5-ஸ்டார் ரேட்டிங் காராக கூட இருக்கட்டுமே... நம்ம ஊர் சாலைகளில் பாதுகாப்பா வீடு போய் சேர இதலாம் ஃபாலோ பண்ணனும்!
உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் சாலைகளில் வாகனம் ஓட்டுவதுதான் மிகவும் சவாலான காரியம் ஆகும். குறிப்பாக, சென்னை, பெங்களூரு போன்ற முக்கிய மாநகரங்களில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு சென்று வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அத்தகைய சாலைகளில் பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதற்கான சில டிப்ஸ்களை இனி பார்க்கலாம்.
எல்லாவற்றிற்கும் தயாராக இருக்கவும்: இந்திய சாலைகளில் எது எப்போது குறுக்கே வரும் என்பதே தெரியாது என்கிற கூற்றை அனைவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு முன்னால் செல்லும் வாகன ஓட்டிகளில் இருந்து நாய், மாடு என நம் ஊர் சாலைகளில் எது எப்போது குறுக்கே நுழையும் என்பதையே யூகிக்க முடியாது.

இதனால் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் வாகனம் ஓட்டும்போது எல்லாவற்றிற்கும் தயாராகவும், சாலையின் மீது அதிக கவனமுடனும் இருக்க வேண்டும். முன்னால் செல்லும் வாகனங்களை பார்க்கும் அதேநேரம், அவற்றின் இண்டிகேட்டர் (Indicator) விளக்குகளையும் சரியாக பார்த்து அதற்கேற்ப செயல்படுவது அவசியமாகும்.
பாதுகாப்பான தூரத்தையும், வேகத்தையும் பராமரிக்கவும்: போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் முன்னால் செல்லும் வாகனங்களுக்கு மிக நெருக்கமாக பின்தொடர்ந்தப்படி செல்லும் பழக்கம் நம்மில் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால், பல சமயங்களில் அவ்வாறு மிகவும் நெருக்கமாக பின்தொடர்ந்து செல்வதுதான் மேலும் போக்குவரத்து நெரிசலை உண்டாக்குகிறது மற்றும் நெரிசலை எளிதில் சரிச்செய்ய விடாமல் தடுக்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

ஆதலால், மிகவும் நெரிசலான போக்குவரத்து வழியாக செல்லும்போதும் முன்னால் செல்லும் வாகனத்திற்கு போதிய இடைவெளி விட்டப்படி பின்தொடர்ந்து செல்வது நல்லது. இடையில் பைக் ஓட்டி யாரையும் நுழைய அனுமதிக்காதீர்கள். அதையும் தாண்டி பைக் ஓட்டிகள் நுழைந்தால், அவர்களை கண்டுக்கொள்ளாமல் தவிர்ப்பதுதான் சண்டை, சச்சரவுகள் இல்லாமல் வாகனம் ஓட்ட சரியான வழி ஆகும்.
முன்னால் செல்லும் வாகனத்தில் இருந்து போதுமான இடைவெளி விட்டு செல்வதை போல், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் குறைவான & சீரான வேகத்தில் செல்வதுதான் சிறந்தது. ஆக்ஸலரேட்டர் மற்றும் பிரேக் பெடல்களை ஆக்ரோஷமாக ஹேண்டில் செய்யாமல், பூப்போல் மென்மையாக கையாள வேண்டும். போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் தான் உங்களது டிரைவிங் (Driving) திறன் எந்த அளவிற்கு உள்ளது என்பது சோதிக்கப்படும்.

கவன சிதறலுக்கு இடம் கொடுக்க கூடாது: மொபைல் போனை நோண்டியப்படியும், மொபைல் போனில் பேசியப்படியும் வாகன ஓட்டுவது எப்போதுமே ஆபத்தானது ஆகும். அதுவும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் வாகனம் ஓட்டும்போது இன்னும் கவனமாக இருத்தல் அவசியமாகும். மொபைல் போனை பயன்படுத்தாமல், வாகனத்திற்கு இரு பக்கங்களிலும் வழங்கப்படும் மிரர்களையும், வாகனத்திற்குள் வழங்கப்படும் மிரரையும் சரியாக கவனித்து வாகனம் ஓட்ட வேண்டும்.
பொறுமையை கடைப்பிடிக்கவும்: வாகனம் ஓட்டும்போது சீரான மனநிலையில் இருத்தல் மிகவும் அவசியமாகும். குறிப்பாக, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் மற்றவர்களால் நாம் எளிதில் கோபமடையக் கூடும். ஆதலால், அத்தகைய சாலைகளில் பயணத்தை துவங்கும் முன்பே மனநிலையை சாந்தமாக வைத்திருக்க வேண்டும் என்கிற உறுதிப்பாட்டை மனதில் கொள்ள வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் முறையாக பின்பற்றினாலே பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து நெரிசலே ஏற்படாது. மற்றவர்கள் எல்லாம் ஏமாளி... நாம்தான் புத்திசாலி என்கிற நினைப்பில் சில வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை மதிக்காமல் ஆக்ரோஷமாக வாகனம் ஓட்டுவதும், வாகனங்களுக்கு இடையே புகுந்து புகுந்து செல்வதும் தான் போக்குவரத்து நெரிசல்களுக்கு காரணமாக அமைகிறது. அத்தகைய நேரங்களில் பாதுகாப்பாக வாகனம் ஓட்ட மேலே குறிப்பிடப்பட்ட வழிமுறைகளை பின்பற்றலாம்.


Click it and Unblock the Notifications









