பழைய காரை விற்க புரோக்கர் இருக்க வேண்டும் என அவசியமில்லை!! டெக்னாலஜி வளர்ந்திடுச்சு...
இன்றைய கால உலகில் புதியதாக கார் வாங்குவது எந்த அளவிற்கு எளியதானதாக மாறிவிட்டதோ அதேபோன்று பழைய காரை விற்பதும் எளிதாகிவிட்டது. குறிப்பாக, இணையத்தின் வளர்ச்சியினால், எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்தப்படியே உங்களது காரை விற்பனை செய்ய முடியும். ஆனால், ஒரு காலத்தில் காரை வேறொருவரின் தலையில் கட்டுவதற்குள் நாக்கு தள்ளிவிடும். கடைசிவரை காரை விற்க முடியாமல் போனவர்களும் உண்டு. ஆனால், தற்போதைய மாடர்ன் உலகில் உங்களது பழைய காரை நல்ல விலையில் விற்பதற்கு ஏகப்பட்ட வழிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமான 7 வழிமுறைகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நீங்களாகவே விற்பது: காரை நீங்களாகவே விற்பது கிட்டத்தட்ட நீங்களாக ஒரு சிறு கார்ப்பிரேட் கம்பெனியை தற்காலிகமாக நடத்துவது போன்றது ஆகும். இதில் நீங்கள் தான் சிஇஓ, மார்க்கெட்டிங் மேலாளர், விற்பனை பிரதிநிதி. அதாவது, அத்தனை வேலைகளையும் நீங்களாக உங்களுக்கு தெரிந்த நபர்கள் மூலம் மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஃபேஸ்புக், ஓ.எல்.எக்ஸ் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்தலாம்.

டீலர்ஷிப் ஷோரூமில் எக்ஸ்சேஞ்ச்: எனக்கு நிறைய வேலை உள்ளது, காரை விற்பதை எல்லாம் கவனித்துக் கொள்ள முடியாது என்போர் சிம்பிளாக காரை அருகில் உள்ள பிராண்ட் டீலர்ஷிப் ஷோரூமில் மாற்றி, கூடுதல் பணத்தை செலுத்தி புத்தம் புதிய காரை வாங்கிக் கொள்ளலாம். இந்த விஷயத்தில், நீங்கள் எதிர்பார்க்கின்ற மதிப்பு உங்கள் காருக்கு கிடைக்காமல் போகலாம். ஏனெனில், டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றும் இலவச சேவை மையம் கிடையாது அல்லவா...
யூஸ்டு கார்ஸ் டீலரை அணுகலாம்: டீலர்ஷிப் ஷோரூமை விட அருகில் உள்ள யூஸ்டு கார்களுக்கான தரகரை அணுகுவது வேலையை இன்னும் விரைவாக்கும். டீலர்ஷிப்பை போல், இந்த முறையிலும் உங்களது காருக்கு மிகவும் பொருத்தமான விலை கிடைக்கும் என கூறிவிட முடியாது. முடிந்தவரையில், நிறைய யூஸ்டு கார் டீலர்களை அணுகவும்.

ஆன்லைன் விற்பனை: ஓ.எல்.எக்ஸ் நிறுவனம், வாகனங்களை விற்பனை செய்வதற்கென பிரத்யேகமாக ஓ.எல்.எக்ஸ் ஆட்டோஸ் என்கிற இணையத்தளத்தை கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி, கார் தேக்கோ, கார்ஸ்24 போன்ற ஆன்லைன் பிளாட்ஃபாரங்களும் உள்ளன. இந்த நிறுவனங்களை சேர்ந்தவர்கள் உங்களது காரை நேரில் வந்து ஆராய்ந்து பார்ப்பார்கள். அதாவது, நீங்கள் உங்களது பழைய காரை தொட கூட வேண்டியிருக்காது. ஆனால், சர்வீஸ் சார்ஜஸ் இருக்கும்.
ஏலம்: இது எல்லா காருக்கும் பொருந்தாது. உங்களது கார் அரிதாக உருவாக்கப்பட்ட கார் அல்லது மிக பழமையான கார் என்றால் நீங்கள் ஏலம் முறையில் உங்களது காரை விற்கலாம். ஆனால், ஏலம் விடும் இடத்திற்கு காரை கொண்டு செல்ல வேண்டும் மற்றும் அவர்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், உங்களது காரை வாங்க நிறைய பேர் ஆர்வம் காட்டினால், நீங்கள் எதிர்பார்க்காத தொகையில் கூட கார் விலை போகலாம்.

பழைய இரும்பு கடை: எங்கேயும் காரை விற்க முடியாத நிலை ஏற்பட்டால், கடைசியில் வேறு வழியில்லாமல் பழைய இரும்பு கடைக்கு தான் கொண்டு செல்ல வேண்டும். முழுக்க முழுக்க வாகனங்களை மட்டுமே வாங்கக்கூடிய பழைய இரும்பு கடைகளும் செயல்படுகின்றன. கொஞ்சம் கூட நேரமில்லை... காரை விற்றாக வேண்டும் எனில், இந்த இடம் சரியானது. ஆனால், அடி மாட்டு விலைக்கு எடுத்துக் கொள்வார்கள்.
எதிர்பாராத அதிர்ஷ்டம்: இணையம், யூஸ்டு கார் டீலர் எல்லாம் வருவதற்கு முன்னர், காரை விற்க வேண்டுமெனில் நண்பர்களிடமும், மற்ற தெரிந்தவர்களிடமும் இதுகுறித்து கூறுவதை தவிர்த்து வேறெதுவும் நம்மால் செய்ய முடியாத நிலை இருந்தது. இதனால், யாரென்றே தெரியாத நண்பருக்கு நண்பர் (அ) உறவினர் வந்து காரை கேட்பர். அதாவது, நீங்கள் காரை விற்க முடியாமல் அந்த திட்டத்தையே கைவிட்ட பின்னர் ஒருவர் காரை விலைக்கு கேட்பார். அவ்வாறும் உங்களது காரை விற்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சமீபத்தில் வாங்கிய புதிய காரை விற்க போகிறீர்கள் எனில், ஏற்கக்கூடிய விலையை நிர்ணயித்தால் அது விரைவாக விற்பனையாகிவிடும். அதேபோன்று, 70, 80 வருடங்கள் பழமையான அரிதான கிளாசிக் கார்களை வாங்குவதற்கும் ஒரு பெரிய கூட்டம் உள்ளது. ஆனால், இதற்கு இடைப்பட்ட காலத்தை சேர்ந்த பழைய கார்களை விற்பனை செய்வதுதான் கொஞ்சம் கடினம். இருப்பினும், கவலை வேண்டாம்... மேலே கூறப்பட்டுள்ள வழிகளில் ஒன்றை பின்பற்றி உங்களது காரை விற்பனை செய்துவிட பாருங்கள்.


Click it and Unblock the Notifications









