காரில் இந்த பிரச்சனை ஏற்பட்டால் உடனே மெக்கானிக்கை பார்த்துடுங்க! உயிருக்கே உலை வைக்கக்கூடிய பிரச்சனை இதெல்லாம்
முறையாக பராமரிக்காத பட்சத்தில், காரின் பிரேக் பெடல் பல்வேறு விதங்களில் செயல்படாமல் போவதற்கு வாய்ப்புள்ளது. அவற்றுள் ஒரு விதம் தான், பிரேக் பெடல் முற்றிலுமாக தரையில் படுத்துவிடுவது ஆகும். அதாவது, பிரேக் பெடல் ஏற்கனவே காருக்கு உள்ளே தரையில் கிடப்பதால், உங்களால் பிரேக்கை செயல்படுத்த இயலாது அல்லது காரை பிரேக்கில் இருந்து வெளியே கொண்டுவர முடியாது. இதனையே பிரேக் டவுன் என சொல்கிறார்கள்.
வேகமாக காரில் சென்றுக் கொண்டிருக்கும் பொழுது இவ்வாறு நடந்தால் பெரிய விபத்தை நீங்கள் சந்திக்க வேண்டிவரும். ஆனால் பயப்பட வேண்டாம், காரில் இவ்வாறு பிரேக் பெடல் உடைந்தது போல் செயல்படாமல் போவது அரிதான ஒன்றே. அவ்வப்போது, பிரேக் ஆயில் மற்றும் பிரேக் மாஸ்டர் சிலிண்டரை பராமரித்துவிட்டால் இந்த பிரச்சனை ஏற்படாது.

பிரேக் பெடல் உடைந்துவிட்டது போல் நீங்கள் உணர்ந்தால், அதற்கு சில காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம், பிரேக் ஆயில் கசிவினால் இவ்வாறான பிரச்சனை ஏற்படலாம். பிரேக் பெடலை செயல்படுத்துவது மட்டுமின்றி, அதனை தூக்கி பிடிக்கும் பிரேக் ஆயில் கசிந்தால் பிரேக் பெடல் முழுவதுமாக தரையில் படுத்துவிடும்.
பிரேக் ஆயில் கசிந்தால் அதனை நிச்சயமாக உங்களால் அடையாளம் காண முடியும். ஏனெனில், காரை நிறுத்திய இடத்தில் ஒருவித சமையல் எண்ணெய் போன்ற ஆயிலை கண்டால், அதுதான் பிரேக் ஆயில் லீக்கிற்கான அறிகுறி ஆகும். என்ஜின் ஆயில் போன்று பிரேக் ஆயிலுக்கு எந்தவொரு நிறமும் கிடையாது. கிட்டத்தட்ட நீரை போன்று இருக்கும்.

காரில், பிரேக் பெடல் முற்றிலுமாக தரையில் படுத்துவிடுவதற்கு மற்றொரு காரணம், மோசமான பிரேக் மாஸ்டர் சிலிண்டர் ஆகும். அதாவது, பிரேக் ஆயில் கசிவு எதுவும் இல்லையென்றாலும், உங்களது காரின் பிரேக் பெடல் உடைந்ததுவிட்டது போன்று நீங்கள் உணர்ந்தால், அதற்கு பிரேக் மாஸ்டர் சிலிண்டரில் ஏற்பட்ட பழுது காரணமாக இருக்கலாம்.
ஏனெனில், பிரேக் ஆயிலை அழுத்தத்திற்கு உள்ளாக்கும் முக்கியமான பணியை மாஸ்டர் சிலிண்டர் செய்கிறது. இது கொடுக்கும் அழுத்தத்தின் மூலமாகவே பிரேக் ஆயில் முன்னோக்கி/ பின்னோக்கி தள்ளப்பட்டு காரை நிறுத்துவதையும், பின்னர் நகர்த்துவதையும் செய்ய முடிகிறது. பிரேக் மாஸ்டர் சிலிண்டர் சில சமயங்களில் விட்டு, விட்டு இயங்கவும் செய்யும்.
அத்தகைய சமயங்களில், ஆபத்தை புறந்தள்ளாமல் உடனடியாக பிரேக் மாஸ்டர் சிலிண்டரை பழுது பார்த்துவிடுவது நல்லது. இவை மட்டுமின்றி, பழுதான பிரேக் பூஸ்டரினாலும் கார் பிரேக் பெடல் வலுவிழந்து தரையில் படுத்துவிடலாம். பிரேக் பூஸ்டர் ஆனது மெக்கானிசம் ஆகும். அதாவது, பிரேக் மாஸ்டர் சிலிண்டரை ஆக்டிவேட் செய்யும் வேலையை செய்வது பிரேக் பூஸ்டர் ஆகும்.
இது செயல்படாமல் போனால், பிரேக் மாஸ்டர் சிலிண்டர் செயல்படாமல் போகும். இதனால் பிரேக் ஆயில் முன்னோக்கி தள்ளப்படாமல் போகும். காரை நிறுத்த முடியாது அல்லது நகர்த்த முடியாது. இவை இல்லாமல் வேறொரு காரணத்தையும் கூறலாம். அதாவது, பிரேக் ஆயில் கொஞ்சம் கெட்டியாக இருக்கும். நீங்கள் பிரேக்கை அடிக்கடி பயன்படுத்தும்போது, பிரேக் சிஸ்டம் சூடாகி இந்த ஆயில் நீர்ப்போல் ஆகிவிடும். இதனால், ஆயிலை நகர்த்த மாஸ்டர் சிலிண்டருக்கு அதிக பவர் தேவைப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறு, மெக்கானிக்கல் பாகங்களில் ஏற்படும் பழுதுகள் மட்டுமின்றி, உங்கள் டிரைவிங் ஸ்டைலும் பிரேக் சிஸ்டத்தின் செயல்பாட்டில் பங்கு வகிக்கிறது. ஆதலால், எப்போதும் கவனத்துடனும், முன்னெச்சரிக்கை உடனும் வாகனம் ஓட்டுங்கள். காரை விட்டு வெளியே செல்லும்போது, எப்போதும் ஹேண்ட் பிரேக்கை பயன்படுத்த மறக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications








