அதிகம் திருடுபோகும் கார்களும், திருட்டிலிருந்து கார்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளும்!
அதிகம் திருடுபோகும் கார்களும், திருட்டிலிருந்து கார்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகளையும் காணலாம்.
கார்களில் திருடுபோவதை தவிர்ப்பதற்கான, பல நவீன பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளுடன் அறிமுகம் செய்யப்பட்டு வந்தாலும், அதனையும் விஞ்சி திருடர்கள் லாவகமாக திருடிச் செல்கின்றனர்.
பெரும் முதலீடு செய்து வாங்கும் கார்களை பாதுகாப்பது உரிமையாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. குறிப்பாக, பெருநகரங்களில் கார் திருட்டு என்பது சர்வசாதாரணமாகிவிட்டது. இந்த நிலையில், நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பை, கார் திருட்டிலும் தலைநகரமாக விளங்குகிறது.
மும்பையில், அதிகம் திருடுபோகும் கார்கள் குறித்த விபரங்களை அம்மாநகர போலீசார் சமீபத்தில் வெளியிட்டனர். அதில், கடந்த ஆண்டு திருடு போனதில் டாப் - 10 இடங்களை பிடித்த கார் மாடல்கள் பற்றிய விபரங்கள் தெரியவந்துள்ளது. அத்துடன், கார்களை பாதுகாப்பதற்கான சில வழிமுறைகளயும் ஸ்லைடரில் காணலாம்.

10. வாடகை கார்கள்
என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், மும்பையில் வாடகை கார்களாக இயக்கப்படும் பத்மினி மற்றும் அம்பாசடர் கார்களை குறி வைத்து தூக்குகின்றனராம் திருடர்கள். எனவே, வாடகை கார்களை வைத்திருப்பவர்களுக்கு காரை பாதுகாப்பது சவாலாக இருக்கிறதாம். டீ குடிக்கும் நேரத்தில் கூட காரை இழக்கும் நிலை ஏற்படுகிறதாம்.

09. மாருதி 800
இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் கார்களில் பல கார்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. அதில் ஒன்று மாருதி 800. ஆம், திருடர்களின் இலக்கில் முக்கிய இடத்தில் மாருதி 800 காரும இருக்கிறதாம். மலிவு விலையில், எளிதாக விற்றுவிட முடியும் என்பது காரணமாக இருக்கலாம். எனவே, பழைய 800 கார் என்று அலட்சியமாக இருக்க முடியாது.

08. மாருதி எஸ்டீம்
பட்டியலில் மற்றொரு ஆச்சரியமூட்டும் மாடல் மாருதி எஸ்டீம். இடவசதி, ஓட்டுவதற்கு எளிமையான செடான் என்பதே, இந்த காருக்கு அதிக மதிப்பு இருப்பதற்கு காரணம். மேலும், மாருதி பிராண்டுக்குரிய மதிப்பும் இந்த காரை எளிதாக விற்கும் வாய்ப்பு கிடைப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

07. டாடா இண்டிகா
இந்த பட்டியலில் 7வது இடத்தில் டாடா இண்டிகா கார் இருக்கிறது. டாடா கார்களையும் குறைவான விலைக்கு எளிதாக விற்று விடும் வாய்ப்பு இருப்பது காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எனவே, டாடா இன்டிகா கார் வைத்திருப்பவர்களும் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறதாம்.

06. ஹோண்டா சிட்டி
எந்த தலைமுறை ஹோண்டா சிட்டி என்றாலும், பழைய கார் மார்க்கெட்டில் தனி மதிப்பு இருக்கிறது. எனவே, ஹோண்டா சிட்டி பழசோ, புதுசோ என்பதை பார்க்காமல், பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைப்பது அவசியம்.

05. டொயோட்டா குவாலிஸ்
சாகா வரம் பெற்ற மாடல். பல லட்சம் கிலோமீட்டர் ஓடிய குவாலிஸ் காருக்கு கூட மிகச்சிறப்பான மதிப்பு இருந்து இருக்கிறது. தோற்றம், இடவசதி, நம்பகமான எஞ்சின் போன்றவை இந்த காருக்கு இன்னமும் ஒரு தனி மதிப்பை கொடுத்து வருகிறது.

04. ஹூண்டாய் சான்ட்ரோ
வாடிக்கையாளர் மத்தியில் ஹூண்டாய் சான்ட்ரோ காருக்கு தொடர்ந்து சிறப்பான மதிப்பு இருந்து வருகிறது. பழைய கார் மார்க்கெட்டிலும் நல்ல விலைக்கு உடனடியாக விற்கும் வாய்ப்பு இருப்பதால், இந்த காரும் திருடர்களின் இலக்கில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

03. மஹிந்திரா பொலிரோ
விற்பனையில் முன்னிலை வகிக்கும் மஹிந்திரா பொலிரோவுக்கு பழைய கார் மார்க்கெட்டிலும் நல்ல மதிப்பு இருக்கிறது. எனவே, மஹிந்திரா பொலிரோ எஸ்யூவியை கண்டால், கட்டம் கட்டி தூக்குவதற்கு திருடர்கள் முனைப்பு காட்டுகின்றனர்.

02. செவர்லே தவேரா
இந்த பட்டியலில் ஆச்சரியமூட்டும் மற்றொரு மாடல் செவர்லே தவேரா. வாடகை கார் மார்க்கெட்டில் சிறப்பான மாடலாக வலம் வருகிறது. எனவே, பழைய கார் மார்க்கெட்டில் செவர்லே தவேராவுக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது.

01. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ
திருடர்களின் இலக்கில் முதன்மையான மாடல் மஹிந்திரா ஸ்கார்ப்பியோதான். கடந்த 2011ல் 133 ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகள் திருடுபோன நிலையில், கடந்த ஓர் ஆண்டில் 148 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யூவிகள் திருடு போயுள்ளனவாம். எனவே, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ வைத்திருப்பவர்களும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சரி, கார் திருடுபோவதை தவிர்ப்பது எப்படி என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

01. ஜிபிஎஸ் ட்ராக்கர்
காரில் ஜிபிஎஸ் ட்ராக்கர் கருவி பொருத்தப்பட்டிருப்பது அவசியம். இது கொஞ்சம் கூடுதல் செலவு பிடிக்கும் விஷயம்தான். ஆனால், பல லட்சம் முதலீடு செய்து வாங்கும் காரை, திருடு போனால் கார் எங்கிருக்கிறது என்பதை கண்டுபிடித்து மீட்பதற்கு உதவும்.

02. இம்மொபைலசர்
தற்போது அனைத்து கார்களும் இம்மொபைலசர் வசதியுடன் வருகிறது. இந்த வசதி இல்லாத காரில் உடனடியாக இம்மொபைலைசர் சாதனத்தை பொருத்திக் கொள்வது உத்தமம்.

03. சிம்பிள் வழி
காரில் அலாரம் இருந்தாலும், அதனை செயலிழக்க செய்வதை திருடர்கள் அறிந்துகொண்டுள்ளனர். எனவே, காரில் அலாரம் இருப்பது போன்ற ஸ்டிக்கரையோ அல்லது மின்னும் சிறிய சிவப்பு விளக்கு ஒன்றை பொருத்திவிட்டால், திருடர்கள் காரில் அலாரம் இருப்பதாக நினைத்து முயற்சியை கைவிடலாம். இது ஏமாற்று வித்தைதான்.

04. மறக்காதீங்க
பலர் ஸ்டீயரிங் வீலை லாக் செய்யாமலே சாவியை எடுத்துக்கொண்டு பூட்டி விடுகின்றனர். இது திருடர்கள் காரை எளிதாக திருடிச் செல்ல வாய்ப்பு ஏற்படுத்தும். ஸ்டீயரிங் வீல் லாக் போட்டுவிட்டு சாவியை எடுப்பது அவசியம். ஸ்டீயரிங் வீல் லாக்கிலிருந்து விடுவிக்க சிறிது நேரம் பிடிக்கும் என்பதால், திருடர்கள் முயற்சியை கைவிட வாய்ப்புகள் அதிகம். இதேபோன்று, பிரேக் பெடல், கியர் லிவர், ஸ்பேர் வீல்களுக்கு கூடுதலாக பூட்டு போடுவதும் நல்லது.

05. வின் நம்பர் ஸ்டிக்கர்
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், காரின் கண்ணாடிகளில் அந்த காரின் வின் நம்பர் கொண்ட ஸ்டிக்கர்களை ஒட்டி வைத்து விடுவர். ஒருவேளை, அந்த காரை திருடர்கள் திருடிச்சென்றால் கூட, அந்த ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட பாகங்களை மாற்றி, விற்பதற்கு நடைமுறையில் பல சிரமங்கள் இருப்பதால், திருடுவதை தவிர்ப்பர். இதுவும் ஒரு உபாயம்தான்.

06. விலையுயர்ந்த ஆக்சஸெரீகள்
காரை சாலையோரங்களில் தினசரி நிறுத்துபவர்கள், நைஸ் லைட் ஃபோர்ஸ் லேம்ப் எனப்படும் கூடுதல் முகப்பு விளக்குகளை பொருத்துவதை தவிர்க்கவும். படத்தில் நீங்கள் காணும் பொலிரோவில் இருந்த அந்த விளக்குகளை திருடர்களின் கபளீகரத்துக்கு ஆளானதுதான். எனவே, காரை நிறுத்தும்போது திருடர்களின் கண்களில் படாதவாறு, கோணத்தில் நிறுத்த வேண்டும். அல்லது சுவரையொட்டி நிறுத்தி வைப்பது உசிதம். எச்சரிக்கை தேவை.

07. முக்கிய ஆவணங்கள்
காரின் பதிவு ஆவணங்கள், இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை காரில் வைப்பதை தவிர்க்கவும். தினசரி காரை பூட்டும்போது கையில் வீட்டிற்கு எடுத்து வரவும். ஒருவேளை, காரை திருடினால், இந்த ஆவணங்களை வைத்து எளிதாக விற்பதற்கு வழி கிடைத்துவிடும்.

08. கவனம்
பொதுவாக வீட்டு போர்ட்டிகோ அல்லது கராஜில் காரை நிறுத்தி வைப்பது பாதுகாப்பானது. சாலையோரங்களில் நிறுத்துவோர், தெரு விளக்கு எரியும் இடத்தில் அல்லது ஜன நடமாட்டம் அதிகமிருக்கும் பகுதிகளில் நிறுத்தி வைப்பதுடன், அவ்வப்போது நம் வீட்டினர் கண்களில் படும்படியான இடத்தில் இருப்பதும் அவசியம்.

09. ஜன்னலை சரியாக மூடுங்கள்
கார் கண்ணாடி ஜன்னல்கள் மூடியிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டு காரை விட்டு நகர்ந்து செல்லுங்கள். கார் ஜன்னல் திறந்து வைத்து விட்டு சென்றால், திருடர்களை அழையா விருந்தாளி போல அழைப்பதற்கு வழி வகுக்கும்.

10. விலையுயர்ந்த பொருட்கள்
காருக்குள் விலையுயர்ந்த மியூசிக் சிஸ்டம் இருக்கும்போது கூடுதல் கவனம் தேவை. அதேபோன்று, லேப்டாப், மொபைல்போன் போன்ற சாதனங்களை காரில் விட்டுச் செல்வதை தவிர்ப்பது அவசியம். மேலும், அனைவரின் கண்படும் படி வைப்பதும் பிரச்னைக்கு வழிவகுக்கும்.

இதுவும் அவசியம்...
அட்லீஸ்ட் ஒரு கவரை போட்டு காரை மூடி வையுங்கள். தூசியிலிருந்து பாதுகாப்பதோடு, திருடர்களின் முயற்சியை தவிர்க்க உதவும். அத்துடன், இரவில் காரை மின் விளக்கு வெளிச்சத்தில் நிறுத்துவது கூடுதல் பயன் தரும்.


Click it and Unblock the Notifications








