தீபாவளிக்கு புதுக்கார் டெலிவரி எடுக்கப்போறீங்களா? அதுக்கு முன்னாடி இதை செக் பண்ணுங்க! இல்லன்னா காசு கரி தான்!
தீபாவளியை முன்னிட்டு பலர் கார்களை புக் செய்து அதன் டெலிவரிக்காக காத்திருப்பார்கள். நல்ல நாளில் டெலிவரி (Car Delivery) எடுக்க வேண்டும் என காத்திருப்பார்கள். இப்படியாக நீங்கள் டெலிவரி எடுக்கும் போது எப்படி எல்லாம் ஏமாற்றப்படுகிறீர்கள்? இதிலிருந்து எப்படி தப்பிப்பது? என்ற விரிவான விபரத்தை தான் இங்கே காணப் போகிறோம்.
தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் உச்சகட்டத்தில் இருக்கிறது. பண்டிகை காலங்களில் பலர் தங்கள் வீட்டிற்கு புதிதாக வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பார்கள். ஒரு நல்ல நாளில் வாகனம் வாங்கினால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்ற எண்ணத்தில் இப்படியான பண்டிகை காலங்கள் நல்ல நாட்களில் வாகனங்களை டெலிவரி எடுக்க ஏற்கனவே வாகனங்களை புக் செய்திருப்பார்கள்.

தீபாவளி (Diwali) பண்டிகையை ஒட்டி பலர் தங்கள் வாகன டெலிவரிக்காக காத்திருப்பார்கள். ஆனால் நீங்கள் என்னதான் புதிய வாகனங்கள் வாங்கினாலும் உங்கள் வாகனம் உங்களுக்கு டெலிவரி ஆகும் போது பல்வேறு விதமாக நீங்கள் ஏமாற்றப்பட வாய்ப்பு இருக்கிறது (Fault Vehicle). இதை சில டீலர்கள் வேண்டுமென்றேவும், சிலர் அவர்களுக்கே தெரியாமலும் உங்கள் தலையில் பழுதான வாகனங்களை கட்டி விட்டு சென்று விடுவார்கள்.
இதனால் உங்கள் வாகனத்தை டெலிவரி எடுக்கும் முன்பு நீங்கள் சில விஷயங்களை சோதனை செய்தாலே இப்படியான பிரச்சினைகளிலிருந்து தப்பி விட முடியும். பல நேரங்களில் புதிதாக கார் வாங்கிய பலர் அதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக பெரும் பொருளாதார நஷ்டத்தை சந்தித்திருப்பார்கள். அது போன்ற பிரச்சனையை உங்களுக்கு வரக்கூடாது என்றால் கீழே உள்ள விஷயத்தை கட்டாயம் புதிய கார் வாங்கும் போது ஃபாலோ பண்ணுங்க.

புதிதாக கார் வாங்கி அதை டெலிவரி எடுக்கும் போது வாடிக்கையாளர்கள் பிடிஐ (PDI) என்ற சோதனையை செய்ய வேண்டும் பிடிஐ என்றால் ஃப்ரீ டெலிவரி (Pre Delivery Inspection) இன்ஸ்பெக்ஷன். நல்ல நிலையில் உள்ள வாகனம் தான் உங்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்ய இந்த பிடிஐ சோதனையை என்பது அவசியமாகிறது. வாடிக்கையாளர்களே நேரடியாக இதை செய்வதன் மூலம் அவர்கள் மனதிற்கு ஒரு திருப்தி கிடைக்கிறது.
பிடிஐ (PDI) சோதனையை நாம் எப்படி செய்ய வேண்டும்?: இந்த சோதனையில் முதலில் நாம் செக் செய்ய வேண்டியது காரின் பாடி பெயிண்டுகள் தான். பெரும்பாலான நேரங்களில் கார் ஒரு இடத்தில் இருந்து லாரி மூலம் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படும் போது வெளிப்புறத்தில் ஏதாவது கீறல் (Scratch) அல்லது உரசல் ஏற்பட்டிருக்கலாம். இதனால் அதன் வெளிப்பகுதி பாதிப்படைந்திருக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனால் முதலில் அதைத்தான் செக் செய்ய வேண்டும்.

அடுத்ததாக ஹெட்லைட், வாகனம் தயாரிப்பாளரிடமிருந்து டீலர்ஷிப்பிற்க்கு வரும்போது ஹெட்லைட் என்பது மூடப்படாமல் தான் இருக்கும். இதனால் போக்குவரத்தின் போது ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் அது ஹெட்லைட்டில் பாதிப்பு ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதனால் காரின் ஹெட்லைட் சரியாக இருக்கிறதா சரியாக வேலை செய்கிறதா என்பதை செக் செய்ய வேண்டும். அதேபோல பின்பக்கம் லைட்டுகளும் அதிக பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளது அதையும் செக் செய்து கொள்ள வேண்டும்.
அடுத்ததாக காரின் உட்புறம் பெரும்பாலும் போக்குவரத்தின் போது காரின் உட்புறத்தில் எந்த விதமான பிரச்சினையும் ஏற்பட வாய்ப்புகள் குறைவு தான். ஆனால் தயாரிப்பு ஆலையிலேயே பிரச்சனை இருந்து அதை கவனிக்காமல் விட்டிருந்தால் பிரச்சனைக்குரிய உட்புற வசதி கொண்ட கார் உங்கள் கைக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அதனால் காரின் உட்புறத்தையும் ஒரு முறை செக் செய்து கொள்ளுங்கள்.
அடுத்ததாக காரின் டோர்கள் சரியாக மூட சரியாக அடைக்கிறதா? மழை நேரங்களில் டோர் பகுதி வழியாக மழைநீர் காருக்குள் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என்பதையும் செக் செய்து கொள்ளுங்கள். அடுத்ததாக நீங்கள் வாங்கிய வேரியன்ட் அந்த வேரியன்டிற்கு என்ன இன்ஜின் இருக்கிறது? இதையெல்லாம் சரியாக இருக்கிறதா? என்பதை சோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள். சில நேரம் நீங்கள் வாங்கிய வேரியன்ட் வேறாக இருக்கும் உங்களுக்கு கிடைத்த வேரியன்ட் வேறாக இருக்கும்.
இதுபோக வழக்கமாக உள்ள காரின் கியர் பாக்ஸ் இன்ஃபோடெயின்மன்ட் சிஸ்டம் ஆடியோ சிஸ்டம் உள்ளிட்டவை எல்லாம் சரியாக வேலை செய்கிறதா என செக் செய்து கொள்ளுங்கள். குறிப்பாக காரின் வெளிப்புறத்தை செக் செய்யும் போது பகல் நேரத்தில் செக் செய்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் காரில் வெளிப்புறத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அது உங்களுக்கு கண்ணுக்கு சுலபமாக தெரியும். இரவு நேரத்தில் நீங்கள் பிரச்சனை உள்ள காரை வாங்க கூட வாய்ப்புள்ளது.
ஒருவேளை உங்களுக்கு டெலிவரி செய்யப்பட்ட காரில் ஏதாவது பிரச்சனை இருப்பதாக நீங்கள் கண்டுபிடித்தாலோ அல்லது உணர்ந்தாலோ நீங்கள் உடனடியாக இது குறித்து டீலர்கள் இடம் முறையிடலாம். உங்களுக்கு அந்த பிரச்சனையை சரி செய்து கொடுத்தால் போதும் என்றால் அந்தப் பிரச்சினையை சரி செய்து டீலர்கள் உங்களிடம் வாகனத்தை ஒப்படைப்பார்கள். இல்லை உங்களுக்கு இந்த வாகனமே வேண்டாம் வேறு வாகனம் வேண்டும் என்றாலும் டீலர்கள் அந்த வாகனத்தை மாற்றி தர வேண்டும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான வாகனங்கள் விற்பனையாகின்றன. அதில் ஒரு சில வாகனங்கள் இது போன்ற பிரச்சனைக்குரிய வாகனங்களாக இருக்க வாய்ப்புள்ளது. இதனால் அந்த வாகனம் உங்களுக்கு வந்து விடக்கூடாது என்றால் நீங்கள் இந்த பிடிஐ சோதனையை வாகனத்தின் டெலிவரிக்கு முன்பு செய்ய வேண்டும். அப்பொழுது தான் பிரச்சினை இல்லாமல் இருக்கும் டெலிவரி செய்யப்பட்ட பின்பு இதை நீங்கள் கண்டுபிடித்தால் வாகனத்தை மாற்றி தர மாட்டார்கள்.


Click it and Unblock the Notifications









