மழை காலத்தில் காரில் முக்கியமா இதை பாதுகாக்கனும்!! நிறைய பேர் மறந்திடுறாங்க!
இந்தியாவில் கோடை காலம் முடிவடைய இன்னும் சில வாரங்கள் உள்ளது. இருப்பினும், இப்போதே நாட்டின் நிறைய பகுதிகளில் பருவமழை காலம் துவங்கிவிட்டது. மழை காலம் வந்துவிட்டாலே காருக்கு கூடுதல் கவனிப்பு தேவை என்று அர்த்தம். ஏனெனில், மழை நீரால் பல்வேறு விதமான பிரச்சனைகள் காரில் ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக, காரின் அடிப்பகுதி அதிக சேதாரங்களை சந்திக்கக்கூடியவை. அத்தகைய சேதாரங்களில் இருந்து உங்களது காரை எவ்வாறு பாதுகாப்பது? மழைநீரால் காரின் அடிப்பகுதி சந்திக்கும் பழுதுகளை இனி பார்க்கலாம்.
துருப்பிடித்தல்: பொதுவாகவே, நீரினால் உலோகங்கள் துருப்பிடிப்பது வழக்கமான ஒன்றுதான். இதை தடுக்க ஸ்பெஷலான பெயிண்ட் கோட்டிங் கொடுக்கப்பட்டாலும், சில சமயங்களில் அதையும் தாண்டி காருக்கு அடியில் துருப்பிடித்தல் ஏற்படுகிறது. சாலைகளில் மழைநீரால் மூடியிருக்கும் மேடு, பள்ளங்களில் காரை தெரியாமல் இறக்கும்போது துருப்பிடித்த பகுதியில் மோத நேர்ந்தால் காருக்கு அடியில் ஓட்டை விழுவதற்கும் வாய்ப்புள்ளது.

இதனை தடுக்க உயர் தரத்திலான வாட்டர் ப்ரூஃப் கோட்டிங்கை காருக்கு அடியில் கொடுக்கலாம். இது இல்லாமல், மெழுகு படலத்தையும் காருக்கு அடியில் வழங்கலாம். மழைநீர் காருக்கு அடியில் உள்ள உலோகத்தின் மீது படுவதை மெழுகு படலம் முற்றிலுமாக தடுக்கும். அதுமட்டுமின்றி, காருக்கு அடியில் கீறல்கள் மற்றும் உராய்வுகளினால் ஏற்படும் பாதிப்புகளையும் மெழுகு படலம் தடுக்கும்.
நீர் அரிப்பு: மழை நீரில் அதிகளவில் உப்பு இருக்காது. ஆனால், மழை மற்றும் குளிர் காலத்தின் போது சாலையில் பனிக்கட்டி உருவாகுவதை தடுக்க இன்றைய கால மாடர்ன் சாலைகளில் தார் உடன் சேர்த்து உப்பு சேர்க்கப்படுகிறது. இந்த உப்பு மழைநீருடன் கலந்து காரின் அடிப்பகுதியில் படும்போது அங்கிருக்கும் உலோகங்கள் அரிக்கப்படுகின்றன. அதாவது, உலோகங்களின் தடிமன் குறைகிறது.
இந்த நிகழ்வு உடனடியாக நிகழாது என்றாலும், கால போக்கில் மெதுவாக ஏற்படும். குறிப்பாக, கடலோர பகுதிகளில் வசிப்பவர்களின் கார்களில் இந்த நிகழ்வு வேகமாக நடப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனை தடுப்பதற்கும், காருக்கு அடியில் ஸ்பெஷல் கோட்டிங் கொடுத்தாலே போதுமானது. கூடுதல் பாதுகாப்பை எதிர்ப்பார்ப்போர் காருக்கு அடியில் பெயிண்ட் அடிக்கலாம்.
எதிர்பாராத சேதங்கள்: ஏற்கனவே கூறியதுபோல், மழைநீரால் சாலையில் எந்த இடத்தில் மேடு உள்ளது, எந்த இடத்தில் பள்ளம் உள்ளது என்பதை காருக்குள் இருந்துக் கொண்டு கண்டறிவது கடினம். இதனால், காரின் அடிப்பகுதி பலத்த சேதமடைவதற்கு வாய்ப்புள்ளது. நமக்கு நேரம் சரியில்லை என்றால், காரின் அடிப்படை சேசிஸ் கூட சேதாரம் ஆகலாம். சேசிஸில் ஏற்படும் சேதங்கள் இலட்ச ரூபாய்களில் கூட செலவை இழுத்துவிட கூடும்.

இதனை தவிர்க்க, அதிகளவில் மழைநீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் காரை மெதுவாக ஓட்டி செல்வது சிறந்தது. காரை நிறுத்திய பின், ஏதேனும் கசிவுகள் இருக்கிறது என்பதை கீழே குனிந்து சரிப்பார்க்கவும். சில பிரச்சனைகள் காலப்போக்கில் பின்னர் காலத்தில்தான் தெரிய வரும். ஆகையால், முன்னெச்சரிக்கையாக மழை காலங்களில் அதிவேக பயணத்தை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்
கார் பாகங்களின் திறன் குறைவு: மழைநீரோடு கலந்து வரும் சேறு, சகதிகள் காருக்கு அடியில் படிவதாலும், சில பாகங்கள் முறையாக செயல்படாமல் போகலாம். குறிப்பாக, அத்தியாவசியமான பிரேக் மற்றும் சஸ்பென்ஷன் பாகங்களில் சேறு அடைத்துக் கொள்வதற்கு நிறைய வாய்ப்புள்ளது. ஆகையால், மழை காலத்திற்கு முன்பும், பின்பும் முறையாக காரை சர்வீஸ் பார்ப்பது எல்லாவற்றிற்கும் நல்லது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மழைக்காலத்தில் காருக்கு அடியில் ஏற்படும் முக்கியமான பிரச்சனைகளை மட்டுமே இந்த தொகுப்பில் குறிப்பிட்டுள்ளோம். மழை காலங்களில், கார்களில் இன்னும் பல விதமான பிரச்சனைகளும் ஏற்படலாம். குறிப்பாக, மழைக்காலத்தில் கார்களின் டயர்கள் மிக முக்கியமான ஒன்றாகும். ஆதலால், மழை காலம் துவங்குவதற்கு முன்பு குறைந்தது கார்களின் பழைய டயர்களை ஆவது மாற்றிவிடுங்கள்.


Click it and Unblock the Notifications








