விநாயகர் சதுர்த்தி வந்துட்டாலே வாகன ஓட்டிகளுக்கு இதுதான் பெரிய பிரச்சனையே! கூகுள் மேப் கூட குழம்பி போகும்!
விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi) பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்தியா முழுவதும் பல நாட்களுக்கு கொண்டாடப்படும் பண்டிகைகளுள் விநாயகர் சதுர்த்தியும் ஒன்றாகும். இன்னும் சொல்லப்போனால், விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்களுக்கு முன்பு இருந்தே கொண்டாட்டங்கள் துவங்கி விடுவது வழக்கம்.
அந்த வகையில், விநாயகர் சிலைகள் பொது இடங்களில் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருப்பதை இப்போதே காண முடிகிறது. இதன் விளைவாக, போக்குவரத்து நெரிசல் உள்பட பொது மக்களுக்கு அசவுகரியங்கள் ஏற்படுவதையும் பார்க்க முடிகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய்வதில் சமீப ஆண்டுகளில் போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவந்து உள்ளனர்.

இருப்பினும், கோடிக்கணக்கில் மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற நாட்டில் இவ்வாறான பண்டிகைகளை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது போலீசாருக்கும் கூட சவாலான காரியமாக உள்ளது. ஆதலால், விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டதில் இருந்து அவற்றை கரைப்பது வரையில் சாலையிலும், வீடுகளிலும் பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
பயணத்திற்கான வழித்தடத்தை முன்கூட்டியே தேர்வு செய்யவும்: விநாயகர் சிலைகள் அனைத்து தெருக்களிலும் வைக்கப்படுவதில்லை. ஆதலால், விநாயகர் சிலைகள் எங்கு எங்கெல்லாம் வைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது என்பதை முன்கூட்டியே அறிந்து, அதற்கேற்ப செல்ல வேண்டிய வழித்தடத்தை தீர்மானிக்கவும். இருப்பினும், பண்டிகை சமயத்தில் எது எப்போதும் வேண்டுமானாலும் சாலையில் நடக்கலாம் என்பதால், பயணத்திற்கு வழக்கத்தை காட்டிலும் அதிக நேரத்தை ஒதுக்குவது நல்லது.

சாலையில் கவனம் தேவை: குறிப்பாக, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின் போது எல்லா சாலைகளும் நெரிசல் மிகுந்தவையாக இருக்கும் என்பதால், முன்னால் செல்லும் வாகனத்திற்கு போதிய இடைவெளி விட்டப்படி பின்தொடர்ந்து செல்லவும். அதேபோல், பண்டிகை சமயத்தில் பொது மக்கள் அதிகமாக பொது இடங்களில் கூடுவார்கள் என்பதால், அவர்களுக்கும், அவர்கள் எழுப்பும் சத்தத்திற்கும் பயந்து நாய், மாடு, ஆடு போன்ற பிராணிகள் சாலைக்குவர கூடும் என்பதால் அத்தகைய சூழலை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்கவும்.
ஒலி இரைச்சலை சமாளிக்க தயாராக இருக்கவும்: விநாயகர் சதுர்த்தியின் போதும், அதற்கு முந்தைய மற்றும் பிந்தைய தினங்களிலும் ஸ்பீக்கர்களை அலர விட்டப்படி தொடர்ந்து பாடல்களை ஒலிர விடுவார்கள் என்பதால், பயணத்தின்போது அருகில் இருப்பவர்களிடம் கூட பேச முடியாத சூழல் உருவாகலாம். ஆதலால், முடிந்தவரையில் பயணத்திற்கு முன்னதாகவே அதுதொடர்பான கலந்தாய்வுகளை மற்றவர்களிடம் மேற்கொண்டு முடிப்பது நல்லது. குழந்தைகள், முதியவர்கள் உடன் வாகனத்தில் செல்பவர்கள் சாலையில் ஸ்பீக்கர் அமைக்கப்பட்டு இருக்கும் பகுதிக்கு மிகவும் அருகாமையில் செல்வதை தவிர்க்கவும்.

சரியான இடத்தில் வாகனத்தை பார்க் செய்யவும்: இவ்வாறான பண்டிகை நேரத்தில் பெரும்பாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது விழாவில் கலந்துக் கொள்ள வருபவர்களின் வாகனங்கள் சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே நிறுத்தப்படுவதினால் ஆகும். அதுமட்டுமின்றி, விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகை நாட்களில் அவ்வப்போது பட்டாசுகள் வெடிக்கப்படும் என்பதால், அவற்றில் இருந்து பாதுகாக்கும் வகையில் வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்த முயற்சிக்கவும்.
போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றவும்: வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, விநாயகர் சிலைக்கு பூஜை நடத்தும் விழா ஏற்பாட்டாளர்களுக்கும் போக்குவரத்து விதிமுறைகள் குறித்த அக்கறை இருக்க வேண்டும். முடிந்தவரையில், போக்குவரத்தை பாதிக்காத இடத்தில் விநாயகர் சிலையை வைத்து பூஜை செய்வதுடன், கூட்டம் கூடும் நேரங்களில் அதனை சமாளிக்கும் வகையில் போக்குவரத்தை அவர்களே சீர்படுத்துவது அவசியம். இதனை விழா ஏற்பாட்டாளர்கள் அனைவரும் முழு மனதுடன் மேற்கொள்ள வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தகுந்த பாதுகாப்பு வழிகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றினாலே விநாயகர் சதுர்த்தி மட்டுமில்லாமல் எந்தவொரு பண்டிகையும் சிறப்பாக அமையும். இல்லையேல், கொண்டாட்டத்தை எதிர்பார்த்து அசவுகரியம் தான் மிஞ்சும். பண்டிகை சமயங்களில் நம்மை சூழல் அதிகப்படியான மகிழ்ச்சி தான் நம்மையே அறியாமல் தவறான செயல்களை செய்ய வைக்கிறது. ஆகையால், அத்தகைய நேரங்களில் கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இருப்பது பல அசம்பாவிதங்களை தவிர்க்கும். முக்கியமாக, சாலையில் வழக்கத்தை விட அதிக கவனத்துடன் இருப்பது அவசியமாகும்.


Click it and Unblock the Notifications









