இன்ஸ்சூரன்ஸை பெற முடியாது... இந்த சான்றிதழ் இல்லனா இவ்வளவு பிரச்சனை வருமா!! 2-வீலருக்கு கூட முக்கியமானது
எரிபொருள் என்ஜின் உடன் இயங்கும் எந்தவொரு வாகனத்திற்கும் (எலக்ட்ரிக் வாகனத்திற்கு தேவையில்லை) மாசு கட்டுப்பாட்டு (Polution Under Control) சான்றிதழ் அவசியமானதாகும். அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு மையத்திலும் வாகன ஓட்டிகள் இந்த பியுசி சான்றிதழை பெறலாம். இதற்காகவே நாடு முழுவதும் இத்தகைய மையங்களை இந்திய அரசு செயல்பாட்டில் வைத்துள்ளது.
சில பெட்ரோல் பங்க்கள் கூட பியுசி சான்றிதழை வழங்குகின்றன. இந்த சான்றிதழை வழங்குவதற்காக உங்களது வாகனம் எந்த அளவிற்கு மாசுக்களை உமிழ்கிறது என்பது சோதிக்கப்படும். அதாவது என்ஜின் வாயிலாக எக்ஸாஸ்ட் குழாயில் இருந்து வெளிவரும் கார்பன் அளவிடப்பட்டு அந்த வாகனத்திற்கு சான்றிதழை வழங்கலாமா? அல்லது கூடாதா? என்பதை தீர்மானிப்பார்கள்.

சான்றிதழை வழங்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என்றால், உங்களது வாகனம் சாலையில் இயங்க தகுதி கிடையாது என்பது அர்த்தம் ஆகும். அந்த தகுதியை பெற, அதாவது பியுசி சோதனையில் வெற்றிப் பெற உங்களது வாகனத்தில் இருக்கும் பழுதுகளை சரிச்செய்து மீண்டும் சோதனையில் உட்படுத்தலாம். 4 சக்கர வாகனங்கள் மட்டுமின்றி 2 சக்கர வாகனங்களுக்கும் பியுசி சான்றிதழ் அவசியமான ஒன்றாகும்.
மோட்டார் வாகன சட்டம் 1988 பிரிவு 190 (2)-இன் படி ICE எனப்படும் இண்டெர்னல் கம்பஸ்ஷன் என்ஜினை கொண்டிருக்கும் எந்தவொரு வாகனத்திற்கும் பியுசி சான்றிதழ் கட்டாயமானது. ஷோரூமில் புதியதாக வாங்கப்படும் வாகனங்களுக்கு ஷோரூம் அதிகாரிகள் பியுசி சான்றிதழை வாங்கி கொடுத்துவிடுவார்கள். ஆனால் இந்த சான்றிதழ் ஆனது அடுத்த 1 வருடத்திற்கு மட்டுமே செல்லுப்படியாகும்.
அதன்பின் நாமாகவே அருகில் உள்ள அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மையத்திற்கு கொண்டு சென்று வாகனத்தை பரிசோதித்து பியுசி சான்றிதழை பெற்று கொள்ள வேண்டும். ஆனால் உரிமையாளர்கள் பெறும் பியுசி சான்றிதழுக்கு 6 மாதங்கள் மட்டுமே செல்லுப்படியாகும் காலம் உள்ளது. அதாவது, ஒவ்வொரு 6 மாத காலத்திற்கும் ஒருமுறை பியுசி சான்றிதழை புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும்.

சான்றிதழ் காலாவதியாகி விட்டால், அதனை புதுப்பிக்க 7 நாட்கள், அதாவது 1 வாரம் அவகாசம் உண்டு. வாகன சோதனையின்போது போலீஸார் மடக்கி கேட்கும் முக்கியமான ஆவணங்களுள் ஒன்று பியுசி ஆகும். ஆதலால் எப்போதும் இந்த சான்றிதழை வாகனத்தில் வைத்திருக்க வேண்டும்.கார் ஓட்டுபவரிடம் பியுசி சான்றிதழ் இல்லையென்றால், போலீஸார் ரூ.1,000 அபராதம் விதிப்பர்.
இதே தவறை மீண்டும் செய்தால் அபராத தொகை இரு மடங்காகும். இந்த அபராத தொகை மற்றும் தண்டனைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுப்படலாம். பியுசி சான்றிதழை வைத்தில்லாதது இவ்வாறான அபராதங்களுக்கு உங்களை ஆளாக்குவது மட்டுமின்றி, வாகனத்திற்காக ஓர் இன்ஸ்சூரன்ஸ் திட்டத்தை பெறுவதையும் தடுக்கும். இன்ஸ்சூரன்ஸை புதுப்பிக்கும் போதும் பியுசி சான்றிதழை கேட்பார்கள்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: நாட்டில் இயங்கும் வாகனங்கள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் காற்று மாசுவை வெளியிடுகின்றன என்பதை உறுதிப்படுத்தும் விதமாக பியுசி சான்றிதழ் முறை கொண்டுவரப்பட்டது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் வெவ்வேறான பெயர்களில் நடைமுறையில் உள்ளது. ஆனால் எதிர்காலத்தில் எலக்ட்ரிக் வாகனங்கள் தான் என்பதால், இத்தகைய சான்றிதழ் தேவையில்லாமல் போகும்.
Source: CarBlogIndia


Click it and Unblock the Notifications








