இதை பார்க்காமல் எந்தவொரு வாகனத்தையும் வெளியே எடுத்து வராதீர்கள் - மழைக்காலத்தில் ரொம்ப முக்கியம்!!
வடகிழக்கு பருவமழை துவங்கிவிட்டது. சென்னையிலும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் அதிக கனமழை இப்போதே துவங்கிவிட்டதை அறியலாம். டிசம்பர் மாதம் முடியும் வரையில் அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கிறது. அதேநேரம், கடந்த ஆண்டு அளவிற்கு கூட இந்த ஆண்டில் அதிக கனமழை பொழிவு இருக்காது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது. மழை காலத்தில் வாகனங்களை கவனிப்பது முக்கியமாகும். முடிந்த வரையில் மழை காலம் துவங்குவதற்கு முன்னரே எல்லாவற்றையும் பராமரித்து வைத்திருப்பது நல்லது.
மழை காலங்களில் சாலையின் ஈரப்பதத்தினாலும், தேங்கியிருக்கும் நீரினாலும் வாகனங்கள் வழுக்கிவிட படுவதற்கு வாய்ப்புள்ளது. அத்தகைய வாய்ப்புகளில் சிக்காமல் இருக்க, வாகனத்தின் டயர்களை தரமானதாக வைத்திருப்பது அவசியம். மழைக்காலம் துவங்கிய பின்னரும் அவ்வப்போது டயரின் தரத்தை சோதித்து பார்த்துக் கொண்டே இருங்கள். டயர்களை எவ்வாறு சோதித்து பார்ப்பது என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

ஆழத்தை சோதிக்கவும்: டயர்களில் முக்கியமானதே அதன் டிரெட்கள் தான். ஒவ்வொரு டயரும் ஒவ்வொரு டிரெட் பேட்டர்னை அவற்றின் தன்மைக்கு ஏற்ப கொண்டுள்ளன. சாலையில் டிரெட்கள் தான் டயருக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த வாகனத்திற்கும் க்ரிப் தருகிறது. எந்தவொரு வாகனத்திலும் ஒரு காலக்கட்டத்திற்கு மேல் டயர் டிரெட்கள் சாலையில் பட்டு, பட்டு தேய ஆரம்பிக்கும்.
டிரெட் தேய்ந்த டயரை மழைக்காலத்தில் பயன்படுத்தாதீர்கள். டிரெட்டின் ஆழத்தை கண்டறிய 10 ரூபாய் நாணயத்தை பயன்படுத்தலாம். டயரின் டிரெட்டினுள் நாணயத்தை நுழையுங்கள். அசோகா தலை தெரிந்தால் டயரை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என அர்த்தம். டயரின் டிரெட் குறைந்தது 2 மில்லி மீட்டராவது இருக்க வேண்டும்.

வயதை சோதிக்கவும்: இன்றைய கால மாடர்ன் டயர்கள் பல்வேறு ஆய்வுகள் மற்றும் சோதனைகளுக்கு மத்தியில் முடிந்தவரையில் நன்கு வலிமையானவை ஆக உருவாக்கப்படுகின்றன. என்னதான் இருந்தாலும் இந்த உலகில் எந்தவொரு பொருளுக்கும் ஒரு ஆயுட்காலம் இருக்கிறது அல்லவா. அதுவும் நம் இந்தியாவில் சில சாலைகளில் இருக்கும் குண்டு, குழிகளை பற்றி சொல்லவே வேண்டாம்.
நம் நாட்டின் சூடும் டயர்களை பாதிக்கின்றன என்பது உண்மைதான். ஒரு சில டயர்களில் டிரெட் நன்றாக இருப்பினும் சைடு சுவர்களில் வெடிப்பு விழ ஆரம்பித்துவிட்டால் டயரை மாற்றிவிடுவது நல்லது. பெரும்பாலான டயர் உற்பத்தி நிறுவனங்கள் தங்களது நிறைய டயர்களுக்கு 10 வருட கால உத்தரவாதத்தை வழங்குகின்றன. நிச்சயமாக 10 வருடங்களுக்கு உள்ளாகவே மாற்றிவிடுவது சிறந்தது.

காற்றின் அளவை சோதிக்கவும்: ஒவ்வொரு வாகன உற்பத்தி நிறுவனங்களும் அவற்றின் வாகனங்களுக்கு குறிப்பிட்ட அழுத்தத்தில் காற்றின் அளவை பரிந்துரைக்கின்றன. டயர்களில் அந்த அளவுகளுக்குள் காற்று இருக்க வேண்டும். அதிகமாக சென்றால் பயணத்தின்போது அதிக அழுத்தம் காரணமாக டயர் வெடிக்க வாய்ப்புண்டு. அத்தகைய சூழலில் எந்தவொரு வாகனத்தையும் கண்ட்ரோல் செய்து கடினம்.
அதற்கென குறைந்த அழுத்தத்திலும் காற்றை கொண்டிருக்க வேண்டாம். அது வாகனத்தின் ஒட்டுமொத்த பெர்ஃபார்மன்ஸை பாதிக்கும். வாகனத்தின் பாகங்கள் சேதமடையலாம். அதுவும் மழைக்காலத்தில் சில அட்வென்ச்சர் சாகசங்களை எல்லாம் செய்ய வேண்டியிருக்கும் என்பதால் டயர்களில் வாகன நிறுவனத்தால் பரிந்துரைக்கப்பட்ட சரியான அளவில் காற்றை பராமரிக்கவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மழைக்காலத்தில் எல்லாவற்றிற்கும் முன்னதாகவே தயாராக இருப்பது நல்லது. குறிப்பாக, வாகனம் விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாகனம் இல்லாமலும் இருக்க முடியாது. சொல்லப்போனால், மழைக்காலத்தில் தான் வாகனங்களின் தேவை அதிகமாக உள்ளது. வாகனங்களில் முடிந்தவரையில் ஆரம்பத்திலேயே நல்ல டயர்களை பொருத்தவும் என்பது எங்களது பரிந்துரைப்பு.


Click it and Unblock the Notifications









