மத்திய அரசுக்கு கோடி கும்புடு... ரூ.3000இல் வருஷம் முழுக்க டோல் கட்டணம் இல்லாம ஜாலியா சுற்ற இதை ஃபாலோ பண்ணுங்க
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தில் இருந்து ஃபாஸ்டேக் (Fastag) கார்டுகளுக்கான வருடாந்திர பாஸ் (Annual Pass) முறை அமலுக்கு வந்துள்ளதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். வருடத்திற்கு ரூ.3,000 செலுத்தி வருடாந்திர பாஸை வாங்கினால் போதும், ஒரு வருடத்தில் 200 முறை சுங்கச்சாவடிகளை வாகனங்களில் கடக்கலாம்.
இதன் மூலமாக, சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு முறையும் பணத்தை செலவழிப்பது மிச்சமாகுவது மட்டுமின்றி, சுங்கச்சாவடிகளில் வரிசையில் காத்திருக்க வேண்டிய நேரமும் வெகுவாக குறையும் என மத்திய போக்குவரத்து & நெடுஞ்சாலை துறை அமைச்சகம் நம்பிக்கை உடன் உள்ளது. மத்திய அரசாங்கத்தின் இந்த நம்பிக்கைக்கு ஏற்ப வெறும் 4 நாட்களில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் முறையை பின்பற்ற ஆரம்பித்துள்ளனர்.

இதில் நமது தமிழ்நாட்டு வாகன ஓட்டிகளின் பங்களிப்பு தான் அதிகமாக உள்ளதாக ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் தெரிவித்து இருந்தோம். இந்த தொகுப்பில் நாம் என்ன பார்க்க போகிறோம் என்றால், இருக்கும் இடத்தில் இருந்தப்படியே மொபைல் போன் (Mobile Phone) வழியாக ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் முறையை எவ்வாறு பெறுவது என்பதை ஆகும்.
இதுகுறித்த விபரங்களை மத்திய நெடுஞ்சாலை & போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) அவர்களே தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதன்படி, கூகுள் பிளேஸ்டோர் (Google Playstore) மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் 'ராஜ்மார்க் யாத்ரா' (Rajmarg Yatra) என்கிற மொபைல் செயலியை முதலில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.

ராஜ்மார்க் யாத்ரா செயலியை திறந்த பின் முகப்பு பக்கத்தில் 'வருடாந்திர பாஸ்' என்கிற ஆப்ஷனை க்ளிக் செய்யவும். வருடாந்திர பாஸை க்ளிக் செய்த உடன், பாஸை ப்ரீ-புக்கிங் (Pre-booking) செய்கிறீர்களா? என்கிற ஆப்ஷன் கேட்கும். அதனை க்ளிக் செய்தால் 'துவங்குவதற்கு தயாரா?' என்கிற கேள்வி உடன் பாஸை பெறுவதற்கு என்னென்ன விபரங்களை வாகன ஓட்டிகள் தயாராக வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டு இருக்கும்.
அதன்படி, வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸை பெற வாகன பதிவெண்ணை உள்ளிட வேண்டியிருக்கும். நீங்கள் உள்ளிடும் பதிவெண்ணை கொண்ட வாகனத்திற்கு நேர்மறையான பேலன்ஸ் உடன் ஏற்கனவே ஃபாஸ்டேக் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன்பின், உங்களது வாகனம் காரா, ஜீப்பா அல்லது வேன் மாடலா என்பதை குறிப்பிட வேண்டும். இவ்வளவு நேரம் நாங்கள் கூறிக் கொண்டிருப்பது எல்லாம் கமர்ஷியல்-அல்லாத வாகனங்களுக்கானது ஆகும்.

ஏனெனில், லாரி, பேருந்து போன்ற கமர்ஷியல் வாகனங்களுக்கு வருடாந்திர ஃபாஸ்டேக் முறையை தற்போதைக்கு மத்திய அரசு அறிமுகம் செய்யவில்லை. நீங்கள் வைத்திருக்கும் கமர்ஷியல்-அல்லாத வாகனம் எத்தகைய வாகனம் என்பதை தேர்வு செய்த பின், உங்களது வாகன பதிவெண் உடன் இணைக்கப்பட்ட மொபைல் போனுக்கு ஒரு ஒன்-டைம்-பாஸ்வேர்ட் (OTP) வரும்.
அதனை உள்ளீடு செய்த பின், வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸ்க்கான கட்டண தொகையான ரூ.3,000ஐ செலுத்துவதற்கான ஆப்ஷன்கள் திறக்கும். அதில், உங்களுக்கு விருப்பப்பட்ட ஆப்ஷனில் பணத்தை செலுத்தி பாஸை பெற்றுக் கொள்ளலாம். பண பரிவர்த்தனை முடிந்த பின், அதுகுறித்த அறிவிப்பு உங்களுக்கு ராஜ்மார்க் யாத்ரா செயலி மூலமாகவும், மொபைல் போன் குறுஞ்செய்தி மூலமாகவும் தெரிவிக்கப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிஜிட்டல் உலகில் எல்லாமே எளிதாகிவிட்டது என்பதற்கு சிறந்த உதாரணம், வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸை வாங்குவது ஆகும். இந்த பாஸை வாங்குவதற்கு, இந்த செய்தி தொகுப்பை நீங்கள் படிக்க எடுத்துக் கொண்ட நேரம் கூட ஆகாது. முடிந்தவரையில் உங்களுக்கான வருடாந்திர ஃபாஸ்டேக் பாஸை உங்கள் மொபைல் போன் வழியாக நீங்களே பெற முயற்சியுங்கள். ஒடிபி உள்ளிட்ட சமாச்சாரங்கள் இருப்பதால், மற்றவர்களின் மொபைல் போன் அல்லது லேப்டாப் (Laptop) வழியாக இந்த வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டாம்.


Click it and Unblock the Notifications









