லட்சங்கள் கொடுத்து பைக்கை வாங்குவது பெரிய விஷயமல்ல... வீட்டில் பத்திரமாக பாதுகாக்கணும்!! அதற்கு சில டிப்ஸ்!
உங்கள் மோட்டார் சைக்கிளை வீட்டிற்குள் கொண்டு சென்று நிறுத்துவதற்கு முன், மோட்டார் சைக்கிளில் படிந்துள்ள அழுக்கு மற்றும் குப்பைகளை அகற்றுவதற்காக அதை முழுமையாக சுத்தம் செய்யவும். ஏனெனில், மூடிய கட்டிடத்திற்குள் பைக்கை நிறுத்தினாலும், அதன் மீது இருக்கும் தூசி துகள்கள் பைக்கின் மேற்பரப்பு அல்லது பாகங்களுக்கு சேதம் விளைவிக்கலாம்.
உங்கள் மோட்டார் சைக்கிளை நீண்ட காலத்திற்கு கேரேஜினுள் நிறுத்த போகிறீர்கள் அல்லது நிறுத்தி வைத்துள்ளீர்கள் எனில் என்ஜின் ஆயில் மற்றும் ஏர் ஃபில்டரை மாற்றுவது நல்லது. ஏனெனில், பழைய என்ஜின் ஆயில் காலப்போக்கில் அமிலமாகி, இயந்திர பாகங்களை சேதப்படுத்தும். நீண்ட மாதங்களுக்கு பின் இதனை பைக்கில் கவனிப்பதை விட, முன்னெச்சரிக்கையாக நிறுத்துவதற்கு முன்னரே மாற்றிவிடுவது சிறந்தது.

உலகில் எந்தவொரு பொருளுக்கும் தேய்மானம் என்பது உள்ளது. இதில் மூடிய கட்டிடத்திற்குள் நிறுத்தப்படும் மோட்டார்சைக்கிள் மட்டும் என்ன விதிவிலக்கா... எனவே ஓரங்கட்டுவதற்கு முன், அதிக தேய்மானம் அல்லது பழுதுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் ஏதேனும் உள்ளதா என உங்கள் மோட்டார் சைக்கிளை முழுமையாக ஆய்வு செய்யவும். கேரேஜில் நிறுத்தி வைக்கும்போது பைக் துருப்பிடிப்பதைத் தடுக்க கேபிள்கள், சங்கிலிகள் மற்றும் கீல்கள் போன்ற அனைத்து நகரும் பாகங்களையும் ஆயில் மூலம் உயவூட்டுங்கள்.
உங்கள் மோட்டார் சைக்கிளுக்கு கணக்கச்சிதமாக சரியாகப் பொருந்தக்கூடிய உயர்தர பைக் கவரை வாங்கி மூடவும். ஈரப்பதம் வெளியேற்றி, போதுமான காற்றோட்டத்தை அனுமதிக்கும் துளைகள் பைக் கவரில் இருந்தல் வேண்டும். அதே வேளையில், பைக்கை தூசியிலிருந்தும் பாதுகாக்க வேண்டும். ஏனெனில், தூசி மற்றும் மண்துகள்களினால் பைக்கின் பெயிண்ட் மட்டுமின்றி சில பாகங்கள் கூட அரிக்கப்படலாம் என ஏற்கனவே கூறினோம் அல்லவா...

முடிந்தால், கேரேஜில் நிறுத்துவதற்கு முன் உங்கள் மோட்டார்சைக்கிளில் உள்ள பேட்டரியை தனியாக வெளியே எடுத்து வீட்டிற்குள் பத்திரமாக வைத்துக் கொள்ளலாம். அத்துடன், கேரேஜில் பைக் இருக்கும் காலம் முழுவதும் நல்ல நிலையில் பேட்டரியை வைத்திருக்க விரும்பினால், பேட்டரி டெண்டர் அல்லது மேனேஜரை பயன்படுத்தி பேட்டரியை சார்ஜ் செய்து வைக்கலாம்.
உங்கள் மோட்டார் சைக்கிளை வீட்டிற்குள் பத்திரமாக நிறுத்த பொருத்தமான இடத்தை தேர்வு செய்யவும். சூரிய ஒளி நேரடியாக படும் பகுதியாக இல்லாமல் இருப்பது மட்டுமின்றி, கடும் குளிர் நிலவக்கூடிய பகுதியாகவும் இல்லாமல் சுத்தமான, உலர்ந்த மற்றும் நன்கு காற்றோட்டமான பகுதியாகவும் இருக்க வேண்டும். டயர்களின் அழுத்தத்தைக் குறைக்க செண்டர் ஸ்டாண்டுகள் அல்லது பேடாக் ஸ்டாண்டுகளைப் பயன்படுத்தவும்.

உங்கள் மோட்டார் சைக்கிள் கேரேஜில் இருக்கும்போது, ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதா என அவ்வப்போது அதைச் சரிபார்க்கவும். டயர் அழுத்தத்தைச் சரிபார்த்து, பூச்சிகள் அல்லது ஈரப்பதம் அதிகரிப்பதற்கான அறிகுறிகள் உள்ளதா என்பதையும் கவனிக்கவும். ஏனெனில், அப்போதுதான் பின்னர் காலத்தில் பைக்கை எந்தவொரு பிரச்சனையுமின்றி, எடுத்து உடனடியாக பயன்படுத்த முடியும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, வீட்டிற்குள் உங்கள் மோட்டார் சைக்கிளை பத்திரப்படுத்தினால், பின்னர் வெளியே எடுக்கும்போது நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்ய முடியும். முறையாக சுத்தம் செய்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவை பத்திரப்படுத்தும் காலத்தில் தூசி, அரிப்பு அல்லது பிற காரணிகளால் ஏற்படக்கூடிய சேதத்திலிருந்து மோட்டார் சைக்கிளை பாதுகாக்கும்.


Click it and Unblock the Notifications









