மழைக்காலத்திற்கான கார் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பான டிரைவிங் குறித்த டிப்ஸ்
மழைக்காலத்தில் கார் ஓட்டுவதும், பராமரிப்பதிலும் அதிக கவனம் தேவை. சாதாரணமாக கார் ஓட்டுவதைவிட மழை நேரத்தில் கார் ஓட்டுவதில் பல்வேறு பாதுகாப்பு பிரச்னைகள் இருக்கின்றன.
தண்ணீர் தேங்கிய பள்ளங்கள், தரை ஈரப்பதத்தால் வழுக்கும் ஆபத்துக்கள் அதிகம் இருக்கின்றன. இந்த நிலையில், மழை காலத்தில் பாதுகாப்பான டிரைவிங் குறித்த சில வழிகாட்டு முறைகளை இந்த செய்தித் தொகுப்பில் பகிர்ந்து கொள்கிறோம்.

டிப்ஸ்
அடுத்தடுத்த ஸ்லைடுகளில் வழிகாட்டு முறைகளை காணலாம்.
Picture credit: Ohhector via Flickr

மித வேகம், மிக நன்று
வேகத்தை குறைத்தாலே கார் டிரைவிங்கில் பாதி ஆபத்தை தவிர்த்து விடலாம். மேலும், முன்னால் செல்லும் வாகனங்களுடன் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு செல்லுங்கள். கண்டிப்பாக, டெயில் கேட்டிங் செய்து ஓட்டாதீர்கள். அடுத்தடுத்த ஸ்லைடுகளில் சில பராமரிப்பு முறைகளையும், டிரைவிங் முறைகளையும் தொகுத்துள்ளோம்.
Picture credit: Rejik via Flickr

டயர் பராமரிப்பு
மழைக்காலத்தில் கார் தரை பிடிமானம் அதிகம் இருப்பதற்கு போதிய பட்டன் அளவு இருப்பது நல்லது. இது வழுக்கும் தன்மை குறைக்கும். ஒரு ரூபாய் நாணயத்தை டயர் பட்டனின் இடைவெளியில் இதுபோன்று வைத்துப் பாருங்கள். நாணயம் வெளியிலேயே இருந்தால் உடனடியாக டயரை மாற்றிவிடுவது நல்லது. தவிர, டயரின் பக்கவாட்டில் கோடு ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கும். டயர் தேய்ந்து இந்த கோட்டை தொடுவதற்கு முன் டயரை அவசியம் மாற்றிவிடுங்கள்.

அதிக க்ரிப்
போதிய ட்ரெட் இல்லாத டயர்கள் ஈரப்பதத்தால் கடினத் தன்மை குறைந்துவிடும். இது ஆபத்தை விளைவிக்கும். போதிய டரெட் உள்ள டயர்கள் மழைக்காலத்தில் அதிக தரை பிடிமானத்தை தரும். தண்ணீர் செல்வதற்காகவே ட்ரெட் இடைவெளி கொடுக்கப்பட்டுள்ளன. போதிய ட்ரெட் இல்லையெனில், தண்ணீர் வெளியேற வாய்ப்பு இல்லாமல் டயரின் வழுக்குத் தன்மை அதிகரித்து, பிரேக் செயல்திறன் சிறப்பாக இருக்காது. எனவே, மழைக்காலத்தில் கார் பராமரிப்பு முறையில் டயருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

வைப்பர்
வைப்பர் பிளேடுகள் சரியாக இருக்கின்றனவா. வைன்ட்ஷீல்டில் படும் தண்ணீரை சுத்தமாக துடைக்கின்றனவா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். கனமழை நேரத்தில் வைப்பர்களின் செயல்பாடு மிக நன்றாக இருந்தால் மட்டுமே சாலையை தெளிவாக பார்த்து ஓட்ட முடியும். எனவே, இதனை சிறிய விஷயமாக எடுத்துக் கொள்ளாதீர்.
Picture credit: Nadircruise via Flickr

வைப்பர் பிளேடு மாற்றம்
ஆண்டுக்கு ஒருமுறை கண்டிப்பாக வைப்பர் பிளேடுகளை மாற்றிவிடுங்கள். பழைய காராக இருந்தால், வைப்பர் பிளேடு மட்டுமின்றி, வைப்பர் ஆரம்களையும் மாற்றிவிடுவது நல்லது. வைப்பர் ஆர்ம்கள் வைன்ட்ஷீல்டை சரியான அழுத்தம் கொடுத்து துடைக்காவிடில் சாலையை தெளிவாக பார்க்க முடியாது.
Picture credit: Shereen84 via Flickr

இதை செய்யாதீர்
ஹெட்லைட்டுகளையும் சரிபார்த்து விடுங்கள். மேலும், மழை நேரத்தில் போதிய பார்வை திறன் இல்லையெனில், முகப்பு விளக்குகளில் லோ பீம் போட்டு ஒளிர விட்டுச் செல்லுங்கள். ஹைபீட் போடாதீர். அது எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். மேலும், பழைய கார்களில் ஹெட்லைட் ரிஃப்லெக்டர், கண்ணாடி போன்றவற்றையும் மாற்றுவது அவசியம்.
Picture credit: Cobalt123 via Flickr

கனமழையின்போது
கனமழையின்போது வைன்ட்ஷீல்டுகளில் அதிக தண்ணீர் வழிந்து வரும்போது, அதனை துடைக்க வைப்பர் பிளேடுகள் திணறும். அதுபோன்ற சமயங்களில் சாலை ஓரத்தில் பாதுகாப்பாக காரை நிறுத்திவிடுங்கள். ஹசார்டு எச்சரிக்கை விளக்குகளையும் ஒளிர விட மறவாதீர்.
Picture credit: SEATCordoba via Wiki Commons

வளைவுகளில்
வளைவுகளில் மிக கவனமாகவும், நிதான வேகத்திலும் திரும்ப முற்படுங்கள். மழை நேரத்தில் திடீரென பிரேக் பிடிப்பதால், காரின் கட்டுப்பாட்டு இழக்க அதிக வாய்ப்புள்ளது. ஏபிஎஸ் இல்லாத வாகனங்களில் பிரேக்கை முன்கூட்டியே நிதானமாக பிடித்து வளைவுகளில் திரும்ப வேண்டும்.
Picture credit: Xavier33300 via Flickr

நெடுஞ்சாலை
நெடுஞ்சாலையில் செல்லும்போது 3 வினாடிகள் இடைவெளியில் முன்னால் செல்லும் வாகனங்களை பின்தொடர வேண்டும் என்று சொல்வது மரபு. அதேவேளை, மழை நேரத்தில் இது கூடுதலாக இருக்க வேண்டியதை கவனத்தில் கொள்ளுங்கள். முன்னால் செல்லும் வாகனங்கள் திடீரென பிரேக் போட்டால் கூட நீங்கள் பாதுகாப்பாக நிறுத்திவிட முடியும்.

ஓவர்டேக்
டிரக், பஸ் போன்ற கனரக வாகனங்களை முந்த முற்படும்போது அந்த வாகனங்களின் டயர்களிலிருந்து தெறிக்கும் தண்ணீர் உங்களது காரின் வைன்ட்ஷீல்டில் பட்டு பார்வையை மறைக்கும் அபாயம் எழும் வாய்ப்புள்ளது. எனவே, மழைநேரங்களில் முந்தும்போது மிக கவனமாக காரை இயக்குங்கள். இல்லையெனில், பின்தொடர்ந்து சென்று பாதுகாப்பான இடத்தில் முந்துவது சாலச் சிறந்தது. மேலும், இரவுப் பயணத்தை தவிர்ப்பதும் நலம்.
Picture credit: Pleeker via Flickr

எண்ணெய் படலம்
வாகனங்களிலிருந்து கசிந்து சாலையில் கிடக்கும் பெட்ரோல், டீசல் அல்லது ஆயில் போன்றவை தண்ணீர் தெறிக்கும்போது அதனுடன் சேர்ந்து வந்து வைன்ட்ஷீல்டில் படர்ந்துவிடும். இதனால், சாலையை தெளிவாக பார்க்க இயலாது. இதனை உடனடியாகவும் துடைக்க இயலாது என்பதால் கவனமாக செல்லுங்கள்.

தண்ணீர் தேங்கிய சாலைகள்
தண்ணீர் தேங்கிய சாலைகளை தவிர்ப்பது நலம். சில கிமீ தூரம் சுற்றிவந்தாலும் பரவாயில்லை. மாற்றுவழியில் செல்வதே சாலச்சிறந்தது. மேலும்,நன்கு அறிந்த சாலைகளின் வழியாக செல்லுங்கள். தண்ணீர் தேங்கிய சாலைகள் வழியாக செல்லும்போது ஆஃப் கிளட்ச்சில் வைத்து ஆக்சிலேட்டரை மெதுவாக கொடுத்து செல்லுங்கள். இது எக்சாஸ்ட் குழாயில் தண்ணீர் புகுந்துவிடுவதை தவிர்க்கும்.

கவனக் குறைவு
போன் பேசுவது, எஸ்எம்எஸ் டைப் செய்வது போன்றவற்றை தவிர்த்துவிடுங்கள். மியூசிக் சிஸ்டத்தின் சப்தத்தையும் மெதுவாக வைத்துக் கொள்ளுங்கள். இது கவனக் குறைவை தவிர்க்கும்.
Picture credit: Juliarowe via Flickr

ஏசி செயல்பாடு
மழை பெய்யும்போது வைன்ட்ஷீல்டின் உட்புறத்தில் வெண்மையான புகை படரும். இது போன்ற சமயங்களில் ஏசி டீஃப்ராஸ்டரின் செயல்பாடு மிக முக்கியமானதாக இருக்கும். எனவே, ஏசி நன்றாக வேலை செய்கிறதா என்பதையும் சோதனை செய்துகொள்ளுங்கள். காரில் ஏசி இல்லையெனில், உருளைக் கிழங்கு ஒன்றை பாதியாக அறுத்து அதனை கண்ணாடியில் தேய்த்துவிடுங்கள். இது புகை படருவதை தவிர்க்கும்.

இது வேண்டாமே...
தண்ணீர் தேங்கிய சாலைகளில் செல்லும்போது மெதுவாக செல்ல பழகிக் கொள்ளுங்கள். பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மீது தண்ணீரை வாரியடிக்கும் வகையில் ஓட்டாதீர்கள். இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் மழைக்காலத்திற்கு தேவையான எளிமையான பராமரிப்பு முறைகளையும், டிரைவிங் வழிகாட்டு முறைகளும் பயனுள்ளதாக அமையும் என நம்புகிறோம். இதில் கொடுக்கப்படாத விஷயங்கள் இருந்தால் கருத்துப் பெட்டியில் பகிர்ந்து கொள்ளுங்கள். அனைவருக்கும் பயன்படும்.
Picture credit: Andym8y via Flickr


Click it and Unblock the Notifications








