நவராத்திரியில் புது கார் வாங்குறது இதுக்குதானா? ஷோரூமுக்கு போகும் முன்ன தெரிந்துக் கொள்ள வேண்டியவை!
இந்தியாவின் முக்கியமான மற்றும் நீண்ட நாட்களுக்கு கொண்டாடப்படும் பண்டிகைகளுள் ஒன்று நவராத்திரி (Navratri) ஆகும். இந்து மக்கள் கொண்டாடும் பண்டிகையான நவராத்திரி ஒவ்வொரு வருடமும் 10 நாட்களுக்கு கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டில் செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் நவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
நம் மக்களுக்கு பொதுவாகவே பண்டிகை சமயத்தில் தான் புதிய வாகனங்களை வீட்டிற்கு கொண்டுவர விருப்பம் தோன்றும். அந்த வகையில், இந்த நவராத்திரிக்கு சரியான காரைத் தேர்ந்தெடுக்க, முதலில் உங்கள் தேவைகளையும் பட்ஜெட்டையும் வரையறுக்க வேண்டும். அதன்பின் பல்வேறு கார் வகைகள், எரிபொருள் ஆப்ஷன்கள் மற்றும் அவற்றின் பாதுகாப்பு அம்சங்களை மதிப்பிட வேண்டும்.

புதிய வாகனங்களை வாங்குவதற்கு உகந்த காலமான நவராத்திரியில் வாடிக்கையாளர்களை மேலும் ஈர்க்க இந்த நேரத்தில் கார் உற்பத்தி நிறுவனங்கள் சிறப்பு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவிப்பது உண்டு. எந்த காரை வாங்குவது என உங்கள் தேடலைத் தொடங்கும் முன் ஒரு யதார்த்தமான பட்ஜெட்டை நிர்ணயிக்கவும். ஷோரூம் விலையைத் தாண்டி, சாலை வரி, காப்பீடு, ஆக்சஸரீஸ்கள், எரிபொருள் மற்றும் பராமரிப்புச் செலவுகள் உள்ளிட்ட மொத்த உரிமையாளர் செலவையும் கணக்கில் கொள்ளவும்.
உங்கள் தேவைகளை மதிப்பாய்வு செய்யுங்கள்: கார் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். இது தினசரி நகர பயணத்திற்கா அல்லது அடிக்கடி நீண்ட தூர பயணங்களுக்கு பயன்படுத்துவீர்களா? உங்களுக்கு ஒரு காம்பாக்ட் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார் தேவையா அல்லது வளர்ந்து வரும் குடும்பத்திற்கு ஏற்ப விசாலமான செடான் (Sedan) அல்லது எஸ்யூவி (SUV) கார் தேவையா என்பதை முடிவு செய்யுங்கள்.

உங்கள் நிதி திட்டத்தை வகுத்துக் கொள்ளுங்கள்: நீங்கள் கார் கடன் வாங்க திட்டமிட்டால், டீலர்ஷிப் ஷோரூமுக்குச் செல்வதற்கு முன் நிச்சயமாக கடனுதவி கிடைக்குமா என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள். மேலும், பல்வேறு வங்கிகளின் கடன் விதிமுறைகளையும் வட்டி விகிதங்களையும் ஒப்பிடுங்கள், ஏனெனில் பண்டிகை காலத்தில் வங்கிகளும் கார் கடனுக்கான சலுகைகளை வழங்கலாம்.
கார் வகைகள் & அம்சங்களை ஆய்வு செய்யுங்கள்: உங்கள் பட்ஜெட் மற்றும் தேவைகள் தெளிவாகியவுடன், காரின் விவரங்களில் கவனம் செலுத்துங்கள். காம்பாக்ட்டான உடலமைப்பின் காரணமாக நகரப் பயணத்திற்கு ஹேட்ச்பேக் கார்கள் சிறந்த தேர்வாகும். ஏனெனில், ஹேட்ச்பேக் கார்கள் ஓட்டுவதற்கும் பார்க்கிங் செய்வதற்கும் எளிதாக இருக்கும்.

அதேநேரம், செடான் கார்கள் அதிக வசதிகளையும், பயணிகள் கால் வைப்பதற்கு போதுமான இடவசதியையும், பெரிய பூட் ஸ்பேஸையும் வழங்குகின்றன. இதனால் செடான் கார்கள் நீண்ட பயணங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகின்றன. எஸ்யூவி ரக கார்கள் விசாலமான கேபினையும், சிறந்த சாலைப் பார்வைக்கு உயர்ந்த இருக்கை பொசிஷனையும் வழங்குகின்றன. கரடுமுரடான நிலப்பரப்பிற்கு இவை மிகவும் பொருத்தமானவை, சாகச விரும்பிகளுக்கும் பெரிய குடும்பங்களுக்கும் எஸ்யூவி கார்கள் பொருத்தமான தேர்வாக அமைகின்றன.
எரிபொருள் வகை: மாதத்திற்கு 1,200 கிலோமீட்டருக்கும் குறைவாகப் பயன்படுத்தும் ஓட்டுநர்களுக்கு பெட்ரோல் கார்கள் (Petrol Cars) பொருத்தமானது. இவை பொதுவாக வாங்குவதற்கு மலிவானவை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவுகளைக் கொண்டவை. மாதத்திற்கு 1,500 கிலோமீட்டருக்கும் அதிகமான நீண்ட தூரப் பயணங்களுக்கு சிறந்த எரிபொருள் சிக்கனம் காரணமாக டீசல் கார்கள் ஏற்றதாக இருக்கும்.

இருப்பினும், டீசல் கார்களை வாங்குவதற்கும் பராமரிப்பதற்கும் செலவு அதிகமாக இருக்கும். அதேபோல், நகரத்தில் வசிப்பவர்களுக்கு செலவு குறைந்த மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விருப்பமாக சிஎன்ஜி/ எலக்ட்ரிக் கார்கள் (CNG/ Electric Cars) இருக்கும். குறிப்பாக சார்ஜிங் அல்லது சிஎன்ஜி நிலையங்களை எளிதாக அணுக முடிபவர்களுக்கு.
கியர்பாக்ஸ் தேர்வு: மேனுவல் கியர்பாக்ஸ் அதிக கண்ட்ரோலை வழங்குகிறது மற்றும் பொதுவாக மிகவும் மலிவானது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்கள் ஓட்டுவதற்கு எளிதானவை மற்றும் மிகவும் வசதியானவை, குறிப்பாக நகரத்தின் கடும் போக்குவரத்து நெரிசலில். ஆனால், அதற்கேற்ப அவற்றின் விலைகளும் அதிகமாக உள்ளன.

நவராத்திரி சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்: பண்டிகை காலம் கார் வாங்குவதற்கு ஒரு சிறந்த நேரமாகும், ஆனால் சிறந்த மதிப்பில் காரை பெற ஸ்மார்ட்டான உத்திகளுடன் ஷோருமை அணுகவும். அதாவது, கார் வாங்குவதற்கு சில வாரங்களுக்கு முன்னரே சலுகைகள் குறித்த ஆராய்ச்சிகளை தொடங்குங்கள். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கார் தயாரிப்பாளர்களின் அறிவிப்புகளைப் பார்த்து பண்டிகை சலுகைகளை தெரிந்துக் கொள்ளவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, மாத இறுதியில் ஷாப்பிங் செய்வது, உறுதியாக பேரம் பேசுவது, கார் காப்பீட்டை ஒப்பிடுவது, பழைய கார் எக்ஸ்சேஞ்ச் போனஸ் பற்றி விசாரிப்பது போன்ற யுக்திகளையும் டீலர்ஷிப் ஷோரூமில் கார் வாங்கும்போது பின்பற்றலாம். இவை எல்லாமே மலிவான விலையில் கார் வாங்குவதற்காக மட்டுமின்றி, பாதுகாப்பான காரை வாங்குவதற்காக நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளாக இருக்க வேண்டுமே தவிர்த்து, மலிவான விலைக்காக காரின் பாதுகாப்பில் எந்தவொரு சமரசமும் இருக்க கூடாது.


Click it and Unblock the Notifications









