டயர் கம்பெனிகள் கூட இவ்வளவு விஷயங்களை சொல்லாது! அடிக்கடி டயரை மாற்ற வேண்டியிருக்காது... இத எல்லாம் ஃபாலோ பண்ணா
எந்தவொரு வாகனத்திற்கும் முக்கியமான பாகம் அதன் டயர்கள் ஆகும். ஏனெனில், வாகனத்தின் மொத்த எடையையும் தாங்கி நிற்பது டயர்களே ஆகும். குறிப்பாக, கார் போன்ற அதிவேகத்தில் இயங்கக்கூடிய வாகனங்களில் டயர்களின் பங்களிப்பு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.
அதேபோல், குறைவான தடிமானத்தில் இருக்கும் பைக்கின் டயர்களையும் அவ்வப்போது சரிப்பார்ப்பது அவசியமான ஒன்றாகும். பழைய டயர்களை பயன்படுத்துவது ஆபத்தானது. வாகனத்தின் டயர்களை சரிப்பார்ப்பதற்கு என்று சில பிரத்யேகமான வழிமுறைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

டயரின் டிரெட் (Tread) ஆழத்தை அறியவும்: ஒவ்வொரு டயரிலும் ஒவ்வொரு விதமான டிசைனில் டிரெட் வழங்கப்படுகிறது. இதனால்தான், மண்ணில் பதியும் டயரின் அச்சு ஒவ்வொரு வாகனத்திற்கும் வேறுப்படுகிறது. டயரின் டிரெட் ஆழத்தை அறிய சில வழிகள் உள்ளன. அவற்றுள் முக்கியமானது, டயரின் டிரெட் பள்ளத்திற்குள் கொடுக்கப்படும் வெட்டுக்களை கவனிப்பதாகும்.
டிரெட்களின் டிசைன் ஒவ்வொரு டயர்களிலும் மாறுப்பட்டாலும், டிரெட் டிசைனில் கொடுக்கப்படும் பள்ளங்கள் ஒரே அளவிலான ஆழத்தில் இருக்கும். இந்த ஆழம் குறைந்தால் டயருக்கு டிராக்ஷன் (Traction) கிடைக்காமல், வாகனம் சாலையில் வழுக்கிக் கொண்டு செல்லும். டிரெட்டின் ஆழம் குறைவதை கண்டறிய, டிரெட்டிற்காக கொடுக்கப்பட்ட பள்ளத்திற்குள் சில இடங்களில் சிறிய வெட்டு இருப்பதை கவனிக்கலாம்.

இந்த வெட்டுக்கள் எவ்வளவு ஆழத்தில் உள்ளன என்பதை வைத்து டயர் எந்த அளவிற்கு தேய்ந்துள்ளது என்பதை அறியலாம். இது இல்லாமல், இன்னொரு வழியும் டயர் தேய்வதை அறிய உள்ளது. அதுதான், நாணய முறை ஆகும். அதாவது, ஒரு குறிப்பிட்ட நாணயத்தை அவ்வப்போது டிரெட்டின் பள்ளத்தில் விட்டு ஆழம் எவ்வளவு உள்ளது என்பதை கண்டறியலாம்.
நாணயங்களின் அளவு இந்தியா முழுவதும் மாறுப்படாது என்பதால், இதன் மூலம் சரியான அளவீட்டை பெறலாம். கார்களில் டயரின் டிரெட் ஆழம் ஆனது குறைந்தது 1.6 மிமீ-கள் ஆவது இருக்க வேண்டும். இதற்கும் குறைவான டிரெட் ஆழத்துடன் இருக்கும் டயர்களால் சாலையில் பிடிமானத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியாது என்பதால், குறிப்பாக ஈரமான சாலையில் வாகனங்கள் வழுக்கிவிடப் படுவதற்கு வாய்ப்புள்ளது.
டயரின் டிரெட்களில் ஒழுங்கற்ற முறையில் தேய்மானங்கள் ஏற்பட்டு இருந்தால், அது காரின் சஸ்பென்ஷன் (Suspension) பிரச்சனை அல்லது ஒழுங்கற்ற சக்கர அமைப்பின் காரணமாக இருக்கலாம். டயரின் ஒரு பகுதி மட்டும் சுற்றிலும் அதிகமாக தேய்மானத்தை கண்டிருந்தால், காரின் சக்கரங்கள் ஒரே நேர்கோட்டில் உள்ளனவா என்பதை தகுந்த மெக்கானிக் உடன் சேர்ந்து சரிப்பார்க்கவும்.
டயரின் பக்கவாட்டு சுவர்களை கவனிக்கவும்: டயரினுள் காற்றழுத்தம் அதிகமானிலோ அல்லது குறைந்தாலோ அதனால் ஏற்படும் விளைவுகள் டயரின் பக்கவாட்டு சுவரில் தான் எதிரொலிக்கும். ஆதலால், டயரின் பக்கவாட்டு சுவரில் ஏதேனும் வெடிப்புகள், வெட்டுகள் அல்லது வீக்கங்கள் உள்ளனவா என்பதை அவ்வப்போது கண்காணிக்கவும். இதில், கொப்பளம் போல ஏற்படும் டயர் வீக்கங்கள் ஆபத்தானவை ஆகும்.
அதேபோல், டயரின் பக்கவாட்டு சுவரில் வெடிப்புகளும் டயர் வெடிப்புக்கு வழிவகுக்கக்கூடும். வெடிப்புகள், வெட்டுக்கள் மற்றும் வீக்கங்கள் மட்டுமின்றி, டயரின் பக்கவாட்டு சுவரில் ஏதேனும் வித்தியாசமான கறைகள் ஏற்பட்டுள்ளது போல் தெரிந்தாலோ அல்லது டயரின் நிறம் மாறியிருப்பது போல் தெரிந்தாலோ அந்த டயரை மாற்றிவிடுவது நல்லது. ஏனெனில் இந்த அறிகுறிகள் டயரில் ஏற்பட்டுள்ள சேதாரத்தை காட்டுவதுடன், டயரின் ஆயுட்காலம் குறைத்து வருவதையும் காட்டுகிறது.
டயரின் ஆயுட்காலத்தை கண்டறிதல் அவசியம்: உலகில் எந்தவொரு பொருளுக்கும் ஆயுட்காலம் உள்ளது. அந்த வகையில் வாகனத்தின் டயர்களுக்கும் ஆயுட்காலம் உள்ளது. 6இல் இருந்து அதிகப்பட்சமாக 10 வருடங்கள் மட்டுமே எந்தவொரு டயரையும் பயன்படுத்த வேண்டும். 10 வருடங்களுக்கு பின், டயர் நல்ல நிலையில் காட்சி தந்தாலும் மாற்றிவிடுவது நல்லது.
டயரின் ஆயுட்காலத்தை கண்டறிய டயர் எப்போது உருவாக்கப்பட்டது என்கிற விபரம் நமக்கு தேவை. இதற்கு டயரின் DOT எண்ணை பார்க்க வேண்டும். DOT எண் ஆனது ஒவ்வொரு டயரிலும் பொறிக்கப்படும் எண்கள் ஆகும். இந்த எண்களில் கடைசி 4 எண்களை பார்த்தால், டயர் எந்த ஆண்டில் எந்த மாதத்தில் உருவாக்கப்பட்டது என்கிற விபரம் தெரிந்துவிடும்.
பிரேக் திறன் பாதிக்கப்படுவது: பழுதடைந்த டயர், வாகனத்தின் பிரேக் சிஸ்டத்தையும் பாதிக்கும். வழக்கத்தை காட்டிலும் பிரேக் சரியாக செயல்படவில்லை என அடிக்கடி உணர ஆரம்பிக்கிறீர்கள் எனில், அது உங்களது வாகனத்தின் பழுதடைந்த டயர்களினால் ஆக கூட இருக்கலாம். பழைய டயர்களில் பிரேக் கொடுத்த உடன் வாகனம் நிற்கும் தூரம் கொஞ்சம் அதிகமாக இருக்கும்.
அடிக்கடி பஞ்சர்: டயரை மாற்ற வேண்டும் என்பதற்கான மற்றொரு அறிகுறி அடிக்கடி டயர் பஞ்சராகுவது ஆகும். புதிய டயராக இருந்தாலும் சரி, பழைய டயராக இருந்தாலும் சரி பஞ்சராகுவது உண்டு. ஆனால், பழைய டயர்கள் கொஞ்சம் கூர்மையான பொருட்களுக்கே பஞ்சராகி விடக்கூடும். ஏனெனில், அதற்கேற்ப பழைய டயர்கள் தேய்மானங்களை சந்தித்து இருக்கும்.
மற்ற அறிகுறிகள்: மேற்கூறப்பட்ட அறிகுறிகளை கண்ணால் காண்பதற்கு முன்பே, வாகனத்தில் பயணம் செய்யும்போதே சில வித்தியாசங்கள் உங்களுக்கு தோன்றலாம். பயணம் செய்யும்போது அதிர்வுகள் அல்லது குலுக்கல்களை சந்திக்க நேரலாம். அல்லது, வித்தியாசமான சத்தங்கள் ஓடும்போது டயரில் இருந்து வெளிவரலாம். அல்லது, பயணத்தின்போது டயரில் சிக்கிய கற்கள் மற்றும் குச்சிகள் ஒரு கட்டத்திற்கு மேல் தூக்கி வீசப்படுவதை காணலாம்.
உங்களது வாகனத்தின் டயர் சேதமாகி இருக்கலாம் என்பதற்கு இது ஒரு அறிகுறி ஆகும். பெரும்பாலும் புதியதாக வாங்கிய டயர்களில் தான் டிரெட்டின் ஆழம் அதிகமாக இருக்கும் என்பதால், கற்கள் மற்றும் குச்சிகள் சிக்கிக் கொள்வதற்கு வாய்ப்புண்டு. சிறிய கல்லாக இருந்தாலும், கூர்மையானதாக இருந்தால் அது டயரில் நீண்ட நாட்களுக்கு இருக்கும் பட்சத்தில் சேதத்தை ஏற்படுத்தக்கூடும். பழுதடைந்த டயர் வாகனத்தின் மைலேஜையும் குறைக்கும் என்பதை மறக்காதீர்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மழைக்காலத்தில் மட்டுமல்ல, வெயில்காலத்திலும் வாகனத்தின் டயர்களை சிறந்த தரத்தில் வைத்திருப்பது அவசியமாகும். ஏனெனில், கொளுத்தும் வெயிலில் சூடான சாலையில் எந்தவொரு டயரும் சேதமடையக் கூடியவையே. இதனால், இந்த அசாதாரணமான கால சூழ்நிலையில் இக்கட்டான கட்டத்தில் சிக்கி தவிக்காமல், வாகனத்தின் டயர்களை முன்கூட்டியே பராமரித்து வைப்பது நல்லது.


Click it and Unblock the Notifications








