சில்லுனு மழை பெய்யுது... கார்ல இளையராஜா பாட்டு போட்டுகிட்டு இதை மட்டும் பண்ணீராதீங்க... என்னனு தெரியுமா?
இந்திய சாலைகளில் சாதாரண நாட்களில் கார் ஓட்டுவதே மிகவும் கடினமான விஷயமாக உள்ளது. ஏனெனில் இங்கு நிறைய பிரச்னைகள் இருக்கின்றன.
சாலைகளின் தரம் மோசமாக இருப்பது, போக்குவரத்து நெரிசல், திடீரென குறுக்கே வரும் பாதசாரிகள் மற்றும் கால்நடைகள் என இங்குள்ள பிரச்னைகளை அடுக்கி கொண்டே போகலாம். இதனுடன் மழையும் சேர்ந்து கொண்டால் நிலைமை இன்னும் சிக்கலாகி விடும்.

தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. பொதுவாக மழைக்காலங்களில் சாலை ஈரமாக இருக்கும் என்பதால், விபத்துக்கள் மிகவும் அதிகமாக நடைபெறும். எனவே மழைக்காலங்களில் கார் ஓட்டும்போது விபத்தில் சிக்காமல் இருக்க வேண்டுமென்றால், ஒரு சில விஷயங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். அவை என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
நல்லதுதான்... ஆனா மழைக்காலத்துல இல்ல!
தற்போது விற்பனைக்கு வரும் பெரும்பாலான கார்களில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது. தொலைதூர பயணங்களின்போது கார் ஒரே சீரான வேகத்தில் செல்வதற்கு க்ரூஸ் கண்ட்ரோல் வசதி பயன்படுகிறது. இதன் மூலம் டிரைவரின் கால்கள் சோர்வடைவதை க்ரூஸ் கண்ட்ரோல் வசதி தடுக்கிறது. இது மிகவும் பயனுள்ள ஒரு வசதிதான்.
ஆனால் மழைக்காலங்களில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்துவது நல்லதல்ல. க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்தும்போது உங்கள் கவனம் சிதறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எவ்வளவுதான் அதிநவீன வசதிகள் இருந்தாலும் கூட, கார் ஓட்டும்போது கவனம் சிதற கூடாது. குறிப்பாக கனமழை போன்ற மோசமான வானிலை நிலவும் சமயங்களில் நாம் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
''நீங்கள் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்தாவிட்டால், கார் ஓட்டுவதில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். மோசமான வானிலை நிலவும் சமயங்களில் இது மிகவும் நல்ல விஷயம்'' என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். எனவே மழை பெய்யும் சமயங்களில் எக்காரணத்தை முன்னிட்டும் க்ரூஸ் கண்ட்ரோல் வசதியை பயன்படுத்த வேண்டாம்.
டயர்கள் தொடர்பை இழந்து விடும்!
காரில் அதிவேகத்தில் பயணம் செய்தால், விபத்துக்களில் சிக்க நேரிடும். குறிப்பாக மழைக்காலத்தில் அதிவேகம் மிகவும் ஆபத்தானது. ஆனால் ஒரு சிலர் இதனை பொருட்படுத்தாமல் ஈரமாக இருக்கும் சாலைகளிலும் மிகவும் வேகமாக செல்கின்றனர். ஈரமாக இருக்கும் சாலைகளில் மணிக்கு சுமார் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றால் கூட, சாலையுடனான தொடர்பை டயர்கள் இழக்க கூடும்.
எனவே காரை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான காரியமாக மாறி விடும். இது மோசமான விபத்துக்களுக்கு வழி வகுக்கலாம். எனவே சாலை ஈரமாக இருக்கும்போது மிதமான வேகத்தில் காரை ஓட்டுங்கள். அவசரமாக எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால், முன் கூட்டியே கிளம்பி விடுங்கள். இதன் மூலம் அதிவேகத்தில் பயணம் செய்வதை தவிர்க்கலாம்.
'கேப்' முக்கியம் பிகிலு!
மழைக்காலங்களில் உங்கள் காருக்கும், உங்களுக்கு முன்னால் சென்று கொண்டிருக்கும் காருக்கும் இடையேயான இடைவெளியை அதிகரித்து கொள்வது நல்லது. சாலை வழுக்கும் என்பதாலும், பார்வை தெளிவாக இருக்காது என்பதாலும், மழைக்காலங்களில் மோதல் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும். எனவே நன்றாக இடைவெளி விட்டு பயணம் செய்யுங்கள்.
இந்த பார்ட்லாம் ஒழுங்கா வேலை செய்யணும்!
மழைக்காலங்களில் பிரேக், விண்டுஷீல்டு வைப்பர்கள், ஹெட்லைட் மற்றும் டெயில்லைட் போன்ற பாகங்கள் நல்ல கண்டிஷனில் இயங்குகின்றனவா? என்பதை ஒரு முறைக்கு இரு முறை உறுதி செய்து கொண்ட பின் காரை எடுப்பது நல்லது. ஏனெனில் மழைக்காலங்களில் இந்த பாகங்கள் கார் மற்றும் அதில் பயணம் செய்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்காற்றுகின்றன.
குறிப்பாக டயர்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். டயர்களில் சரியான 'த்ரெட்' இல்லாமல் இருந்தாலோ அல்லது காற்று சரியான அளவில் இல்லாமல் இருந்தாலோ, இழுவை குறைந்து, விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே மழைக்காலங்களில் உங்கள் காரை 'டபுள் செக்' செய்து கொள்வது மிகவும் அவசியமான ஒன்று.
இசைஞானியிடம் கவனம்!
சில்லென்று மழை பெய்யும்போது, காரில் இளையராஜா பாடல்களை கேட்டு கொண்டே, ஒரு 'லாங் ட்ரிப்' அடித்தால் நன்றாக இருக்கும்தான். ஆனால் இசைஞானியின் பாடல்களில் மயங்கி, சாலையில் கவனத்தை இழந்து விடாதீர்கள். உங்கள் கவனம் முழுக்க முழுக்க சாலையில் மட்டும்தான் இருக்க வேண்டும். அப்போதுதான் விபத்துக்களை தவிர்க்க முடியும். இந்த டிப்ஸ்கள் உங்களுக்கு உபயோகமானதாக இருக்கும் என நம்புகிறோம். உங்கள் பயணம் எப்போதும் பாதுகாப்பாக அமைய டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications








