பெட்ரோல் செலவுக்கே மாச சம்பளம் எல்லாம் காலியாகுதா? இதை பண்ணுங்க ஏகப்பட்ட பணம் மிச்சமாகும்!
உங்களுக்காக பெட்ரோலை தண்ணீர் போல குடிக்கிறதா இதனால் உங்களுக்கு பெட்ரோல் போடும் செலவு அதிகமாக இருக்கிறதா நாம் கார் ஓட்டும் போது சில சின்ன விஷயங்களை மாற்றினாலே உங்களுக்கு மாதந்தோறும் ஆகும் பெட்ரோல் செலவில் பெரும் பணத்தை மிச்சப்படுத்த முடியும். அதை பற்றி விரிவாக காணலாம் வாருங்கள்.
கார் பயன்படுத்தும் பலருக்கும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனை எரிபொருள் செலவுதான். கார் விலையை விட எரிபொருள் செலவு பார்த்து தான் பலர் கார் வாங்கவே தயங்கி வருகின்றனர். இன்று இந்தியாவில் பெட்ரோல் லிட்டருக்கு சுமார் ரூ100 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. ஒரு நாளுக்கு 50 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டும் என்றாலே ரூபாய் 500 முதல் 700 வரை பெட்ரோல் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை தான் இருக்கிறது.

இதனால் பலர் தங்கள் மாத வருமானத்தில் குறிப்பிட்ட ரூபாயை பெட்ரோல் செலவுக்காகவே ஒதுக்கி வருகின்றனர். ஆனால் நாம் கார் ஓட்டும் போது செய்யும் சின்ன சின்ன தவறுகள் இப்படியான அதிக பெட்ரோல் செலவை ஏற்படுத்துகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? பலருக்கு வாகனம் ஓட்டும்போது இருக்கும் சில மோசமான பழக்கங்கள் வாகனத்தின் மைலேஜ் பாதிக்கிறது. இப்படியாக வாகனத்தின் மைலேஜ் பாதிக்கும் டிரைவிங் பழக்கங்கள் குறித்து தான் இங்கே பார்க்கப் போகிறோம்.
ரெகுலர் வாகன பராமரிப்பு: வாகனங்கள் நீங்கள் பயன்படுத்த பயன்படுத்தும்போது அது தன்மையை மாற்றிக் கொண்டே இருக்கும். அதனால் நீங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் வாகனத்தை பராமரிக்க வேண்டும். குறிப்பாக வாகனத்தின் டயர் பிரஷர் ஏர் ஃபில்டரின் தூய்மை உள்ளிட்ட விஷயங்களை பராமரித்தாலே பல முக்கியமான பிரச்சனைகள் தீர்ந்துவிடும். இதனால் காரின் மைலேஜ் குறையாமல் இருக்கும் தேவையில்லாமல் அதிகம் பெட்ரோல் செலவு ஆவது குறையும்.

ரூட் பிளானிங்: நீங்கள் ஒரு பயணத்தை துவங்கும் போது எந்த பகுதி வழியாக பயணித்தால் சிறப்பாக இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு அந்த பாதையில் பயணிப்பது உங்களுக்கு தேவையில்லாத பெட்ரோல் செலவை குறைக்கும். டிராபிக் நிறைந்த சாலைகளை தவிர்ப்பது மோசமான நிலையில் இருக்கும் சாலைகளை தவிர்ப்பது இப்படியான விஷயங்களை பார்த்து அந்த பகுதி வழியாக பயணித்தால் உங்களுக்கு பெட்ரோல் செலவு குறையும்.
ஆக்ஸிலரேஷன் மற்றும் பிரேக்கிங்: கார் ஓட்டும் பலருக்கு இருக்கும் மோசமான பழக்கம் சாலையில் வாகனம் எதுவும் இல்லை என்றால் வேகமாக செல்வதும் அதே நேரம் சாலை சந்திப்பு வரை வேகமாக சென்று விட்டு அங்கு சடன் பிரேக் பிடிப்பதும் ஒரு வழக்கமாக கொண்டுள்ளனர்.

கார் திடீரென வேகம் பிடித்தாலும் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் கார் திடீரென பிரேக் அடித்தாலும் அதிகமான பெட்ரோல் செலவு இருக்கும். அதனால் ஸ்மூத்தான டிரைவிங்கை எப்பொழுதும் கடைபிடிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் இஞ்சின் பவர் அதிகமாக பயன்படுத்தப்படும். இதனால் உங்கள் காரில் செலவாகும் பெட்ரோல் வீணாகாமல் தடுக்க முடியும்.
வேக கட்டுப்பாடு: நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் பலர் வேகமாக சென்றால் தான் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு விரைவாக செல்ல முடியும் என பலர் அதிக வேகத்தில் செல்கிறார்கள். ஆனால் கார் அதிக வேகத்தில் செல்லும்போது அதிகமான எரிபொருளை செலவு செய்யும் அதே நேரத்தில் குறைவான வேகத்திலும் தொடர்ந்து சென்றாலும் அதிக எரிபொருள் செலவாகும். மிதமான வேகத்தை எப்பொழுதும் கடைபிடிப்பது நல்லது. அதுதான் உங்களது பெட்ரோல் செலவை குறைவாக வைத்திருக்கும்.

எடையை குறியுங்கள்: உங்கள் வாகனத்தின் மைலேஜ் என்பது உங்கள் வாகனத்தின் எடையை பொறுத்ததாக இருக்கிறது. அதிக நபர்களை ஏற்றி செல்லும் போது மைலேஜ் குறைவாகவும் குறைவானவர்கள் இருக்கும்போது மைலேஜ் அதிகமாகவும் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் தேவையில்லாத எடைகளை உங்கள் காருக்குள் வைத்திருப்பதை தவிர்ப்பது நல்லது. இதனால் கொஞ்சம் தான் மைலேஜ் வேறுபடும் என்றாலும் நாளடைவில் இதை கணக்கிட்டுப் பார்த்தால் மிகப்பெரிய தொகை நமக்கு மிச்சமாகும்.
தேவையான நேரத்தில் ஏசியை பயன்படுத்துங்கள்: வாகனத்தின் ஏசி என்பது இன்ஜினின் மூலம் பெறப்படும் திறனில் இயங்கக் கூடியதாகும். இதனால் வாகனத்தில் ஏசி இயங்கும்போது இன்ஜினின் திறன் முழுமையாக கார் பயணிப்பதற்காக செலவாகாமல் போகும் . இதனால் தேவையான இடங்களில் மட்டும் ஏசியை பயன்படுத்துவது நல்லது. குறிப்பிட்டு சொல்லப் போனால் சிட்டி பயன்பாட்டிற்கு உள்ளே ஏசியை பயன்படுத்தாமல் லாங் டிரைவில் ஏசியை பயன்படுத்தினால் நிச்சயம் அது நல்ல மைலேஜ் தரும்.
கார் தேர்வு முறை: ஒவ்வொரு காரும் தயாரிக்கப்படும் போதும் அதன் நோக்கம் என்பது அந்த கார் தயாரிப்பு நிறுவனத்தால் முடிவு செய்யப்படுகிறது. சில கார்கள் தயாரிக்கப்படும் போது அதிக சொகுசு வசதியை நோக்கமாகக் கொண்டு தயாரிப்பார்கள். சில கார்களை அதிக வேகம் செல்லும் காராக தயாரிப்பார்கள். இப்படியாக சில கார்கள் அதிக மைலேஜ் தரும் கார்களாக தயாரிக்கிறார்கள். அதிக மைலேஜ் தரும் கார்களை தேர்வு செய்தால் உங்களுக்கு பெட்ரோல் செலவு குறையும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலை அதிகமாக இருக்கும் நிலையில் அதை நாம் பார்த்து பார்த்து செலவு செய்தால் தான் பணம் வீணாகாமல் சேமிக்கப்படும். இதனால் நீங்கள் கார் ஓட்டும்போது செய்யும் மேலே சொன்ன சின்ன சின்ன தவறுகளை திருத்திக் கொண்டாலே பெரும் பணத்தை நீங்கள் எரிபொருள் செலவில் இருந்து மிச்சப்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications









