லோன் கட்டிட்டு இருக்கும்போதே காரை விற்க முடியுமா?.. வேறொருவருக்கு விற்க என்னென்ன செய்ய வேண்டும்?..
புதிதாக கார் வாங்குவது இப்போது மிகவும் சுலபமாகிவிட்டது. வங்கி கடன் திட்டமே அதை மிகவும் சுலபமாக மாற்றியிருக்கின்றது. இதுமட்டுமல்ல தங்களின் தயாரிப்புகளின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு வாகன உற்பத்தியாளர்களும், தங்கள் சார்பில், வங்கிகளுடன் கூட்டணி வைத்து குறைவான வட்டி விகிதத்தில் வாகனங்களை விற்பனைச் செய்துக் கொண்டிருக்கின்றனர். இதுபோன்று பல்வேறு காரணங்களால் இப்போது வீட்டுக்கு வீடு கார்கள் இருக்கத் தொடங்கி இருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் சிபிள் ஸ்கோர் நன்றாக இருந்தால் கார் வாங்குவது மிகவும் சுலபம்.
இதுபோன்று ரொம்ப சுலபமாக கார் கடனில் கிடைப்பதால் ஒரு சிலர் நம்மால் கடனை சரியாக அடைக்க முடியுமா?, முடியாதா?, என்றுகூட சிந்திக்காமல் காரை வாங்கிவிடுகின்றனர். பின்னாளில் கடனைக் கட்ட முடியாமல் அவர்கள் தவிக்க தொடங்குகின்றனர். இந்த மாதிரியான சூழலில் சிக்குவோர் பெரும்பாலும் காரை விற்றாவது வங்கியில் வாங்கிய கடனை அடைத்து விடலாம் என்றே நினைப்பர்.

ஆனால், கடனில் உள்ள வாகனத்தை எப்படி விற்க முடியும்? என்கிற கேள்வி இங்கே வரும். இதற்கு ஒரு சில வழிகளைப் பின்பற்றினால் அந்த காரை விற்க முடியும். அந்த வழிகள் என்ன என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.
கடனில் வாங்கிய காரை விற்பது என வந்துவிட்டால், முதலில் நீங்கள் இதுவரை எவ்வளவு ரூபாய் அந்த காருக்காக வாங்கிய கடனில் செலுத்தி இருக்கின்றீர்கள் என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். அத்துடன், ஏதாவது மறைமுக கட்டணம் அல்லது பெனால்ட்டி தொகை இருக்கின்றதா என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
இது உங்களின் கடனில் உள்ள வாகனத்திற்கு சரியான விலையை தீர்மானிக்க உதவியாக இருக்கும். அதுமட்டுமல்ல உங்களிடம் அந்த கடனில் உள்ள வாகனத்தை வாங்குவோர்க்கும் தெளிவான பார்வையை இதன் வாயிலாக தர முடியும். இதுமட்டுமின்றி உங்கள் காரின் சந்தை மதிப்பை தெரிந்துக் கொள்வதும் நல்லது.
இதற்கு ஆன்லைனை நாடலாம். சில பிரத்யேக தளங்கள் இதற்கென செயல்பட்டு வருகின்றன. உங்கள் காரின் உற்பத்தி ஆண்டு, மாடல் மற்றும் கிமீ பயணம் போன்ற தகவல்களை உள்ளிட்டால் போதும் அந்த காரின் மதிப்பை துள்ளியமாக தந்துவிடும். இதை வைத்தும் உங்கள் கடனில் காருக்கான மதிப்பை சரியாக உங்களால் நிர்ணயிக்க முடியும்.
மேலும், இந்த தகவலை உங்களிடம் காரை வாங்க வருபவரிடம் அப்படியே சொல்லிவிடுவது நல்லது. இது சிறந்த வியாபாரத்திற்கு வழிவகுக்கும். இதுமட்டுமல்ல, உங்களின் காருக்கு கடன் வழங்கிய வங்கியிடம் சென்று லோனை வேறொருவரின் பெயருக்கு மாற்றிக் கொடுப்பதற்கான சாத்தியம் இருக்கிறதா என்பதையும் தெரிந்துக் கொள்ளவும்.
இப்போது பல வங்கிகள் இந்த ஆப்ஷனை அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றன. வீட்டு லோனை குடும்பத்தில் உள்ள வேறொருவரின் பெயருக்கு மாற்றிக் கொடுப்பதை இதையும் வங்கிகள் செய்துக் கொண்டிருக்கின்றன. எனவே இதற்கான ஆவணங்களை வங்கி கேட்கும் அனைத்தையும் சிக்கல் இல்லாமல் வழங்கினால் அந்த வாகனத்தை வேறொருவருக்கு விற்பதில் எந்த சிக்கலும் ஏற்படாது.
அதாவது, நீங்கள் செலுத்திக் கொண்டிருந்த வாகன கடனை, அந்த காரை வாங்குபவரின் பெயருக்கு மாற்றவதற்கான வேலைகளை சிக்கல் இல்லாமல் செய்து முடிக்க முடியும். இந்த பணிகளின்போது உடனிருந்து செய்து முடிப்பது மிகவும் நல்லது. பின் வரும் நாளில் சிக்காமல் வராமல் முன்கூட்டியே தவிர்த்துவிட முடியும்.
இத்துடன், உங்களின் பெயரில் இருந்த வாகன கடன் வேறு ஒருவரின் பெயருக்கு மாற்றப்பட்டதற்கான என்ஓசி (NOC) சான்றுகளையும் உடனடியாக வங்கியிடம் இருந்து பெற்றுக் கொள்வது நல்லது. இது எதிர்காலத்தில் வரும் சிக்கல்களில் இருந்து நீங்கள் தப்பிக்க மிகப் பெரிய உதவியாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பலர் கடனில் உள்ள வாகனங்களை விற்பனைச் செய்ய முடியாது என எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இப்போது சில வங்கிகள் இதற்கு அனுமதிக்கின்றன. வாங்குபவர் ஒத்துப் போனால் போதும். அவர்களிடம் இருந்து சில ஆவணங்களையும், நம்மிடம் இருந்து சில ஆவணங்களையும் பெற்று குறிப்பிட்ட கட்டணத்தின்கீழ் இந்த வேலையை வங்கிகள் பார்த்து தந்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், குறிப்பிட்ட சில வங்கிகளே இதை செய்துக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








