மெக்கானிக் சொல்றத எல்லாம் கேட்காதீங்க... கார் டயர மாத்தனுமா வேணமானு எப்படிக் கண்டு பிடிக்கனும் தெரியுமா?
காருக்கான டயரை எப்பொழுது மாற்ற வேண்டும் என்ற குழப்பம் பலருக்கு இருக்கிறது. அதை இந்த பதிவில் தெளிவாகக் காணலாம்.
உங்கள் கார் பஞ்சராகி நீங்கள் பஞ்சர் கடைக்குச் சென்று பஞ்சர் போடச் சொல்லும் போது அவர் டயரே மொத்தமாகப் போய்விட்டது, டயரையே மாற்ற வேண்டும் என்று பெரிய குண்டையே தூக்கிப் போடுவார். ஆனால் நமக்கு டயரை பார்த்தால் நன்றாக இருக்கும்படி தான் தெரியும்.

இதனால் நமக்கு மெக்கானிக் மீது சந்தேகம் வரும். மெக்கானிக் ஏதோ டயரை விற்பனை செய்ய இப்படிச் செய்கிறாரோ எனத் தோன்றும், மெக்கானிக் சொல்வது நல்ல சஜசன் தானா அல்லது இதற்குப் பின்னால் நமக்குச் செலவு இழுத்துவிடச் சூழ்ச்சி ஏதாவது இருக்கிறதா என்ற குழப்பம் இருக்கும். இப்படியான சூழ்நிலைகளில் மெக்கானிக்கே சொன்னாலும் நீங்களே உங்கள் டயரை மாற்ற வேண்டிய சூழ்நிலை உண்மையிலேயே இருக்கிறதா என்பதை எப்படித் தெரிந்து கொள்ள வேண்டும் எனப் பார்க்கலாம்
பொதுவாக டயர்கள் தேய்மானாம் ஆகிவிட்டால் டயரை மாற்றப் பரிந்துரை செய்வார்கள். உங்கள் டயர் மாற்றவேண்டிய அளவிற்குத் தேய்மானம் ஆகிவிட்டதை அறிய டயர் தயாரிப்பு நிறுவனங்களே டயர் த்ரெட்களுக்கு இடையே த்ரெட் வேர் இண்டிகேட்டர் என்ற 1.5 மிமீ உயரம் கொண்ட ஒரு சிறிய பகுதி தான் உங்கள் டயரின் பட்டன்கள் அதை விட உயரமாக இருக்கும். உங்கள் டயர் தேய்மானம் ஆகிவிட்டால் அந்த த்ரெட் வேர் இண்டிகேட்டருக்கு நேராக அதாவது சமமாக பட்டன்கள் வந்துவிடும். அப்படி வந்துவிட்டால் நீங்கள் டயரை மாற்ற நேரம் வந்துவிட்டது என அர்த்தம்.
அதற்கு மேல் டயர் தேய்மானமாகி நீங்கள் ஓட்டினால் உங்களுக்கு வாகனத்தின் சஸ்பென்சன் பாதிக்கப்படும். வாகனத்தின் ரைடிங் குவாலிட்டியும் குறையும். அதே நேரத்தில் இது மட்டும் டயரை மாற்றுவதற்குக் காரணம் இல்லை. டயரின் வயதும் மிகவும் முக்கியம் ஒரு டயரின் ஆயுள் காலம் என்பது 6 வருடம் தான். அதனால் நீங்கள் காரை வாங்கி வெகு குறைவாகப் பயன்படுத்தி, த்ரெட் வேர் இண்டிகேட்டர் வரை கூட டயர் தேயாமல் இருந்தாலும் உங்கள் டயர் தயாரிக்கப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிவிட்டால் அதை மாற்ற வேண்டும்.
டயரின் சைடு வால் பகுதியில் டயர் தயாரிக்கப்பட்ட ஆண்டு அச்சாகியிருக்கும். இதைப் பார்த்து நீங்கள் அதிலிருந்து 6 ஆண்டுகள் ஆனதும் நீங்கள் டயரை குறைவாகப் பயன்படுத்தியிருந்தாலும் மாற்றுவது நல்லது. இப்படியாக மாற்றப்படவில்லை என்றால் திடீரென டயர் வெடிப்பது, அல்லது காற்று வேகமாகக் குறைவது போன்ற சம்பவங்கள் நடக்கும். இதனால் கார் விபத்தில் கூட சிக்க வாய்ப்புள்ளது.
இது போக டயரின் சைடு வால் பகுதி மிகவும் முக்கியம். இந்த பகுதியில் சேதமானால் உடனடியாக டயரை மாற்றிவிடுவது தான் சிறந்தது. குறிப்பாக ஏதாவது கூர்மையான ஊசி சைடு வால் பகுதியில் குத்தி பஞ்சராகிவிட்டால் டயரை மாற்ற மெக்கானிக்கே பரிந்துரை செய்வார்கள். அப்பொழுது டயரின் தேய்மானம் பற்றி எல்லாம் யோசிக்காமல் டயரை மாற்றிவிடுங்கள். டயரின் சைடு வால் பகுதி சேதமானாலும் டயரே வெடிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
இது எல்லாம் போக உங்களுக்கு டயர் பாதுகாப்பிற்கு ஒரு நல்ல டிப்ஸ் வேணுமா? உங்கள் காரின் டயரை ஒவ்வொரு 8000-10,000 கி.மீ பயணத்திற்கு ஒரு முறை டயரை ஒரு வீலிலிருந்து மற்ற வீலுக்கு மாற்றுவது அதாவது முன்பக்க உள்ள டயரை பின்பக்கம், அதே போல டயரை உள்பக்கத்தை வெளிபக்கமாகவும், வெளி பக்கத்தை உள்பக்கமாகவும் மாற்றிப் போட்டால் டயரின் உழைப்பு சிறப்பாக இருக்கும் அல்லது டயரின் ஒரு பகுதி மட்டுமே அதிக தேய்மானம் ஏற்பட்டு மற்ற பகுதி தேய்மானம் இல்லாமல் இருக்கும்.


Click it and Unblock the Notifications








