பெட்ரோல்/ டீசல் கார் மாதிரி பயன்படுத்தலாம் எலக்ட்ரிக் காரை... இந்த டிப்ஸை எல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணா!!
எலக்ட்ரிக் வாகனங்கள் (Electric Vehicles) விற்பனை இந்தியாவிலும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இருப்பினும், விற்பனை வேகம் மெதுவாக உள்ளது என்றே சொல்ல வேண்டும். இதற்கு முக்கிய காரணம், நாடு முழுவதும் ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) நிலையங்கள் பரவலாக இல்லாதது ஆகும். அதாவது, பெட்ரோல் பங்க்களை போன்று ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் இன்னும் வரவில்லை.
இதனாலேயே எலக்ட்ரிக் வாகனங்களை பெரும்பாலானோர் தொலைத்தூர பயணங்களுக்கு பயன்படுத்துவது இல்லை. இருப்பினும், சில வழிமுறைகளை பின்பற்றினால் எலக்ட்ரிக் வாகனங்களையும் தொலைத்தூர பயணங்களுக்கு மட்டுமின்றி, ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் பயன்படுத்தலாம். அந்த வழிமுறைகள் என்னென்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

முடிந்தவரையில் பேட்டரி ரேஞ்சை அதிகப்படுத்தவும்: பெட்ரோல்/ டீசலை பெற முடியாத பகுதிகளில் செல்லும்போது காரின் மைலேஜ் (Mileage) விஷயத்தில் நாம் மிகுந்த கவனம் செலுத்துவோம். அதாவது, ஒவ்வொரு துளி பெட்ரோல்/ டீசலையும் வீணடிக்க விரும்ப மாட்டோம். அதுபோன்று, எலக்ட்ரிக் வாகனங்களையும் தொலைத்தூர பயணங்களுக்கு கொண்டு செல்கிறீர்கள் என்றால், அதன் ரேஞ்சை மிச்சப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
அதாவது, பயணம் முழுவதும் முடிந்தவரையில் ஒரே அளவிலான சீரான வேகத்தில் செல்ல முயற்சிக்கவும். அதேபோல், முடிந்தவரையில் ரீஜெனரேட்டிவ் பிரேக்கை பயன்படுத்த முயற்சிக்கவும். எலக்ட்ரிக் காரை ஓட்டும்போது ஆக்ஸலரேஷனை விட்டு விட்டு கொடுக்க வேண்டாம். மேலும், அதிக சுமைகளை காரில் ஏற்றி செல்வதை தவிர்ப்பதுடன், காரின் டயர்களில் உள்ள காற்றழுத்தத்தையும் தொடர்ந்து பராமரிப்பது அவசியமாகும்.

கூட்டம் இல்லாத நேரங்களில் காரை சார்ஜ் செய்யவும்: சார்ஜிங் நிலையத்தில் எலக்ட்ரிக் காரை சார்ஜ் செய்கிறீர்கள் என்றால், மதிய வேளை, இரவு வேளை போன்ற கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களில் காரை சார்ஜ் செய்யலாம். நீண்ட தொலைவிற்கு பயணம் செய்கிறீர்கள் என்றால், நாளில் எந்த நேரத்தில் காரை சார்ஜ் செய்வது என்பதை உங்களால் எளிதாக தீர்மானிக்க முடியும். அதற்கேற்ப, செல்லும் வழித்தடத்தில் எங்கெங்கு ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் உள்ளன என்பதை முன்கூட்டியே தேர்வு செய்வது நல்லது.
காருக்கான மொபைல் செயலியை பயன்படுத்தவும்: இன்றைய கால மாடர்ன் கார்களில் டாஷ்போர்டில் வழங்கப்படும் இன்ஃபோடெயின்மெண்ட் திடை ஆனது மொபைல் போன் (Mobile Phone) உடன் இணைக்கும் வசதி உடன் உருவாக்கப்படுகின்றன. இதன் மூலமாக, அருகில் இவி ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்கள் எங்கு உள்ளன, தற்போது சென்றுக் கொண்டிருக்கும் வேகத்திலேயே சென்றால் எவ்வளவு காரில் ரேஞ்சை பெறலாம் என்பது உள்ளிட்ட விபரங்களை மொபைல் போனிலேயே பெறலாம்.

அவசர காலத்திற்கு எப்போதும் தயாராக இருக்கவும்: பொதுவாகவே தொலைத்தூர பயணங்களின் போது வழக்கத்தை விடவும் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் எலக்ட்ரிக் வாகனங்களில் பயணம் செய்யும்போது இன்னும் கவனமாக இருத்தல் வேண்டும். ஏனெனில் என்ன தான் ரேஞ்சை மிச்சப்படுத்தும் வகையில் பார்த்து, பார்த்து வாகனம் ஓட்டினாலும் எலக்ட்ரிக் வாகனங்களில் நீண்ட தொலைவு பயணம் எனில் அவசர காலத்தில் அழைப்பதற்கான மொபைல் போன் எண், காரை வாங்கிய டீலர்ஷிப் ஷோரூமின் தொடர்பு எண்கள் உள்ளிட்டவற்றை காகிதத்தில் எழுதி வைத்திருத்தல் அவசியம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் வாகனங்களில் தொலைத்தூர பயணங்களை எப்போது அதிகமாக மேற்கொள்ள ஆரம்பிக்கிறோமோ அப்போதுதான் எலக்ட்ரிக் வாகனங்கள் நாடு முழுவதும் பரவலாக பயன்பாட்டிற்கு வந்துவிட்டது என அர்த்தம் ஆகும். இதற்கு மக்களாகிய நமது முயற்சி மட்டுமின்றி, அரசாங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் முயற்சிகளும் அவசியமாகும்.
இந்தியாவில் குறிப்பிட்ட சில பகுதிகளில் எலக்ட்ரிக் வாகனங்களில் சுங்கச்சாவடிகளை கடப்பதற்கான கட்டணத்தில் அரசு சார்பில் சலுகைகள் வழங்கப்படுகின்றன என்றாலும், விரைவாக சார்ஜ் செய்யக்கூடிய ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களை நாடு முழுவதும் அதிக இடங்களில் கொண்டுவந்தால்தான் மக்களிடம் எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









