு பலர் இந்த தப்பை பண்றாங்க!
ஒரு காலத்தில் எல்லாம் சாலை முழுக்க செடான் (Sedan) & ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களாகவே சுற்றிக் கொண்டிருந்தன. ஆனால், தற்போது எஸ்யூவி கார்களின் எண்ணிக்கை தான் மக்களின் பயன்பாட்டில் அதிகமாக உள்ளது. மாருதி சுஸுகி நிறுவனமும் புதியதாக 'விக்டோரிஸ்' (Victoris) என்கிற காம்பெக்ட் எஸ்யூவி (Compact SUV) காரை அறிமுகம் செய்துள்ளதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். செடான், ஹேட்ச்பேக் கார்களை ஓட்டுவதை காட்டிலும் எஸ்யூவி கார்களை ஓட்டும்போது என்னென்ன மாதிரியான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை பற்றி இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.
வளைவுகளில் நிதானம் தேவை: எஸ்யூவி (SUV) ரக கார்களில் மைய ஈர்ப்பு விசை அதிகமாக இருக்கும் என்பதால், வளைவுகளில் வேகமாக திரும்பும்போது கார் ஒருபக்கமாக சாய்வதற்கு வாய்ப்புள்ளது. எனவே வளைவுகளில் திரும்பும்போது காரை மெதுவாக இயக்குவது அவசியமாகும். ஏனெனில், மெதுவாக செல்லும்போதுதான் பிரேக் & க்ளட்ச் பெடல்களை கொடுக்க போதுமான நேரம் கிடைக்கும்.

சாலைகளில் வேகத்தடைகள் மற்றும் பள்ளங்களில் கவனம் தேவை: வளைவுகளில் திரும்புவதை போன்று, எஸ்யூவி கார்களில் செல்கிறீர்கள் என்றால் சாலைகளில் உள்ள வேகத்தடைகள் மற்றும் பள்ளங்களில் இறங்கி ஏறும்போதும் கவனம் தேவை. ஏனெனில், இவற்றை அணுகும்போதும் காரில் குலுக்கல்கள் ஏற்பட்டு, கார் டிரைவரின் கண்ட்ரோலை இழப்பதற்கு வாய்ப்புள்ளது.
அதுமட்டுமின்றி, பொதுவாகவே எஸ்யூவி கார்கள் உயரமாக இருப்பினும், காம்பெக்ட் எஸ்யூவி கார்கள் அளவில் சிறியவை என்பதால் பள்ளம், மேடுகளில் இறங்கி ஏறும்போது காருக்கு அடியில் சேதமடைவதற்கு வாய்ப்புள்ளது. எஸ்யூவி கார் என்பதாலேயே கிரவுண்ட் கிளியரென்ஸ் (Ground Clearance) அதிகமாக இருக்கும் என்பதால், சாலையின் பள்ளம், மேடுகளை பெரியதாக கண்டுக் கொள்ளாமல் அஜாக்கிரதையாக கடந்து செல்ல முற்படுவோம். இந்த அஜாக்கிரதையே விபத்துக்களை ஏற்படுத்த கூடும்.

யு-டர்ன்களில் இன்னும் கவனம் தேவை: எஸ்யூவி கார்களில் செல்லும்போது எந்த நேரத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றால், யு-டர்ன்களில் திரும்பும்போது தான். இதற்கு காரணம், ஏற்கனவே கூறியதுதான்... மொத்தமாக 180 டிகிரிக்கு திரும்பும்போது கார் ஒருபக்கமாக சாய்வதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல், யு-டர்னில் மெதுவாக திரும்ப வேண்டியிருக்கும் என்பதால், அதற்கேற்ப முன்கூட்டியே இண்டிகேட்டர்கள் மற்றும் மிரர்களை முறையாக பயன்படுத்துவது அவசியமாகும்.
ஸ்டேரிங் சக்கரத்தை மென்மையாக அணுகவும்: செடான் (Sedan), ஹேட்ச்பேக் (Hatchback) போன்று இல்லாமல், எஸ்யூவி கார்களில் ஸ்டேரிங் சக்கரத்தை அணுகும்போது கூடுதல் கவனம் தேவை. ஏனெனில், எஸ்யூவி கார்கள் லாரிகளை போன்றவை. அவற்றில் ஸ்டேரிங் சக்கரத்தை வேகமாக திருப்ப வேண்டிய தேவை இருக்காது. ஸ்டேரிங் சக்கரத்தை வேகமாக திருப்பினால், காரின் எடை மொத்தமும் ஒருபக்கமாக சாயும்.

பூட் ஸ்பேஸ் (Boot Space) பகுதியை சரியாக அடுக்கவும்: காரின் பின்பக்கத்தில் பூட் ஸ்பேஸ் பகுதியில் பொருட்களை வைக்க போகிறீர்கள் எனில், அவற்றை சரியாக அடுக்கி வைத்து காரின் எடை பேலன்ஸை ஒரே மாதிரியாக இருக்குமாறு பேணவும். அதேபோல், காரின் மேற்கூரையில் பொருட்களை கட்டி வைப்பதாக இருந்தாலும், ஒரே நேர்த்தியாக அடுக்கி வைக்கவும்.
காரை பற்றி அறிந்திருத்தல்: காரை எந்த அளவிற்கு சிறப்பாக ஓட்டுவதற்கு கற்று வைத்திருந்தாலும், ஓட்டும் எஸ்யூவி காரின் பண்புகளை பற்றி அறிந்து வைத்திருத்தல் அவசியமாகும். ஏனெனில், ஒரே மாதிரியான காம்பெக்ட் எஸ்யூவி காராக இருப்பினும், காருக்கு கார் வேகம், பிரேக் & சஸ்பென்ஷன் திறன் உள்ளிட்டவை மாறுப்பட கூடும். அவற்றை அறிய காருடன் சேர்த்து கார் நிறுவனம் வழங்கும் மேனுவல் புத்தகத்தை ஆராயலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: செடான் மற்றும் ஹேட்ச்பேக் கார்கள் தாழ்வான உடலமைப்பை கொண்டவை. இதனால், அவற்றின் கேபினுக்குள் போதுமான இடவசதி கிடைப்பது இல்லை என்றாலும், அவற்றை ஹேண்ட்லிங் செய்வது எளிமையானதாக உள்ளது. அதுவே, எஸ்யூவி கார்களுக்கு உள்ளே அதிக இடவசதி கிடைத்தாலும், எஸ்யூவி கார்களை ஹேண்ட்லிங் செய்வது சற்று கடினமானதாக உள்ளது. இருப்பினும், தொடர்ச்சியாக எஸ்யூவி கார்களை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டால், அதனை பழக்கமாக்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications









