விமானத்தில் பறந்தாலும், மழை காலத்தில் எல்லாத்துக்கும் ரெடியா இருங்க!! பிரச்சனைகள் இந்த வடிவில் தான் வரும்!
இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. ஆறு, ஏரி போன்ற இயற்கை நீர் நிலைகளில் நீர் நிரம்பி வழிந்தோடுவதை செய்திகளில் பார்க்க முடிகிறது. இத்தகைய சூழலில் சாலை பயணங்களை மேற்கொள்வது என்பது சற்று சவாலான காரியம் ஆகும். சில பகுதிகளில் தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கியுள்ளதால், சில சமயங்களில் இரயில் பயணங்களும் தடைப்படுகிறது.
ஆதலால் விமான பயணங்களே ஏற்றவையாக தோன்றலாம். ஆனால், விமான பயணத்திலும் சில பல பிரச்சனைகள் உள்ளன. துடிப்பான கலாச்சாரம் மற்றும் அழகிய நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற நாடான நம் இந்தியா, 'பருவமழை' எனப்படும் வருடாந்திர வானிலை நிகழ்வுகளை ஒவ்வொரு வருடமும் எதிர்கொள்கிறது.

பெருமளவில் விவசாயத்தை நம்பியிருக்கும் நம் நாட்டில் மழைக்காலம் அத்தியாவசியமானது என்றாலும், அது விமானப் பயணத்திற்கு குறிப்பிடத்தக்க சவால்களை அளிக்கிறது. இந்தக் கட்டுரை, இந்தியாவில் விமானப் பயண அட்டவணையை பருவமழை எவ்வாறு பாதிக்கிறது மற்றும் இதனால் ஏற்படும் சாத்தியமான இடையூறுகளை எவ்வாறு சமாளிப்பது என்பதற்கான முக்கிய குறிப்புகளை வழங்குகிறது.
இந்தியாவில் பொதுவாக ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில், பலத்த மழை, பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்த அசாதாரணமான வானிலை பெரும்பாலும் தெளிவற்ற பார்வை மற்றும் ஆபத்தான சூறைக் காற்றுக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக விமானங்கள் தாமதமாக புறப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம்.

2019ஆம் ஆண்டில், நாட்டிலேயே மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை விமான நிலையம், பருவமழை காரணமாக சுமார் 30 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் நூற்றுக்கணக்கான விமான பயணங்களில் தாமதங்கள் ஏற்பட்டதாகவும் அறிவித்தது. பொதுவாகவே மழைக் காலத்தில் இவ்வாறான இடையூறுகள் எதிர்பார்க்கப்படும் நிலையில், விமானப் பயணத்தில் மழைக்காலத்தின் தாக்கத்தைத் குறைக்க பயணிகள் சில நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டும்.
அதாவது, முன்கூட்டியே விமான பயனத்தை முன்பதிவு செய்தல், வானிலை அறிவிப்புகளைக் கவனித்தல், மாற்று விமான நிலையங்களைக் கருத்தில் கொள்வது மற்றும் விரிவான பயணக் காப்பீட்டுத் திட்டத்தைப் பெறுதல் ஆகியவை பருவமழையால் விமான அட்டவணையில் ஏற்படும் இடையூறுகளைக் கடந்து செல்ல சில வழிகள்.

பயணிக்கவிருக்கும் விமானத்தின் நிலையைப் பற்றி தொடர்ந்து அறிந்திருப்பதும், ஏதேனும் புதுப்பிப்புகள் ஏற்பட்டால் விமான நிறுவனத்துடன் தொடர்பில் இருப்பதும் அவசியம். மேலும், ஏர் இந்தியா, இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் போன்ற ஏர்லைன்கள், பயணிகளுக்கு தானியங்கி செய்திகளை அனுப்பும் முறையைக் கொண்டுள்ளன. அதாவது, விமான பயணத்தின் அட்டவணையில் ஏதேனும் மாற்றங்களை செய்தால் அவை உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கின்றன. இது செயல்முறையை மேலும் எளிதாக்குகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இடையூறுகள் இருந்தாலும், பருவமழை இந்தியாவின் குணாதிசயத்தின் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. அத்துடன், வாட்டி எடுத்த கோடை வெப்பத்திலிருந்து சற்று ஓய்வு அளிக்கக்கூடிய வகையில் உள்ளது. இந்தப் பருவம் கொண்டு வரும் சவால்களுக்குத் தயாராக இருப்பதன் மூலமும், அதற்கேற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதன் மூலமும், பயணிகள் தங்கள் பயண திட்டத்தில் பருவமழையால் பாதிப்படையாமல், இந்தியாவின் பிரம்மிக்க வைக்கும் அழகைத் தொடர்ந்து ஆராயலாம்.


Click it and Unblock the Notifications









