வெயில் காலத்தில் காரில் சில அறிகுறிகள் வந்தாலே உஷார் ஆகிடனும்! மெக்கானிக் வரை போக தேவையில்லை!
கோடைக்காலம் (Summer), ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு வேண்டுமாயின் மகிழ்ச்சியான வசந்த காலமாக இருக்கலாமே தவிர்த்து, நம் இந்தியாவில் கோடைக்காலம் பல அசவுகரியங்களை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. தனிநபர் சவுகரியத்தில் இருந்து, வாகனங்களுக்கான சவுகரியமான சூழல் வரையில் என எல்லாமே வெயில் காலத்தில் தடைப்படுகிறது.
குறிப்பாக, வாகனங்களின் என்ஜின் சிஸ்டங்கள் (Engine Systems) வழக்கத்தை காட்டிலும் அதிக வெப்பமான சூழலை எதிர்கொள்கின்றன. இதனால், கார் என்ஜினின் கூலிங் சிஸ்டம் (Cooling System) முறையாக செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இல்லையேல், நன்கு சூடான மதிய வேளையில் என்ஜின் சூடாகி கார் பாதி வழியில் நிற்க வேண்டிய சூழல் ஏற்படலாம்.

கார் என்ஜின் கூலிங் சிஸ்டத்தில் உள்ள திரவம் எவ்வளவு உள்ளது என்பதை கோடைக்காலத்தில் அவ்வப்போது செக் செய்ய வேண்டும். ஏனெனில், பொதுவாகவே கார் என்ஜினின் அதீத வெப்பத்தினால், கூலிங் சிஸ்டத்தில் உள்ள திரவம் ஆவியாகுவது வழக்கம் ஆகும். இந்த ஆவியாகும் செயல்முறை கோடைக்காலத்தில் கொஞ்சம் வேகமாக நடக்கும். அதுமட்டுமின்றி, இந்த கூலிங் திரவம் தூசி, துகள்களால் அவ்வப்போது அசுத்தம் அடைகின்றன.
கூலிங் திரவத்தை பாதுகாப்பதுடன், என்ஜின் சிஸ்டத்தில் உள்ள ரேடியேட்டர் (Radiator) மற்றும் மின்விசிறிகள் முறையாக செயல்படுகின்றனவா என்பதையும் கோடைக்காலத்தின் போது அவ்வப்போது சோதித்துக் கொள்வது அவசியம் ஆகும். இவை இல்லாமல், வெயில் காலத்தில் காரின் என்ஜின் சிஸ்டத்தை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்க கார் ஓட்டும் ஸ்டைலில் இருந்து, இன்னும் பல டிப்ஸ்களை பின்பற்ற வேண்டியுள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

கூலிங் சிஸ்டத்தை பராமரித்தல்: ஏற்கனவே கூறியதுபோல், கார் என்ஜின் கூலிங் சிஸ்டத்தில் அவ்வப்போது திரவத்தின் மீது ஒரு கண் இருக்கட்டும். திரவம் ஆவியாகுவதை காட்டிலும், தூசி, துகள்களால் திரவம் அடிக்கடி அசுத்தம் ஆகுவதற்கே வாய்ப்புள்ளது. கோடைக்காலத்தில் காற்றிலும், மண்ணிலும் ஈரப்பதம் குறைவதால் தூசி, துகள்கள் இன்னும் அதிகமாக உருவாகும் என்பதால் கூலிங் சிஸ்டத்தில் வழக்கத்தை காட்டிலும் அடிக்கடி திரவத்தை மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.
மிகவும் உடனுக்குடன் திரவத்தை மாற்ற வேண்டியிருந்தால், என்ஜின் கூலிங் சிஸ்டத்தில் கசிவு இருக்கிறது என்று அர்த்தம். அத்தகைய பிரச்சனைகளை அனுபவமிக்க மெக்கானிக்கிடம் கொண்டுப்போய் காட்டுவதே நல்லது. கூலிங் சிஸ்டத்தில் இருக்கும் திரவத்தை போலவே, கார் என்ஜின் சிஸ்டத்தில் உள்ள ரேடியேட்டரிலும் அவ்வப்போது தூசி, துகள்கள் படிவது வாடிக்கையாகும். அவற்றை அவ்வப்போது அகற்றி, என்ஜினிற்கு தூய்மையான மற்றும் குளிர்ச்சியான காற்றுக்கு வழிவகை செய்யவும்.
முக்கியமாக, ரேடியேட்டர் வாயிலாக காற்று செல்ல வேண்டும் என்றால், அதன் பாதையில் தூசி, துகள்கள் அடைப்பட்டு இருக்க கூடாது. அதேபோல், என்ஜின் சிஸ்டத்தில் உள்ள குழாய்கள் மற்றும் பெல்ட்களின் தரத்தையும் அவ்வப்போது சரிப்பார்த்துக் கொள்ளவும். ஏனெனில், இவற்றில் பிரச்சனை ஏற்பட்டாலும் கார் என்ஜினின் கூலிங் சிஸ்டத்தின் செயல்படுதிறன் பாதிக்கும்.
இவை எல்லாவற்றையும் விட, என்ஜினுக்கு குளிர்ந்த காற்றை வழங்கும் மின்விசிறிகள் முறையாக செயல்படுகிறதா என்பதை சோதித்துக் கொள்வது அவசியமாகும். ஏனெனில், மின்விசிறி வழங்கும் காற்று தான், ரேடியேட்டர் வழியாக என்ஜின் சிஸ்டத்திற்கு சென்று வெப்பத்தை குறைக்கிறது. இவற்றில் ஏதேனும் பெரிய பிரச்சனை ஏற்பட்டாலோ அல்லது உங்களால் தீர்க்க இயலாத பிரச்சனையாக இருந்தாலோ அருகில் உள்ள கார் மெக்கானிக்கை தொடர்பு கொள்வது நல்லது.
டிரைவிங்கில் கொண்டுவர வேண்டிய மாற்றங்கள்: காரில் அதிக சுமைகளையோ அல்லது அதிக எண்ணிக்கையிலான பயணிகளையோ அழைத்து செல்ல வேண்டாம். காரின் எடை அதிகமாகினால், அதற்கேற்ப என்ஜினும் அதிக உழைக்க வேண்டிவரும். என்ஜின் அதிகமாக உழைத்தால், அதற்கேற்ப என்ஜின் சிஸ்டத்தில் இருந்து வெளியிடப்படும் வெப்பமும் அதிகமாக இருக்கும். இது என்ஜினின் செயல்படுதிறனை பாதித்து, காரின் மைலேஜையும் குறைக்கும் என்பதை மறவாதீர்கள்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் அவ்வப்போது நின்று, நின்று செல்ல வேண்டி இருந்தால் முன்னால் செல்லும் வாகனத்தில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியை பின்பற்றியப்படி செல்லவும். மிகவும் நெருக்கமாக பின்தொடர்ந்து சென்றால், சில நேரங்களில் சடர்ன் பிரேக் மற்றும் மிகவும் அழுத்தமான பிரேக் கொடுக்க வேண்டியிருக்கும். இது இரண்டுமே என்ஜினின் வேலையை அதிகப்படுத்தி, என்ஜினில் இருந்து அதிக வெப்பத்தை உமிழ வைக்கும்.
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் என்ஜினை மெதுவாக ஓடவிட்டு, ஆக்ஸலரேஷன் (Acceleration)-ஐ மென்மையாக அழுத்தி அதே என்ஜின் பவரில் காரை இயங்க வைக்க வேண்டும். முடிந்த அளவுக்கு பிரேக்கை பயன்படுத்தாமல், ஆக்ஸலரேஷனை குறைத்து காரின் வேகத்தை குறைக்கவும். கோடைக்காலத்தில் காரின் என்ஜினை அதிகமாக வேலை வாங்க கூடாது என்பதுதான் முதல் விதி ஆகும்.
இதற்காக நீங்கள் காரின் ஏசி (AC)-ஐ பயன்படுத்தாமல் கூட இருக்கலாம். ஆனால், வெயில் காலத்தில் கார் ஏசியை பயன்படுத்தாமல் தவிர்ப்பது கொஞ்சம் கஷ்டம் தான். சில நேரங்களில், ஜன்னல் கண்ணாடிகளை திறந்துக் கொண்டு, வெளிக்காற்றை பெறலாம். ஆனால், இவ்வாறு அனைத்து ஜன்னல் கண்ணாடிகளையும் திறப்பதால், காரின் ஏரோடைனாமிக்ஸ் (Aerodynamics) பண்பு மாறுப்படும் என்பதை மறவாதீர்கள். அதாவது, எதிர்காற்றினால் காரின் இயக்கம் தடுக்கப்படும்.
மற்ற டிப்ஸ்: முடிந்தவரையில், காரை நிழலான பகுதியில் பார்க் செய்யவும். இது என்ஜின் சூடாகுவதை தவிர்ப்பதுடன், கோடைக்காலத்தில் காரின் கேபினுக்குள் வெப்பம் அதிகரிப்பதையும் தடுக்கும். என்ஜின் சூடாகுவதை தடுக்க, என்ஜின் ஆயிலை அவ்வப்போது மாற்றுவது சிறந்தது ஆகும். ஆயிலை அவ்வப்போது மாற்றுவதன் மூலமாக, என்ஜினின் செயல்பாடு மேம்படுவதுடன் என்ஜின் சூடாகுவதும் குறையும்.
அதிக வெப்பம் காரின் என்ஜினை மட்டுமின்றி, காரின் பேட்டரியையும் சேதப்படுத்தக் கூடும். ஆதலால், அவ்வப்போது பேட்டரியை சரிப்பார்ப்பதுடன், பேட்டரியின் மின்சுமைகள் சரியான விகிதத்தில் உள்ளனவா என்பதையும் தகுந்த கருவிகளுடன் சோதனை செய்துக் கொள்வது அவசியமாகும். அதேபோல், காரின் ஏசி சிஸ்டத்தில் ஏதேனும் பாதிப்புகள் உள்ளனவா என்பதையும் அடிக்கடி சரிப்பார்க்கவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டிப்ஸ்களை எல்லாம் கோடைக்காலத்திற்கு முன்பே சரிப்பார்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில், அப்போதுதான் அசவுகரியமான சூழலில் சிக்குவதை தவிர்ப்பது மட்டுமில்லாமல், மெக்கானிக் ஷாப்புகளிலும் விரைவான பழுதுப்பார்ப்பு சேவையை பெறலாம். ஏனெனில், கோடைக்காலத்தின் மத்தியில் மேற்கூறப்பட்ட பிரச்சனைகளினால் அதிக கார்கள் மெக்கானிக் கடைகளில் நின்றிருக்கும் என்பதை மறவாதீர்கள்.


Click it and Unblock the Notifications








