சில டிப்ஸ்களை ஞாபகம் வெச்சிக்கிட்டால் பெண்களால் முடியாதது எதுவுமே இல்ல! மகளிர் தினத்தில் ஒரு முடிவை எடுங்கள்
சர்வதேச மகளிர் தினம் (International Women's Day) ஒவ்வொரு வருடமும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. மனித குலத்தின் முன்னேற்றத்திலும், பரிணாம வளர்ச்சியிலும் பெண்களின் பங்களிப்பு எல்லா காலக்கட்டத்திலும் முக்கியமானதாக இருந்துள்ளது. இருப்பினும், இன்றைய கால மாடர்ன் உலகில் கூட இன்னமும் நிறைய பெண்கள் கார் ஓட்ட தெரியாமல் உள்ளனர். கார் ஓட்டுவதில் உள்ள பயம் தான் அவர்களை கார் ஓட்ட கற்றுக்கொள்ள விடாமல் தடுக்கிறது. இந்த சர்வதேச மகளிர் தினத்தில் பயத்தை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு கார் ஓட்ட கற்றுக் கொள்வோம், வாருங்கள்.
கார் டிரைவிங் (Car Driving)-ஐ கற்பது: கார் ஓட்ட முறையாக கற்றுக்கொண்ட பின்பே பொது சாலையில் கார் ஓட்ட முயற்சிப்பது நல்லது. இதற்காக, கார் டிரைவிங்கை கற்றுக் கொடுக்கும் மையத்தில் சேரலாம் அல்லது நீண்ட வருடங்களாக கார் ஓட்டுவதில் அனுபவமிக்கவர் கற்றுக் கொடுக்க கார் ஓட்ட பழகலாம். கார் ஓட்ட பழகுவதற்கு காலியான மைதானம் தான் சரியான இடம் என்பதை மறக்க வேண்டாம்.

காரின் அடிப்படை நுட்பங்களை அறிதல்: காரை எவ்வாறு ஸ்டார்ட் செய்வது, ஸ்டேரிங் சக்கரத்தை சுற்றிக் இருக்கும் அளவீட்டு கருவிகளை பற்றி அறிவது, கியர்களை மாற்றுவது போன்ற கார் ஓட்டுவதில் உள்ள அடிப்படையான விஷயங்களை அனுபவமிக்கவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ள வேண்டும். கியர்களை மாற்றுவது பெரும்பாலான பெண்களுக்கு சிரமமாக உள்ளது. ஆதலால்தான், பெண்களுக்கு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட கார்கள் ஏற்றவை என கூறுகிறோம்.
போக்குவரத்து விதிமுறைகளை தெரிந்துக் கொள்ளல்: கார் ஓட்ட ஓரளவுக்கு கற்றுக் கொண்ட பிறகு, அடுத்ததாக செய்ய வேண்டியது போக்குவரத்து விதிமுறைகளையும், சாலையின் ஓரத்தில் பொருத்தப்படும் பலகையில் குறிக்கப்படும் குறியீடுகளையும் பற்றி தெரிந்துக் கொள்வது. தினந்தோறும் பல வேலைகளை செய்யும் பெண்களுக்கு குறியீடுகளை ஞாபகத்தில் வைத்துக் கொள்வது ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருக்கலாம். இதற்காக ஒரு பேப்பரில் அவற்றை எழுதி வைத்து அவ்வப்போது நினைவுப்படுத்திக் கொள்ளலாம்.

அவ்வப்போது கார் ஓட்டி பழகவும்: பெரும்பாலும் பெண்களுக்கு அவ்வப்போது கார் ஓட்டி பழக நேரம் கிடைப்பதில்லை. இருப்பினும், முடிந்தவரையில் அருகில் உள்ள மைதானத்தில் கார் ஓட்டி பழக முயற்சியுங்கள். ஓரளவிற்கு ஓட்ட கற்றுக் கொண்ட பின், உதவிக்கு யாரேனும் இருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. இன்றைய கால மாடர்ன் கார்களில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுவதால், நம்பிக்கை உடன் கார் ஓட்ட பழகுங்கள்.
ஹீல்ஸ் செருப்புகளை தவிர்க்கவும்: ஹீல்ஸ் அணிந்திருந்தால், ஆக்ஸலரேட்டர், கிளட்ச் & பிரேக் பெடல்களை உபயோகிப்பது அசவுகரியமாக இருக்கும். அவசர நேரத்தில் பிரேக் கொடுக்க முடியாமல் கூட போகலாம். அதேபோல், மூர்க்கத்தனமாக பெடலை அழுத்த நேர்ந்தால் உங்களது ஹீல்ஸ் உடைப்படுவதற்கு கூட வாய்ப்புள்ளது. இருப்பினும், சில நேரங்களில் ஹீல்ஸ் அணியாமல் இருக்க முடியாது என்பதால், கார் ஓட்டும்போது அணிவதற்காக என்றே தனியாக ஒரு ஜோடி செருப்பை காருக்குள் வைத்துவிடுங்கள்.

மொபைல் போனை தவிர்க்கவும்: கார் ஓட்ட நன்றாக கற்றுக் கொண்ட பிறகு, நம்மையே அறியாமல் ஒருவித மமதை நமக்குள் வந்துவிடும். அதன் விளைவாக, கார் ஓட்டும்போது முழு கவனத்தை கொடுக்காமல் தவிர்ப்போம். குறிப்பாக, போன் பேசிக்கொண்டே கார் ஓட்டும் பழக்கம் வர ஆரம்பித்துவிடும். இதனை முளையிலேயே கிள்ளி எறிவது நல்லது. அதேபோல், பாட்டு பாடி கொண்டே கார் ஓட்டுவதும் உங்களது கவனத்தை சிதறடிக்க கூடும்.
காரை செக் செய்யவும்: காரை ஸ்டார்ட் செய்யும் முன் காரில் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை ஒருமுறை சரிப்பார்த்துக் கொள்வது சிறந்தது. அதாவது, கண்ணாடிகள் அனைத்தும் உங்களது டிரைவிங் ஸ்டைலுக்கு ஏற்ப சரியான பொசிஷனில் உள்ளதையும், டிரைவர் இருக்கையின் உயரம் & சாய்வு உங்களுக்கு ஏற்ப சரியாக உள்ளதையும் உறுதி செய்துக் கொண்ட பின் காரை ஸ்டார்ட் செய்யவும். அதேபோல், காரில் எப்போதும் அவசரத்துக்கு முதலதவி பெட்டியை வைத்திருக்கவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த 100 ஆண்டுகளில் கார்கள் பல்வேறு விதங்களில் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. ஆதலால், இன்றைய காலத்தில் கார் ஓட்ட அதிக உடல் வலிமை இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஸ்டேரிங்கை திருப்புவது, கியரை மாற்றுவது என எல்லாமே மிகவும் எளிமையானதாக மாறிவிட்டன. பொத்தான்களுக்கு பதிலாக, டச் ஸ்க்ரீன்கள் இன்றைய கால மாடர்ன் கார்களில் வந்துவிட்டன. ஒரு சில கார்கள் அவசர நேரத்தில் தானாகவே இயங்கக்கூடிய அளவிற்கு வந்துவிட்டன. ஆதலால், பெண்களே இனியும் தயக்கம் ஏன்?


Click it and Unblock the Notifications









