தீபாவளி சமயத்தில் கார் வாங்குவதில் இவ்வளவு மேட்டரு இருக்கா... தலையில் கட்டுவதற்கு தான் ட்ரை பண்ணுவாங்க!!
தீபாவளி (Deepavali), தசரா, ஆயுத பூஜை, விஜய தசமி என இந்தியாவில் பண்டிகை நாட்கள் அடுத்தடுத்ததாக வர உள்ளன. அதுமட்டுமின்றி, வருட இறுதியில் வரும் கிறித்துமஸ் பண்டிகையை கூட நம் நாட்டில் விமர்சையாக கொண்டாடுவர். பண்டிகை காலத்தின் போதுதான் புதிய வாகனங்களை வாங்குவதற்கு நம் மக்கள் விரும்புகின்றனர். ஆதலால், இன்னும் சில மாதங்களுக்கு புதிய வாகனங்கள் விற்பனை ஆனது சிறப்பாக இருக்கும். ஆனால் உண்மையில், பண்டிகை காலத்தின் போது புதியதாக கார் வாங்குவது சிறந்த முடிவா? என்பதையும், இதில் உள்ள நன்மை மற்றும் தீமைகளை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
பண்டிகை காலத்தின் போது நிறைய பேர் புது வாகனங்களை வாங்க விரும்புவர் என்பதால், முடிந்தவரையில் விற்பனையை அதிகரிக்க சலுகைகளையும், தள்ளுபடிகளையும் கார் நிறுவனங்கள் அறிவிப்பது ஒவ்வொரு வருடமும் வாடிக்கையாக உள்ளது. இந்த வருடத்திலும் இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகியில் இருந்து ஓலா எலக்ட்ரிக் வரையில் சலுகைகளை அறிவித்துள்ளன.

இவ்வாறான சலுகைகள் கார்களின் விலைகளை வெகுவாக குறைக்கும். இதனால், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை கால சமயத்தில் புதியதாக கார் வாங்குவது உங்களுக்கு பெரிய தொகையை மிச்சப்படுத்துவது போன்று இருக்கலாம். அதேபோல், இந்த சமயத்தில்தான் நிறைய புதிய கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது வழக்கம். சில நேரங்களில் புதிய கார்களுக்கும் குறுகிய கால சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன.
இதன் மூலம், மாடர்ன் தரத்திலான கார்களை குறைந்த விலையில் பெற முடியும். அதேபோல், பண்டிகை கால சமயத்தில் கார் உற்பத்தி தொழிற்சாலைகளும் முழு வீச்சில் செயல்படும் என்பதால், விரைவாக காரை டெலிவிரி பெற முடியும். ஏனெனில், நல்ல நாளின் போதுதான் பெரும்பாலானோர் தங்களது புதிய காரை டெலிவிரி பெற விரும்புவர் என்பது கார் நிறுவனங்களுக்கும் தெரியும். நம் ஊர் மக்கள் எல்லாவற்றிற்கும் நல்ல நேரம் பார்ப்பார்கள் என்பதை நான் கூற வேண்டியது இல்லை.
மேலும், கார் ஷோரூம்களும் முடிந்தவரையில் கார்களை அதிகமாக விற்கும் முயற்சியில் சிறந்த ஃபைனான்சிங் ஆப்ஷன்களை வழங்கும். அதாவது, கார் வாங்குவதற்கான கடனுக்கான வட்டி விகிதத்தை சில ஷோரூம்கள் குறைத்துக் கொள்ளலாம். அதேபோல், மாதத்தவணை திட்டங்களையும், அவற்றை திரும்பி செலுத்தும் தேதியையும் வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப நிர்ணயிக்க கார் நிறுவனங்கள் முயற்சிக்கின்றன.
இவ்வளவு நல்லது இருக்கும் அதேநேரம், பண்டிகை காலத்தின்போது கார் வாங்குவதால் சில பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடலாம். அதாவது, இந்த பண்டிகைக்கு எப்படியாவது ஒரு காரை வாங்கிவிட வேண்டும் என்கிற அவசரத்தில் கார் வாங்கும்போது ஏதாவது ஒரு தவறை செய்துவிடுவோம். குறிப்பாக, சலுகைகள் குறுகிய காலத்திற்கு மட்டுமே கிடைக்கும் என்கிற அவசரம் உங்களை மேலும் பதற்றமடைய வைக்கும்.
இந்த பதற்றத்தால் வாங்கும் கார் குறித்தும், அது உங்களுக்கு எந்த அளவிற்கு பொருத்தமானதாக இருக்கும் என்பதை ஆராயவும் தவறவிடுவீர்கள். தொழிற்சாலையில் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டாலும், குறிப்பிட்ட சில பிரபலமான கார் மாடல்கள் விரைவாகவே விற்று தீர்ந்துவிடும். இந்த பயத்தினாலேயே நிறைய பேர் வாங்காத காரை தேர்வு செய்ய முயல்வீர்கள். அல்லது புக் செய்துவிட்டு காரின் டெலிவிரிக்காக நீண்ட காலம் காத்திருக்க வேண்டி வரலாம்.
கார் தொழிற்சாலையில் ஒவ்வொரு காரும் பல்வேறு விதமான சோதனைகளுக்கும், ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அவசர அவசரமாக உற்பத்தி செய்யப்படுவதால் மிகவும் சில கார்களின் தரம் ஏதேனும் ஒரு விஷயத்தில் கேள்விக்குரியனதாக இருக்கலாம். அல்லது, அவசரமாக காரை ஷோரூக்கு கொண்டுவரும் போது ஷோரூம் அதிகாரிகளுக்கே தெரியாமல் ஏதேனும் பழுதுகள் ஏற்படலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த தொகுப்பின்படி பார்க்கும்போது, பண்டிகை கால சமயத்தில் புதியதாக கார் வாங்குவது உங்களுக்கு நல்லதையும், அதேநேரத்தில் சில பிரச்சனைகளையும் ஏற்படுத்தக்கூடும். ஆதலால், இவ்வாறான காலத்தில் புதியதாக கார் வாங்க போகிறீர்கள் எனில் அதுகுறித்து முன்னரே விசாரித்து, வாங்கும் கார் குறித்து ஒரு தெளிவான முடிவுடனும், பதட்டம் இல்லாமலும் இருக்க முயற்சி செய்யுங்கள்.


Click it and Unblock the Notifications








