கடனில் கார் வாங்கும்போது பலர் இது தெரியாம தான் மாட்டிக்குறாங்க! இதை எல்லாம் மட்டும் கரெக்ட்டா ஃபாலோ பண்ணுங்க!
நம்மில் பலர் கடனுதவி மூலமாகவே கார் வாங்குகிறோம். இதற்காகவே கடன் வழங்கும் பல தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றுடன் கார் கம்பெனிகளும் கூட்டணி சேர்ந்து செயல்படுகின்றன. ஆனால், அவ்வாறு கடனுதவி பெற்று கார் வாங்கும்போதும், அந்த கடனை திருப்பி செலுத்தும்போதும் பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது. அவற்றை பற்றி தான் ஒன்றன் ஒன்றாக இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
கார் கடன் தொடர்பான விபரங்களை அறிதல்: உங்களது கார் கடனுதவி தொடர்பான விதிமுறைகளை நேரம் எடுத்து விரிவாக படித்து தெரிந்துக் கொள்ளவும். அதன் மூலம் கடனுக்கான வட்டி விகிதத்தை தெரிந்துக் கொள்வதுடன், எத்தனை மாதங்களுக்கு மாதத்தவணைகளை செலுத்த போகிறோம், மாதத்தவணை தொகை எவ்வளவு என்பதை தெரிந்துக் கொள்ளலாம்.

கடன் காலத்தை விரைவாக முடித்தல்: முடிந்தவரையில், கடனை திருப்பி செலுத்தும் காலத்தை விரைவாக நிறைவு செய்வது நல்லது. மாதத்தவணை தொகை சற்று அதிகமாக வரும் என்றாலும், மாதத்தவணையை திருப்பி செலுத்தும் காலத்தை குறைவாக நிர்ணயிப்பதன் மூலம் ஒட்டுமொத்தமாக செலுத்தும் தொகையை கணிசமாக குறைக்கலாம். அதேபோல், காருக்கான மொத்த பணத்தையும் கடனுதவியாக பெறுவதற்கு பதிலாக, கொஞ்சம் பணத்தை முன்தொகையாக செலுத்துவது நல்லது.
பட்ஜெட்டை வகுத்தல்: கார் கடனுதவிக்கான மாதத்தவணையை செலுத்தும் போதும் தன்னால் வழக்கம்போல் குடும்ப செலவுகளை முறையாக நிர்வகிக்க முடியுமா என்பதையும் கடனுதவியை பெறுவதற்கு முன்னரே கணக்கிட்டு வைத்துக் கொள்வது சிறந்தது. இதற்காக, நிலையான வட்டி விகிதத்தில் (Fixed Interest Rate) கடனுதவியை பெற முயற்சியுங்கள். மாறுப்பட்ட வட்டி விகிதத்தில் (Floating Interest Rate) கடனுதவியை பெறும்போது அதற்கேற்ப மாதத்தவணை தொகையும் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை மாறும் என்பதால் மற்ற செலவுகளை நிர்வகிப்பதில் சிரமம் ஏற்படலாம்.

அவ்வப்போது கூடுதல் தொகை: கடனுக்கான மாதத்தவணையை செலுத்தும் போது 2- 3 மாதங்களுக்கு ஒருமுறை மாதத்தவணை தொகையை காட்டிலும் அதிக தொகையை செலுத்த முயற்சியுங்கள். உங்களுக்கு கடன் வழங்கும் நிறுவனத்தில் அவ்வாறு கூடுதல் தொகையை செலுத்த முடியாமல் போகும் பட்சத்தில், 1 அல்லது 1.5 வருடத்திற்கு ஒருமுறை பெரிய தொகையை செலுத்த முயற்சியுங்கள்.
ஏனெனில், இவ்வாறு செலுத்தப்படும் கூடுதல் தொகை ஆனது உங்களது கடனுக்கான அசல் தொகையில் இருந்து குறையும். இதன் மூலமாக உங்களது கடனுக்கான வட்டி குறைவது மட்டுமின்றி, கடனை திருப்பி செலுத்துவதற்கான காலமும் குறையும். இதற்கெல்லாம் முதலில், மேற்கூறப்பட்ட இரண்டு ஆப்ஷன்களில் ஏதேனும் ஒன்றின் மூலமாக கூடுதல் தொகையை இடையிடையே செலுத்த முடியுமா என்பதை கடன் பெறுவதற்கு முன்னரே உறுதி செய்துக் கொள்ள வேண்டும்.

மாதத்தவணைகளை தவிர்க்க வேண்டாம்: மாதத்தவணையை ஒரு மாதத்திற்கு தவிர்ப்பது கூட உங்கள் மீது கரும்புள்ளியாக அமைந்துவிடும். அதற்காக அபராத தொகையை செலுத்துவது மட்டுமின்றி, உங்களது சிபில் (Cibil) மதிப்பெண்ணும் குறையும். கார் கடனுதவியை வழங்கும் சில நிதி நிறுவனங்கள் தேவைப்பட்டால் சில மாதங்களுக்கு மாதத்தவணையை செலுத்துவதை நிறுத்தி வைக்கும் வசதிகளையும் வழங்குகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், காருக்கான மொத்தத் தொகையையும் கடனுதவியாக பெறுவதற்கு பதில், 5- 10% தொகையை முன்கூட்டியே சேமித்து வைத்து அதனை பயன்படுத்துவது பல வகைகளில் நன்மையாக அமையும். கடனுதவியை பெற்று கார் வாங்குவது தவறான விஷயமே கிடையாது. ஆனால், கடனுதவியை பெறும்போது மேலே குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை முறையாக பின்பற்றுவது அவசியம் ஆகும். வீட்டு கடன், நகை கடன் போன்று இல்லாமல், தேய்மானம் அடையக்கூடிய கார் போன்றதான மெக்கானிக்கல் பொருளுக்காக கடனுதவியை பெறும்போது இன்னும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









