சீட் பெல்ட் போட்டால் மூச்சு திணறுகிறதா? அப்ப இதை ட்ரை பண்ணி பாருங்க...
கார்களில் சிலருக்கு சீட் பெல்ட் போடும் போது கழுத்தை நெரித்து மூச்சு முட்டுவது போல் இருக்கும் அப்படி இருந்தால் என்ன செய்ய வேண்டும் எனக் காணலாம் வாருங்கள்.

காரில் செல்லும் அனைவருக்கும் சீட் பெல்ட் என்பது மிகவும் அவசியம். இது குறித்து அரசும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. சாலைகளிலும் சீட் பெல்ட் அணியாதவர்கள் மீது போலீசார் தீவிரமாக நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். காரில் செல்லும் போது கார் விபத்தில் சிக்கினால் இந்த சீட்பெல்ட் அணிந்திருந்தால் இந்த விபத்தில் பயணிப்பவர்களுக்கு ஏற்படும் சேதாரம் குறையும்.

இது குறித்துப் பல ஆய்வுகள் நடத்தப்பட்டதில் இது தான் உண்மை என நிரூபணமாகியுள்ளது. அதனால் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதும் காரில் பயணிப்பவர்களுக்குக் கட்டாயம் சீட் பெல்ட் வழங்கப்படுகிறது. பல நவீன கார்களில் சீட் பெல்ட் அணிந்திருந்தால் மட்டுமே காரின் ஏர் பேக் வேலை செய்யும் என்ற சிஸ்டமும் இருக்கிறது.

இவ்வளவு இருந்தும் சிலர் காரில் செல்லும் போது சீட் பெல்ட்போடுவதில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கிறது. சிலர் மறந்துவிடுகின்றனர். சிலர் அசால்டாக இருக்கின்றனர். இவர்களையும் தாண்டி சிலருக்கு காரில் பயணிக்கும் போது சீட் பெல்ட் அணிவது அவர்களுக்கு வசதியாக இல்லாமல் இருக்கிறது அதன் காரணமாகக் கூட சிலர் சீட் பெல்ட் அணிவதில்லை.

சீட்பெல்ட் என்பது காரில் மட்டுமல்ல விமானங்களிலும் இருக்கிறது. விமானங்களில் யாருக்கும் இப்படி சீட் பெல்ட் அணிவது என்பது அசௌகரியமாக இல்லை. ஆனால்காரில் மட்டும் இருப்பதற்கு முக்கியமான காரணம் விமானங்களில் பொதுவாக இரண்டு பாயிண்ட் சிட் பெல்ட்தான் இருக்கும். ஆனால் கார்களில் 3 பாயிண்ட் சீட் பெல்ட் இருக்கும்.

ஒருவரின் இடுப்பு பகுதியை மட்டும் கவர் செய்யும் வகையில் இரண்டு பாயிண்ட் சீட்பெல்ட்கள் இருக்கும். ஆனால் 3 பாயிண்ட் சீட் பெல்ட்டில் ஒருவரின் உடலின் மேல் பகுதியையும் சேர்ந்து பாதுகாக்கும் அதற்காக ஒருவரின் தோள்பட்டையின் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதியில் இடுப்பு பகுதி வரை இருக்கும்படி பெல்ட் இருக்கும்.

இந்த வடிவமைப்பு கார் விபத்தில் சிக்கினால் நாம் உடல் முன்புறம் தள்ளுவதால் தான் அதிக சேதாரம் ஆகிறது என ஆய்வு செய்து இதை வழங்கியுள்ளனர். ஆனால் சிலருக்கு இது சரியாகப் பொருந்தும் படி இல்லை. குறிப்பாக உயரம் குறைவாக இருப்பவர்களுக்கு இந்த சீட் பெல்ட் சரியாக தோள்பட்டையில் இல்லாமல் தொண்டை பகுதி வழியாகச் செல்லும் படி அமைக்கப்பட்டிருக்கும்.

இதனால் பலர் சீட் பெல்ட் அணிந்தால் அவர்களுக்குத் தொண்டை அடைத்து மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. இதனால் அவர்கள் சீட் பெல்ட் அணிவதைத் தவிர்க்கின்றனர். ஆனால் இப்படியாக சீட் பெல்ட் அணிவதைத் தவிர்ப்பது சரியான விஷயம் கிடையாது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் எப்படி மூச்சுத் திணறல் ஏற்படாமல் சீட் பெல்ட் அணிவது எனக் காணலாம்.

பொதுவாக சீட் பெல்ட்களை வடிவமைக்கும் போது அது சராசரி உயரம் கொண்ட மனிதர்களை மனதில் வைத்துத் தான் வடிவமைக்கப்படுகிறது. அதனால் நீங்கள் சராசரி மனிதர்களின் உயரத்தில் இருக்கிறீர்கள் இருந்தாலும் உங்களுக்கு சீட் பெல்ட் கழுத்தை நெரிக்கிறது என்றால் நீங்கள் முதலில் உட்கார்ந்து இருக்கும் போசிஷனை சரி செய்ய வேண்டும்.

நீங்கள் சரியாக நேராக உட்கார்ந்தால் உங்களுக்கு சீட் பெல்ட் சரியாக தான் இருக்கும். ஒரு வேளை நீங்கள் உயரம் குறைந்தவராக இருந்தால் சில கார்களில் டிரைவர் சீட்களின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் ஆப்ஷன் உள்ளன. அப்படி இருந்தால் காரின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ளலாம். அதன் மூலம் சீட்பெல்ட் நேரடியாக உங்கள் தோள்பட்டையில் இருக்கும்.

சில கார்களில் பி பில்லரில் உள்ள சீட் பெல்ட் ஹோல்டரின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் ஆப்ஷன் உள்ளன. அதைப் பயன்படுத்தலாம். அப்படியும் இல்லையா பெரியதாக கவலைப்பட தேவையில்லை. கார்களின் ஆக்ஸசரீஸ்களீல் சீட் தலையணைகள் உள்ளன. உங்கள் காரின் சீட்டில் அதைப் போட்டு அதில் நீங்கள் அமர்ந்தால் நீங்கள் உயரமாக அமர முடியும். இதனால் சீட் பெல்ட் பிரச்சனை சரியாகலாம்.

சிலருக்கு தோள்பட்டையில் தான் சீட் பெல்ட் இருந்தாலும் அது அதில் உள்ள ரோப் போன்ற அமைப்பு அவர்களின் தோள்களில் அறுக்கும் இப்படிப்பட்ட பிரச்சனைகளைச் சந்திப்பவர்கள் மார்கெட்டில் சீட் பெல்ட் வேர்ப் குஷன் என்ற சாதனம் விற்பனையாகிறது. அதை வாங்கி சீட்பெல்டில் எந்த இடம் அறுக்கிறதோ அந்த இடத்தில் பொருத்திக்கொண்டால் அந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்கலாம்.


Click it and Unblock the Notifications








