கார் வாங்கும் போது இப்படியெல்லாம் சொல்லி புரளி கிளப்புவாங்க... ஆனா இது எதுவுமே உண்மையில்ல!
புதிதாக கார் வாங்கும் போது சிலர் வித விதமான விஷயங்களைச் சொல்லி புரளியைக் கிளப்புவார்கள். இவை எல்லாம் எந்த வித அடிப்படை ஆதாரங்களும் அற்றது தான். அப்படியாக கிளப்பப்படும் புரளிகள் என்ன? வாருங்கள் முழுமையாகக் காணலாம்

மிடில் கிளாஸ் மக்களைப் பொருத்தவரை கார் என்பது பெரும் கனவு தன் வாழ்நாளில் ஒரேயொரு சொந்த காரையாவது வாங்கிவிட வேண்டும் என சிறுக சிறுக பணத்தைச் சேமிக்கும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். நம்மில் பலரும் அவ்வாறு சேமித்தே கார் வாங்கியிருப்போம். அல்லது வாங்கும் திட்டத்தில் இருப்போம். இப்படியாக கார் வாங்கும் திட்டத்தில் இருக்கும் பலருக்குக் குறைந்த விலையில் வாங்கவோ அல்லது கார் வாங்கும் போது நஷ்டம் ஏற்படாமல் இருக்கவோ சில புரளிகளைக் கிளப்பி விடுவார்.

அப்படியான செய்திகள் பொய்யாக இருந்தாலும் அதை நம்பி பலர் அதற்கான முயற்சிப்பார்கள். இந்த செய்தியில் அப்படியாக நாம் கார் வாங்கும் போது கிளப்பப்படும் புரளிகளைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்.

மாத கடைசியில் கார் வாங்கினால் லாபம்
ஒருவர் கார் வாங்கும் போது மாத கடைசியில் கார் வாங்கினால் நல்ல லாபம் என சொல்லுவார்கள் அதற்கு காரணம். கார் விற்பனை மையங்களுக்கு ஒவ்வொரு மாதமும் விற்பனை டார்கெட் இருக்கும். அந்த டார்கெட்டை அவர்கள் பெரும்பாலும் நிறைவு செய்ய மாட்டார்கள். இப்படியாக நேரமான மாத கடைசியில் நாம் கார் வாங்கச்சென்றால் அவர்கள் எப்படியாவது காரை விற்றுவிட வேண்டும் என முடிந்தளவுக்குப் பணத்தைக் குறைப்பார்கள் இதனால் காரை மற்ற நாட்களில் வாங்குவதை விட மாத கடைசியில் வாங்கினால் குறைவாகக் கிடைக்கும் எனச் சொல்லுவார்கள்.

ஆனால் உண்மையில் கார்களின் விலையில் தள்ளுபடி வழங்கும் அதிகாரம் டீலர்களுக்கோ அதன் ஊழியர்களுக்கோ கிடையாது. மிக சொற்ப பணம் வேண்டுமானால் அவர்கள் தள்ளுபடி செய்யலாம் அதற்காக மாத கடைசி வரை காத்திருப்பது முட்டாள் தனம் தான்.

கடை அடைக்கும் நேரத்தில் டீல் பேசுவது
கார் ஷோரூம்களில் அது அடைக்கும் நேரத்திற்கு புக்கிங் செய்யச் சென்றால் பணத்தைக் குறைக்கலாம் எனச் சொல்லுவார்கள். அதாவது ஷோரூம் அடைக்கும் நேரத்தில் அதன் ஊழியர்கள் வீட்டிற்குச் செல்லும் அவசரத்தில் இருப்பார்கள் அப்பொழுது சென்று நாம் பேரம் பேசினால் அவர்களால் முடிந்த அளவு விலையைக் குறைத்துக் கொடுப்பார்கள் எனச் சொல்லப்படுகிறது. இதுவும் முயற்றிலும் பொய் அதாவது முன்னர் சொன்னது போல விலையைக் குறைத்து கொடுக்கும் அதிகாரிகள் ஊழியர்களுக்கோ டீலர்களுக்கோ கிடையாது.

அவர்கள் லாபத்தில் சொற்ப பணத்தைக் குறைக்கலாம். ஆனால் லட்சக் கணக்கில் பணம் கொடுத்து வாங்கும் கார்களுக்கு நூற்றுக்கணக்கில் பணத்தைக் குறைப்பது என்பது தேவையில்லாத ஒன்று. அதே போல இந்த முறையில் மற்றொரு உண்மையும் இருக்கிறது. இந்த நேரத்தில் சென்றால் ஊழியர்கள் வீட்டிற்குச் செல்லும் அவசரத்தில் இருப்பார்கள். அதனால் நீங்கள் வாங்கும் போது அதற்கான ஃபார்மானிலிட்டியை செய்யும் போது தவறுகள் ஏற்படலாம். அதனால் இந்த ஐடியாவை தவிர்க்கவும்.

மழை காலங்களில் விலை குறையும்
மழைக் காலங்களில் மக்கள் வெளியில் அவ்வளவாக வரமாட்டார்கள் குறிப்பாக நன்றாக மழை பெய்யும் காலங்களில் கார் ஷோரூம்கள் வாடிக்கையாளர்கள் இல்லாமல் காலியாக இருக்கும். அந்த நேரத்தில் அன்றைய டார்கெட்டை பிடிக்க ஷோரூம் ஊழியர்கள் எப்படியாவது காரை விற்க வேண்டும் என்ற மன நிலையில் இருப்பார்கள் அதனால் அன்று சென்று கார் வாங்கினால் விலையை அடித்துப் பேசி காரை வாங்க முடியும் எனச் சிலர் சொல்கிறார்கள்.

அதுவும் பொய். காரின் விலையை ஊழியர்களால் குறைக்க முடியாது. ஆனால் மழை காலங்களில் டீலர்களோ அல்லது கார் தயாரிப்பு நிறுவனங்களோ ஆஃபர்களை அறிவிக்கலாம். அந்த ஆஃபர்களில் காரை வாங்கலாமே தவிர மற்ற படி மழை என்பதாலோ, மற்ற வாடிக்கையாளர்கள் இல்லை என்பதாலோ, அல்லது டார்கெட்டை பிடிக்க வேண்டும் என்பதாலோ காரை குறைந்த விலையில் விற்பனை செய்யமாட்டார்கள்.

முழுவதும் பணமாகக் கட்டுவது
கார் வாங்குபவர்கள் பலர் இந்தியாவில் முழுவதுமாக பணம் கட்டி கார் வாங்குவதில்லை. மாறாக அவர்கள் வாகன கடன் அல்லது மற்ற வசதிகளைப் பயன்படுத்தியே கார்களை வாங்குகிறார்கள். இந்நிலையில் வாடிக்கையாளர்கள் மத்தியில் முழு பணத்தையும் மொத்தமாகக் கொடுத்து காரை வாங்கினால் விலையைக் குறைத்துத் தருவார்கள் எனச் சொல்லப்படுகிறது. இதுவும் பொய் இந்தியாவில் ரூ50ஆயிரம் பணத்திற்கு மேல் மொத்தமாக ஒரு விஷயத்தைப் பணமாகக் கொடுத்து வாங்க முடியாது.

ஷோரூம்களும் அதை ஏற்பதில்லை மாறாக ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை, செக் பரிவர்த்தனை, உள்ளிட்ட வழிகள் மூலமே காரை விற்பனை செய்கிறார்கள். இப்படியாகச் செய்வதாலும் விலையைக் குறைக்க முடியாது. லோன் போட்டாலும் சரி பணம் கொடுத்தாலும் சரி வாகனத்திற்கான பில் விலையில் மாற்றம் இருக்காது. ஆனால் வாகன கடன் வாங்குவது மூலம் அந்த கடனை திரும்ப அடைக்க வட்டி கட்டவேண்டும் முழுவதுமாக பணம் கொடுத்து வாங்கினால் அதைத் தவிர்க்க முடியும்.

சிவப்பு கலர் காருக்கு இன்சூரன்ஸ் அதிகமா?
சிவப்பு நிற காருக்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மற்ற கார்களை விட அதிகம் பணம் வசூலிக்கும் என ஒரு போலியான தகவல் பரவி வருகிறது. இது முற்றிலும் பொய் இன்சூரன்ஸ் நிறுவனங்களைப் பொருத்தவரை காரின் மாடல், வயது, இன்ஜின் அளவு, எந்த வருடம் வாங்கியது, என் விதமான பாடி கொண்டது போன்ற அம்சங்கள் தான் பார்க்கப்படும் மற்றபடி காரின் கலருக்கும் இதற்கும் சம்மந்தமே இல்லை.

இப்படியான புரளிகள் அதிகமாக பரவி வருவதால் சிவப்பு நிற கார்களை விற்கமுடியாமல் பல நிறுவனங்கள் திணறி வருகின்றன. சில வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் காரில் சிவப்பு நிற ஆப்ஷனையே இல்லாமல் வெளியிடும் சம்பவங்கள் கூட நிகழ்ந்துள்ளது.

இப்படியாக உங்கள் வாழ்வில் நீங்கள் கனவாக கட்ட ஒரு விஷயத்தை நினைவாக்கும் போது இப்படியான பல புரளிகள் கிளப்பி உங்களைக் குழப்புவார்கள் இதை எல்லாம் நம்ப வேண்டாம். இவை எல்லாம் எதற்கும் உதவாதவை. அதனால் உங்கள் கவனத்தை என்ன காரை வாங்க வேண்டும். உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற தரமான கார் எது? உங்கள் காரை வாங்கும் போது எதை எல்லாம் கவனிக்க வேண்டும் உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்துங்கள் இவ்வாறான புரளிகளைக் கிளப்புபவர்களை புறந்தள்ளுங்கள்


Click it and Unblock the Notifications








