இது தெரியாம தான் அடிக்கடி மெக்கானிக் ஷாப் எடுத்துட்டு போறோமா! பைக்கை விட ஸ்கூட்டர் சிறந்ததா?
இந்திய சாலைகளில் ஸ்கூட்டர்கள் மிகவும் பிரபலமான இருசக்கர வாகனங்களாக திகழ்கின்றன. குறிப்பாக, நகரப் பயணங்களுக்கு இவை வசதியாகவும், பயன்படுத்த எளிதாகவும், நடைமுறைக்கு உகந்ததாகவும் இருப்பது இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். இதனாலேயே, இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் பல நாடுகளில் நகரங்களில் பைக்குகளை காட்டிலும் அதிகமாக ஸ்கூட்டர்களை பயன்படுத்த மக்கள் துவங்கி உள்ளனர்.
இருப்பினும், ஸ்கூட்டரின் டயர்கள் மோட்டார்சைக்கிளின் டயர்களை விட வேகமாக தேய்மானம் அடைகின்றன என்பது பல உரிமையாளர்களின் பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. இந்த வேறுபாட்டிற்கான முக்கிய காரணங்கள் டயர் அளவு, சக்கர இயக்கவியல் மற்றும் வாகனங்கள் பயன்படுத்தப்படும் விதம் உள்ளிட்டவை ஆகும்.

இந்தியாவில், பெரும்பாலான ஸ்கூட்டர்கள் சிறிய சக்கரங்களுடன் உருவாக்கப்படுகின்றன. பொதுவாக, ஸ்கூட்டர்களின் சக்கரங்களின் விட்டம் ஆனது 10 அங்குலம் அல்லது 12 அங்குலமாக தான் உள்ளது. இதற்கு மாறாக, மோட்டார்சைக்கிள்களில் பெரிய அளவிலான சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன; பெரும்பாலும் 17 அங்குலம் அல்லது 18 அங்குல விட்டங்களில் அவை உள்ளன.
சக்கர அளவுகளில் உள்ள இந்த வேறுபாடு, டயர்கள் எவ்வளவு விரைவாகத் தேய்கின்றன என்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு ஸ்கூட்டர் குறிப்பிட்ட தூரத்தை கடக்கும்போது, அதே தூரத்தைக் கடக்க அதன் சிறிய டயர்கள் மோட்டார்சைக்கிள்களின் டயர்களை விட பல மடங்கு அதிகமாகச் சுழல வேண்டியுள்ளது.

உதாரணமாக, ஒரு கிலோமீட்டர் தூரத்தைக் கடக்க, ஒரு 10 அங்குல ஸ்கூட்டரின் டயர் 17 அங்குல சக்கரத்தை கொண்ட மோட்டார்சைக்கிளின் டயரை விட அதிக சுழல வேண்டியுள்ளது. இதன் பொருள் என்னவென்றால், ஸ்கூட்டர் டயரின் மேற்பரப்பு அதே 1 கிமீ தூரத்தில் சாலையுடன் அடிக்கடி தொடர்பு கொள்கிறது. இது விரைவான தேய்மானத்திற்கு வழிவகுக்கிறது.
மேலும், ஏற்கனவே கூறியதுபோல் ஸ்கூட்டர்களை பெரும்பாலும் நகர பயன்பாட்டிற்கு ஏற்ப வடிவமைக்கின்றனர். நகரங்களில் அடிக்கடி பிரேக் பிடித்தல், வேகம் அதிகரித்தல் மற்றும் போக்குவரத்து நெரிசல்களில் பயணித்தல் போன்ற அன்றாட செயல்களுக்கு ஏற்ப ஸ்கூட்டர்கள் வடிவமைக்கப்படுகின்றன. இதற்கேற்ப, ஸ்கூட்டர்களும் நகர்புற பயன்பாட்டிற்கு ஏற்றவை என்கிற பெயரை பெற்றுள்ளன.
ஆனால், இத்தகைய நகர்புற சூழ்நிலைகள் டயர்கள் மீது அதிக அழுத்தத்தை செலுத்தி, தேய்மானத்தை துரிதப்படுத்துகின்றன. மோட்டார்சைக்கிள்கள், அவற்றின் பெரிய சக்கரங்கள் மற்றும் மேம்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பு மூலம் என்ஜினின் ஆற்றல்களை திறம்பட கையாள்கின்றன. இதுவும், பைக்குகளில் நீண்ட கால டயர் ஆயுளுக்கு பங்களிக்கிறது.

இது இல்லாமல் ஸ்கூட்டர்களின் டயர்கள் விரைவில் தேய்மானம் அடைவதற்கு மற்றொரு காரணி, எடை விநியோகம் ஆகும். ஸ்கூட்டர்களில் என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆகியவை பின் சக்கரத்திற்கு அருகில் வழங்கப்படுவதால், பொதுவாக பின் டயரில் அதிக எடை இருக்கும். இந்த சீரற்ற சுமை பின் டயர் மீது கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
இதன் காரணமாக, ஸ்கூட்டர்களின் பின் டயர்கள் முன் டயர்களை விட வேகமாக தேய்மானம் அடைகின்றன. இருப்பினும், வழக்கமான பராமரிப்பு, சரியான காற்றழுத்தத்தை பராமரித்தல் மற்றும் ஒழுக்கமான ரைடிங் ஸ்டைல் (Riding Style) ஆகியவை ஸ்கூட்டர்களில் டயர்களின் ஆயுளை நீட்டிக்க உதவும். சிறிய சக்கர அளவு மற்றும் பயன்பாட்டு முறைகளில் உள்ள வேறுபாடுகள் காரணமாக, ஸ்கூட்டர் டயர்களை பொதுவாக விரைவாக மாற்ற வேண்டியிருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கூட்டர்களின் சிறிய சக்கர அளவுகள், இயக்கத்தின் போது அதிக டயர் சுழற்சிகள், நகரப்புற சாலைகளில் அதிக பயன்பாடு மற்றும் பின்பக்கத்தில் கனமான எடை ஆகியவை மோட்டார் சைக்கிள் டயர்களை விட ஸ்கூட்டர்களின் டயர்கள் விரைவாக தேய்மானம் அடைவதற்கு காரணங்கள் ஆகின்றன.


Click it and Unblock the Notifications









