எவ்வளவு பணம் வைத்திருந்தாலும் சரி, உங்கள் காரில் இதையெல்லாம் செய்ய கூடாது!! சட்டம் சொல்வது என்ன?
நம் அனைவருக்குமே புதியதாக கார் ஒன்றை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். காரை வாங்கிய பின் நமது அடுத்தக்கட்ட ஆசை, காரை எவ்வாறு நமது விருப்பத்திற்கு ஏற்ப மாற்றுவது என்பதாக மாறும். ஏனெனில், சந்தையில் கார்கள் பல்வேறு விதமான வேரியண்ட்களில், என்ஜின் ஆப்ஷன்களில் கிடைத்தாலும், நாம் வாங்கிய காரை போன்றதான காரை சாலையில் அவ்வப்போது பார்க்க முடியும். அவர்களில் இருந்து தனித்து தெரிய கஸ்டமைசேஷன் உதவுகிறது.
காரை கஸ்டமைஸ் செய்வதில் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட பாணி மற்றும் தனித்துவம் இருக்கும். இருப்பினும், இந்தியாவில் கார் தனிப்பயனாக்கம் என்பது ஓட்டுநர்கள் அறிந்திருக்க வேண்டிய பல சட்டரீதியான விஷயங்களைக் கொண்டுள்ளது. எனவே, இந்தியாவில் உங்கள் காரை சட்டப்பூர்வமாக எவ்வாறு தனிப்பயனாக்குவது என்பது பற்றி இனி விவாதிக்கலாம்.

மோட்டார் வாகனச் சட்டம் 1988 இன் படி, கார்களில் உரிமையாளர்கள் மேற்கொள்ள சில மாற்றங்கள் அனுமதிக்கப்படுகின்றன. சிறந்த செயல்திறனுக்காக டயர்களை மாற்றுவது, 50% க்கும் குறைவான பெயிண்ட் டிங்கரிங் மற்றும் இருக்கை கவர்கள் மற்றும் இசை அமைப்புகள் போன்ற உட்புற கேபின் அலங்கரிப்புகள் ஆகியவை இதில் அடங்கும்.
அதேபோன்று, பெயிண்ட் நிற மாற்றங்கள் போன்ற வெளிப்புற மாற்றங்களும் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் உங்கள் வாகனப் பதிவுச் சான்றிதழில் இந்த மாற்றத்தை குறிப்பிட்டு, புதுப்பிக்க வேண்டும். மேலும், பாதுகாப்பு கிரில் அல்லது மெட்டாலிக் பம்பர் கார்டுகளை நிறுவுவது அனுமதிக்கப்படாது. குறிப்பாக, கூடுதலாக பம்பர் பொருத்துவது நம் தமிழகத்தில் மிகவும் ஆபத்தானதாக பார்க்கப் படுகிறது.

சேசிஸ், என்ஜின் போன்ற காரின் அடிப்படை பாகங்களில் மாற்றங்களை செய்தல் உள்பட காரின் கட்டமைப்பு மாற்றங்கள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளன. காரின் உயரம் அல்லது அகலத்தை அதிகரிப்பது அல்லது குறைப்பது உட்பட, வாகனத்தின் பாடியில் மாற்றங்களை செய்வதும் முற்றிலுமாக தடை செய்யப்பட்டு உள்ளது.
முறையான அனுமதியின்றி, என்ஜினை மாற்றுதல் அல்லது காரில் இருக்கும் பூஸ்டர் உடன் கூடுதலாக நைட்ரோ பூஸ்டர்கள் அல்லது டர்போசார்ஜர்களை நிறுவி காரின் செயல்திறனை மேம்படுத்துவது சட்ட விரோதமானது. இருப்பினும், சட்ட வரம்பு மற்றும் முறையான ஆவணங்களை சமர்பித்தால், காரின் ஹார்ஸ் பவரை அதிகரிப்பது சட்டபூர்வமானது ஆகும்.

உங்கள் காரைத் தனிப்பயனாக்குவது உங்கள் ஆளுமையை வெளிப்படுத்த ஒரு சிறந்த வழியாகும். ஆனால் அதற்கு இந்திய சட்ட வரம்புகளைப் புரிந்துகொள்வது அவசியம். இந்தியாவின் மோட்டார் வாகனச் சட்டம் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்குவதுடன், படைப்பாற்றலுடன் பாதுகாப்பையும் உறுதி செய்கிறது. எந்தவொரு சட்ட சிக்கல்களும் இல்லாமல் உங்கள் பயணத்தை அனுபவிக்க இந்த விதிமுறைகளை எப்போதும் கடைபிடிக்கவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சில நாடுகளில் கார் மாடிஃபிகேஷனுக்கு முழு சுதந்திரம் உள்ளது. ஆனால் நம் இந்தியா இந்த விஷயத்தில் மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றுகிறது. ஏனெனில், மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் எந்தவொரு வாகனமும் பல்வேறு விதமான சோதனைகளுக்கு பிறகே வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப்படுகின்றன. அத்தகைய வாகனங்களில் நாமாக ஒரு மாற்றத்தை செய்வது சுற்றுச்சுழலை பாதிப்பது மட்டுமின்றி, சில சமயங்களில் அசம்பாவிதங்களுக்கும் வழிவகுத்துவிடும்.


Click it and Unblock the Notifications









