சம்மரில் காரில் இந்த பிரச்சனை எல்லாம் ஏற்படும்!! முன்கூட்டியே ரெடியா இருங்க... செலவு பெருசா இருக்காது!
அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு இன்னும் 1 மாத காலம் இருக்கும் நிலையில், இப்போதே கோடை வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துவிட்டது. வெயிலில் இருந்து நம்மை பாதுகாப்பது போன்று, நம் காரையும் பாதுகாப்பது அவசியமாகும். கோடை காலத்தில், கார் பயணத்தின்போது எந்த பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, காரில் என்னென்ன விஷயங்களை முன்கூட்டியே சரிப்பார்த்து வைக்க வேண்டும் என்பதை இனி பார்க்கலாம்.
ஏசியை பரிசோதிக்கவும்: சுட்டெரிக்கும் கோடை காலத்தில் பகலாக இருந்தாலும் சரி, இரவாக இருந்தாலும் ஏசி இல்லாமல் வீட்டிற்குள் இருப்பது சிரமம் எனும்போது, சூடாக இயங்கிக் கொண்டிருக்கும் என்ஜினுடன் காருக்குள் இருப்பது, நம்மை நாமே பெரிய மைக்ரோ ஓவனில் வைப்பது போன்று ஆகும்.

டயர்களில் காற்று அழுத்தங்களை சரிப்பார்க்கவும்: மழை காலங்களிலும், பனி காலங்களிலும் ஏற்கனவே உங்களது காரின் டயர்கள் சேதமடைந்து இருக்கலாம். அதே தேய்ந்த டயரை சூடான சாலையில் பயன்படுத்தும்போது அது வெடிப்பதற்கும் வாய்ப்புள்ளது. ஆதலால், முடிந்தால் பழைய டயர்களை மாற்றிவிட்டு, டயர்களில் காற்று அழுத்தத்தை 30 - 35 PSI-இல் பின்பற்றவும்.

ஆயில்களின் அளவை சரிப்பார்க்கவும்: கார்களில் கியர்பாக்ஸ், ஸ்டேரிங் சக்கரம், விண்ட்ஷீல்டு வைபர் என பல்வேறு பகுதிகளில் ஆயில்கள் உள்ளன. இவை அவற்றின் சிறப்பான செயல்பாட்டிற்காக கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாவற்றையும் விட என்ஜினை குளிர்விப்பதற்கு கூலண்ட் பயன்படுத்தப்படுகிறது. இந்த திரவங்கள் வெயிலின் வெப்பத்தில் ஆவியாகி குறைவதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால், கோடை துவங்கும் முன்னரே கார் ஆயில்களின் அளவை சரிப்பார்க்கவும்.

ஆயில் ஃபில்டரை சரிப்பார்க்கவும்: மழை & பனி காலங்களில் காரில் துருப்பிடித்தல் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளது. அந்த துருப்பிடித்த துகள்கள் என்ஜினிற்கு செல்லும் ஆயிலுடன் கலந்து இருக்கும். ஆனால், கோடை காலத்தில் துருப்பிடித்தல் அதிகமாக நடக்காது என்பதால், என்ஜின் ஆயில் ஃபில்டரை செக் செய்து, அதனை மாற்ற வேண்டியிருந்தால் மாற்றிவிடவும். இதேபோன்று, பிரேக்குகளும் மழை காலங்களில் அதிகமாக உழைத்து இருக்கும் என்பதால் அதனையும் செக் செய்யவும்.

தூசியில் இருந்து பாதுகாப்பாக இருங்கள்: வெயில் காலத்தில் ஈரப்பதம் இல்லாததால் மண், தூசி துகள் அதிகமாக சாலையில் பறந்துக் கொண்டிருக்கும். அவை உங்களது காரின் ஹெட்லைட்ஸ் மற்றும் ஜன்னல் கண்ணாடிகளில் படியாத வண்ணம் பார்த்துக் கொள்ளவும். வைபர்கள் முறையாக செயல்படுகின்றனவா என்பதை சரிப்பார்க்கவும்.

ஏர் ஃபில்டரை சரிப்பார்க்கவும்: தூசி, மண் துகள்கள் காருக்குள் நுழைவதை தடுக்க முடியாது என்பதால், என்ஜின் மற்றும் ஏசி-க்கு காற்றை வடிக்கட்டி வழங்கும் ஏர் ஃபில்டர் முறையாக ஒர்க் ஆகிறதா என்பதை ஆராயவும். வருடத்திற்கு ஒருமுறை அல்லது ஒவ்வொரு 20,000கிமீ பயணங்களுக்கு பின்பும் ஏர் ஃபில்டரை மாற்றுவதை பழக்கமாக கொண்டிருங்கள். ஏர் ஃபில்டரை இத்தனை காலத்திற்குள் அவ்வப்போது மாற்ற வேண்டும் என காரை தயாரித்த நிறுவனம் பரிந்துரை செய்திருக்கும், ஆதலால் ஓனர் மேனுவல் புக்கை பார்க்கவும்.

காரை சுத்தமாக வைத்திருக்கவும்: குளிர் காலத்தில் காருக்குள் பெரியதாக துர்நாற்றம் ஏற்படாது. குளிர்சாதன பெட்டிக்களில் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்கும் அதே காரணம் தான் இதுக்கும். ஆனால், வெயில் காலங்களில் சிறிய சாக்லெட் கூட விரைவாக உருகி, நீண்ட நாட்களுக்கு அந்த வாசனையை காருக்குள் பரவ செய்யும். சாக்லெட் என்றால் பரவாயில்லை, அதுவே வேறேதும் உணவுகள் என்றால் துர்நாற்றம் ஏற்படும்.

நிழலில் காரை நிறுத்தவும்: இது எல்லாருக்கும் தெரிந்த & பின்பற்றக்கூடிய ஒன்று. நிழலில் காரை நிறுத்துவதால் காரின் பெயிண்ட் பாதுகாக்கப்படுவது மட்டுமின்றி, வெப்பம் காருக்குள் இறங்குவதையும், ஏசி போட்ட பின்பும் சில நிமிடங்களுக்கு இருக்கும் வெப்பத்தையும் தவிர்க்கலாம். அதேபோல், சாலையில் சென்றுக் கொண்டிருக்கும் போது முடிந்த வரையில் சூடான சாலையில் காரை நிறுத்தாதீர்கள். குறைந்தது, மெதுவான வேகத்தில் காரை இயக்கிக் கொண்டே இருப்பது கூட ஒருவகையில் நல்லது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோடை வெயில் காலத்தில் இருந்து காரை பாதுகாப்பதற்கான சில டிப்ஸ் இவை ஆகும். அதேபோல், சுட்டெரிக்கும் வெயிலின்போது கார் ஓட்ட போகிறீர்கள் அல்லது பயணம் செய்ய போகிறீர்கள் என்றால் நீங்களும் அதற்கு தயாராக இருத்தல் அவசியம். குறைந்தப்பட்சம், காரினுள் எப்போதும் குளிர்ச்சியான பகுதியில் ஒரு வாட்டர் பாட்டில் இருத்தல் அவசியம். ஏனெனில், கார் டிரைவிங்கின்போது முழு கவனம் தேவை.


Click it and Unblock the Notifications









