நாடு முழுக்க இந்த மாதிரி ஆட்கள் இருக்காங்க! குழந்தையை பார்த்துக்குற டைம்ல டிரைவிங்கில் நடக்கக்கூடிய தவறுகள்!!
அன்னையர் தினம் (Mother's Day) ஒவ்வொரு வருடமும் மே மாதத்தின் 2ஆம் ஞாயிறு அன்று கொண்டாடப்படுகிறது. எந்தவொரு குடும்பத்திலும் முக்கிய உறுப்பினராக இருக்கும் அன்னையரின் அர்பணிப்புகளும், தியாகங்களும் போற்றத்தக்கவை. இதனை நினைவுக்கூறும் விதமாகவே அன்னையர் தினம் 40க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது. சமூகத்தில் மட்டுமின்றி, போக்குவரத்திலும் அன்னையர்களின் பங்களிப்பு பெருமைப்படுத்த வேண்டியதாக உள்ளது. தோளுக்கு மேல் வளர்ந்த குழந்தைகளை அமர வைத்து கார் ஓட்டும் வயதான அன்னையர்களை பார்த்திருப்பீர்கள். அதேபோல், குழந்தையை சமீபத்தில் ஈன்றெடுத்த நிலையிலும் கார் ஓட்டக்கூடிய அன்னையர்களையும் சாலையில் பார்க்க முடியும்.
குழந்தைகளை காரில் வைத்து ஓட்டும்போது பாதுகாப்பு சார்ந்த நிறைய விஷயங்களை பின்பற்றி வேண்டியது அவசியம் ஆகும். தோளுக்கு மேல் வளர்ந்த டீன் ஏஜ் குழந்தைகளை காரில் அழைத்தும் செல்லும்போதே சீட் பெல்ட் அணிய வேண்டும் போன்ற டிப்ஸ்களை பின்பற்ற வேண்டியிருக்கும் போது, சிறுவர், சிறுமியரையும், கை குழந்தைகளையும் காரில் அழைத்து செல்லும்போது இன்னும் நிறைய பாதுகாப்பு சார்ந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டியுள்ளது.

கார் இருக்கை: 13 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை காரின் முன் இருக்கையில் அமர வைப்பது தவறாகும். பின் இருக்கைகளே அவர்களுக்கு ஏற்றவை ஆகும். ஏனெனில், விபத்து நேரங்களில் பின் இருக்கையில் இருப்பவர்களுக்கே குறைந்த காயங்கள் ஏற்படுவதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இதைவிட முக்கிய காரணம், காரின் ஏர்பேக் (Airbag) ஆகும்.
விபத்து ஏற்படுவதை உணர்ந்தாலே (சில நேரங்களில் பெரிய பள்ளத்தில் இறக்கி ஏற்றினாலே) பயணிகளின் உயிரை காப்பாற்றும் பொருட்டு ஏர்பேக் விரிவடையும் வகையில் வடிவமைக்கின்றனர். ஏர்பேக்கின் பயன்பாட்டினால் விபத்துகளில் உயிரிழப்புகள் சமீப காலத்தில் வெகுவாக குறைந்திருப்பதால், கார்களில் 6 ஏர்பேக்குகளை நிலையான அம்சமாக வழங்குமாறு மத்திய அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பெரியவர்களுக்கு ஏர்பேக் எந்த அளவிற்கு பாதுகாப்பானதோ அதே அளவிற்கு குழந்தைகளுக்கு ஆபத்தானது ஆகும். விபத்தின்போது கண்ணிமைக்கும் நேரத்தில் விரிவடையும் ஏர்பேக்கின் விசையை தாங்கிக் கொள்ளும் அளவிற்கு குழந்தைகளின் தசைகள் வலுவானதாக இருக்காது. ஆதலால், குழந்தைக்கு 13 வயது தாண்டிய போதிலும், நன்கு உடல் வளத்துடன் இல்லையென்றால் முடிந்தவரையில் பின் இருக்கையில் அமர வைக்க பாருங்கள்.
குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக இருக்கைகள் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றை உங்களது காருக்கு ஏற்ப வாங்கி பொருத்திக் கொள்ளலாம். கை குழந்தைகளுக்கு என இன்னும் பிரத்யேகமான இருக்கைகள் உள்ளன. அவை முன் இருக்கையின் பின்பக்கத்தில் பொருத்தக்கூடியவை ஆகும். காரில் செல்லும்போது கைக்குழந்தையை மடியிலோ அல்லது தோளிலோ வைத்து செல்வது ஆபத்தானது.
சீட்பெல்ட்கள் (Seatbelts): பின் இருக்கையில் அமர வைக்கப்படும் குழந்தைகளை சீட் பெல்ட் அணிய வைப்பது அவசியமான ஒன்றாகும். சீட் பெல்ட் பக்கிளை எவ்வாறு மாட்டுவது/ எவ்வாறு அகற்றுவது என்பதை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பது நல்லது. இதன் மூலமாக, குழந்தைகள் அவர்களாகவே சீட் பெல்ட் அணிவதை ஊக்கப்படுத்த முடியும். முன் இருக்கைக்கு பின்பக்கத்தில் பிரத்யேகமான இருக்கையில் அமர வைக்கப்படும் கைக்குழந்தைகளுக்கு சீட் பெல்ட் அவசியமில்லை.
கதவு லாக்: பின் இருக்கையில் அமர வைக்கப்படுவதினாலேயே பின்னால் குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை எல்லா நேரங்களிலும் கண்காணிப்பது கடினம். ஆதலால், காரை ஸ்டார்ட் செய்யும் முன்னர் காரின் கதவுகள் அனைத்தும் சரியாக லாக் ஆகி உள்ளனவா என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை சரிப்பார்த்துக் கொள்வது நல்லது. அதேபோல், காருக்குள் குழந்தைகளை வைத்து லாக் செய்துவிட்டு செல்வது மிகவும் ஆபத்தானது ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரும்பாலான நேரங்களில் குழந்தைகளை தாய்மார்கள் தான் காரில் அழைத்து சென்று, அழைத்து வருவதால் அன்னையர் தினமான இந்த நல்ல நாளில், குழந்தைகள் உடன் கார் டிரைவிங் செய்யும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை பார்த்துள்ளோம். இந்த தொகுப்பில் நாம் பார்த்தவைகளிலேயே மிகவும் முக்கியமானது, கடைசியாக பார்த்த 'குழந்தைகளை காருக்குள் வைத்து லாக் செய்ய வேண்டாம்' என்கிற டிப்ஸ் ஆகும். ஏனெனில், இதனை மறந்ததினால் காருக்குள் பரிதாபமாக குழந்தை இறந்துப்போன செய்திகளை அவ்வப்போது பார்த்துள்ளோம்.


Click it and Unblock the Notifications








